Published:Updated:

``ஆளுநர் என்பவர் ராஜ்நிவாஸில் மட்டும்தான் அமர்ந்திருக்க வேண்டுமா...?” சீறும் கிரண் பேடி

``ஆளுநர் என்பவர் ராஜ்நிவாஸில் மட்டும்தான் அமர்ந்திருக்க வேண்டுமா...?” சீறும் கிரண் பேடி
``ஆளுநர் என்பவர் ராஜ்நிவாஸில் மட்டும்தான் அமர்ந்திருக்க வேண்டுமா...?” சீறும் கிரண் பேடி

``ஆளுநர் என்பவர் ராஜ்நிவாஸில் மட்டும்தான் அமர்ந்திருக்க வேண்டுமா..” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும்தான் மோதல் நிலவி வருகிறது. சிறிது நாள்களிலேயே பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் தவிர்த்து அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கிரண் பேடிக்கு எதிராகக் காங்கிரஸுடன் கோத்தன. இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாளை 4-ம் தேதி நாடாளுமன்றத்தின் முன்பு புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த அறிவிப்பின்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரி ராஜ்நிவாஸில் கிரண் பேடி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவநீதிதாஸ், ஸ்ரீதர், காவல்துறை அதிகாரி பாஸ்கர், கட்டுப்பாட்டு அலுவலர் ஆஷா குப்தா என மொத்தம் 5 துணைநிலை ஆளுநர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் குடியரசுத் தலைவர் நியமித்தாரா? இவர்கள் அனைவரும் ஆளுநர் கிரண் பேடிக்காக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் மூன்று மாதத்தில் இந்த நான்கு துணை நிலை ஆளுநர்கள் எங்கே போவார்கள் என்று தெரியவில்லை. அதற்கான விடை விரைவில் கிடைத்துவிடும். வாட்ஸ்அப் தொழில்நுட்பம் அவர்களிடம் மாட்டிக்கொண்டு விழித்துக்கொண்டிருக்கிறது. இங்கு அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனங்கள் நடந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. மக்கள் மத்தியில் ஆளுநரே வெளியேறு என்ற கோஷம் அதிகரித்து வருகிறது” என்றார்.

இந்த நிலையில், நேற்று கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் கிரண்பேடி, அங்கிருந்த அதிகாரிகளிடம், ``கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைவரையும் சென்றடையும் வகையில்  மேம்படுத்த வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் விவசாயக் கூலித் தொழிலாளிக்கும்கூட துறையின் அனைத்துத் திட்டங்களும் பயன்தர வேண்டும். சில அதிகாரிகளுக்கு இதுகுறித்த பயிற்சிகள் தேவைப்படுகிறது. துறையின் இணையதளம் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் கால்நடை வளர்ப்புத் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதில் விவசாயிகளுக்கு சிரமங்கள் இருக்கின்றன. இயக்குநர் அலுவலக வளாகம் தூய்மையாக இல்லை. அலுவலகத்தையாவது குறைந்தபட்சம் வெள்ளையடித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நான்  மறுபடியும் பிப்ரவரி 2-ம் தேதி ஆய்வுக்கு வருவேன்” என்றார்.

ஆய்வுக்குப்பின் வெளியே வந்த அவரிடம், ``ராஜ் நிவாஸில் நீங்கள் உட்பட 5 துணை நிலை ஆளுநர்கள் பணியாற்றுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளாரே” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``துணை நிலை ஆளுநர் மாளிகையில் நான் மட்டும் இல்லை. அங்கிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் மிகச்சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வருகின்றனர். அங்கிருக்கும் அதிகாரிகளும் என்னுடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 14 மணி நேரம்  பணியாற்றுகின்றனர். காலை 6 மணி தொடங்கி இரவு 11.30 மணி வரை மக்களுக்காக அயராது உழைக்கின்றனர். இதெல்லாம் எதற்காக? கிரண் பேடி என்ற தனிப்பட்ட ஒரு நபருக்காகவா?

இல்லை. சமூகத்தில் அடித்தட்டில் வாழும் பெண்கள், குழந்தைகள் என அவர்களின்  முன்னேற்றத்துக்காக. இதற்காகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைக்கூட அதிகாரிகள் தியாகம் செய்கிறார்கள். யாரும் இங்கு நிரந்தரம் இல்லை. மனித வாழ்வும் அப்படித்தான். இதற்கு நான் உட்பட யாரும் விதிவிலக்கல்ல. நாளை என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. நான் ராஜ்நிவாஸில் மட்டும்தான் அமர்ந்திருக்க வேண்டுமா? அப்படியானால் பணி நியமனம், இடமாற்றம், மக்கள் நலத் திட்டத்துக்கான கோப்புகளை எதற்காக என்னிடம் அனுப்ப வேண்டும்? புதுச்சேரியின் நிர்வாகியாக நான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றவரிடம், டெல்லியில் நாளை ”கிரண் பேடியே திரும்பிப் போ” என்று அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற இருப்பது பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், ``அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு திரும்பி வர வேண்டும். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.