Published:Updated:

தொடர் அமளி... மக்களவையில் இருந்து அ.தி.மு.க எம்.பி-க்கள் 26 பேர் சஸ்பெண்ட்! 

தொடர் அமளி... மக்களவையில் இருந்து அ.தி.மு.க எம்.பி-க்கள் 26 பேர் சஸ்பெண்ட்! 
தொடர் அமளி... மக்களவையில் இருந்து அ.தி.மு.க எம்.பி-க்கள் 26 பேர் சஸ்பெண்ட்! 

தொடர் அமளிகளில் ஈடுபட்டதாக மக்களவை நடவடிக்கைகளில் அ.தி.மு.க எம்.பி-க்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தடை விதித்துள்ளார். 

மேக்கே தாட்டு அணை உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தொடர்களாகவே, இந்த அமளி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதேபோல் மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர்களும் அமளிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கூச்சல் குழப்பங்கள் இன்றைய அமர்விலும் தொடர்ந்தது. குறிப்பாக, ரஃபேல் விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் முக்கிய கேள்விகளை எழுப்பினார். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் அவரைப் பேச விடாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

இதனால் கடுப்பான ராகுல்காந்தி, ``என்னை விவாதிக்கவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்புகின்றனர். ஏன் இப்படிச் செய்கிறீர்கள், பிரதமர் மோடியைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா? தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்’’ என்று காட்டமாகக் கூறினார். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். தொடர்ந்து பேப்பர் தாள்களைச் சபாநாயகரை நோக்கி எறியவும் செய்தனர். 

இந்த நிலையில், அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததாக அ.தி.மு.க எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். வரும் 5 அமர்வுகளில் அ.தி.மு.க எம்.பி-க்கள் 26 பேர் பங்கேற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க, அ.தி.மு.க எம்.பி-க்கள் இன்று மட்டும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ``மேக்கே தாட்டு பிரச்னை குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மத்திய அரசு எந்தப் பதிலும் இதுவரை அளிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களையும் ஒரேபோல் பார்க்க வேண்டும். மேக்கே தாட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வை மத்திய அரசு மதிக்க வேண்டும். காவிரி விவகாரம் மிக முக்கியமான பிரச்னை. அது குறித்து எந்தப் பதிலும் தர மறுக்கிறார்கள். சபாநாயகருக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது. ஆனால், பேப்பர் தாள்களை வீசிய சம்பவம் இதற்கு முன் நடக்காதது கிடையாது" என்று கூறினார். பேட்டியளித்த பின் பதாகைகளைத் தூக்கிக்கொண்டு பிரதமர் மோடியைச் சர்வாதிகாரி எனக் கூறி அ.தி.மு.க எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர்.