Published:Updated:

''நான் செத்துக்கொண்டிருக்கிறேன்..!'' 'மாவோயிஸ்ட்' பத்மா #VikatanExclusive

நான் அனுமதிக்கப்பட்டதைக்கூடத் தாமதமாகத்தான் விவேக்கிற்குத் தெரியப்படுத்தினார்கள். விவேக் வந்து பார்த்தபோது, வலியால் துடித்துக்கொண்டிருந்தேன். `நான் செத்துக்கொண்டிருக்கிறேன்' என்று சொன்னதும் விவேக் கலங்கிவிட்டார்.

''நான் செத்துக்கொண்டிருக்கிறேன்..!'' 'மாவோயிஸ்ட்' பத்மா #VikatanExclusive
''நான் செத்துக்கொண்டிருக்கிறேன்..!'' 'மாவோயிஸ்ட்' பத்மா #VikatanExclusive

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மாவோயிஸ்ட் பயிற்சியில் ஈடுபட்டு, பெண்கள் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்தார் பத்மா. பொடா சட்டத்தில் இதற்காக 2002-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து, 2006-ல் ஜாமீனில் வெளியே வந்த பத்மா 2010-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார் என்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாகவே, பத்மாவுக்குத் தீவிர இதயத்துடிப்பு (svt) இருக்கிறது. அதற்குத் தொடர் சிகிச்சையும் எடுத்து வருகிறார். இந்நிலையில்தான், கடந்த 7-ம் தேதி (7.12.18) பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பத்மாவுக்கு, கடந்த 10-ம் தேதி சிறையில் நெஞ்சுவலி வந்ததும், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் மற்றும் இடதுசாரி அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனடிப்படையில், சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனையில் பத்மாவுக்குச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில், புழல் சிறையில் இருந்த பத்மாவை, அவரது வழக்கறிஞர் ஜீவா மூலமாகத் தொடர்புகொண்டோம்.

கேள்வி: போராட்டக் களத்துக்கு முன் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?

விசாகப்பட்டினத்தில் சாதாரணக் குடும்பம் எங்களுடையது. பாட்டு, நடனம் என்று எல்லாச் சிறுவர்களையும் போலவே வளர்ந்துவந்தேன். என்னுடைய பெரியப்பா காக்ரலா, மக்கள் கலை இயக்கம் என்ற அமைப்பை நடத்திவந்தார். மார்க்சிய லெனினிய சித்தாந்தங்களை ஏற்று, தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி வந்தவர். பலருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த காக்ரலா, என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஐ.டி.ஐ. முடித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு வந்தேன்.

மாவோ சித்தாந்தத்தின் மீது எப்படி ஈர்ப்பு வந்தது?

தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை வந்தபோது, மார்க்சிய லெனினிய அமைப்பில் உள்ள தோழர்களின் அறிமுகம் கிடைத்தது.  `பெண்ணுரிமைக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து நாங்கள் ஒன்றிணைந்து போராடி வந்தோம். மாவோவின் சித்தாந்தத்தை அப்போதுமுதல் தொடர்ந்து பின்பற்றிவருகிறேன்.

ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகப் பொடா சட்டத்தில் கைதானது எப்படி?

ஆயுதப் பயிற்சியில் ஈடுபடவில்லை. அப்படிச் சொல்லப்பட்டது. இங்கு மாவோவின் சித்தாந்தங்களை ஏற்று வாழ்ந்தாலே மாவோயிஸ்ட் என்கிறார்கள். மக்கள் யுத்தம் என்ற பெயரில் மக்களை ஒன்றுதிரட்டி, அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தைத்தான் முன்னெடுத்து வந்தோம். ஆனால், ஆயுதப் பயிற்சி என்று முத்திரை குத்தப்பட்டு பொடா சட்டத்தில் கைது செய்தனர்.

பிணையில் வந்தபிறகு ஏன் தலைமறைவு?

2006-ல் பிணையில் வந்ததும், `புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்' தொடங்கப்பட்டது. பெண்கள் விடுதலைக்கான மாநாடு ஒன்றைச் சென்னையில் நடத்தத் திட்டமிட்டோம். மாவோயிஸ்ட் என்று தடை விதித்தது தமிழக அரசு. நீதிமன்றத்துக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இந்த நிலையில்தான், எனக்கு இதயத்துடிப்பு நோய் அதிகரித்தது. தொடர் சிகிச்சையில் இருந்தேன். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இதற்கு மேல் என்னால் பேச முடியாது.

சிகிச்சைக்காகத்தான் சரணடைந்தீர்கள் என்று சொல்லப்படுகிறதே?

நீதிமன்றத்தில் ஆஜராகாததால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன். இதனால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை. நாளுக்குநாள் வலி அதிகரித்து வந்ததால், தொடர் மருத்துவ சிகிச்சையும் தேவைப்பட்டது. 

தீவிர இதயத்துடிப்பு நோய் எத்தனை வருடங்களாக இருக்கிறது?

கடந்த 2009 முதல் தொடர்ந்து இந்த வலி அதிகரித்து வருகிறது. எனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை போலீஸூம் நம்ப மறுத்தது. சாதாரணமாக ஒருவருக்கு நிமிடத்துக்கு எழுபதிலிருந்து எண்பது முறை இதயம் துடிக்கும். ஆனால், எனக்கு வலி ஏற்படும் போது அதிகபட்சமாக ஒருநிமிடத்துக்கு இருநூறு தடவை இதயம் துடிக்கும். அப்படியே குறைந்து நாற்பதுக்குக்கீழ் வரும். அப்போது என்னால் எதுவுமே செய்ய முடியாது. வலியால் துடிதுடித்துப் போவேன். அருகில் யாராவது இருந்தால்தான் மாத்திரையே உட்கொள்ள முடியும்.

சிறைக்குள் மருந்து எடுத்துச் செல்ல முடிந்ததா?

நீதிமன்றத்தில் சரணடைந்ததும், நான் எடுத்துக்கொள்ளும் மருந்துகளைச் சிறைக்குள் எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், மாத்திரைகளைச் சிறையின் மெயின்கேட்டில் வைத்திருப்பதால், வலி வந்ததும் அங்கு சென்று சாப்பிடுவதற்குள் உயிர்போகும் அளவுக்கு வலி அதிகரித்திருக்கும்.

சிறையில் உங்களுக்கு மருத்துவ வசதி கொடுக்கப்பட்டதா?

சிறை மருத்துவர்கள் முறையான சிகிச்சை கொடுத்தார்கள். ஆனால் தொடர் சிகிச்சையில் இருக்கவேண்டும் என்று சிறை மருத்துவர்கள் சொன்னதால், ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.

ஸ்டான்லி மருத்துவமனையில் உங்களுக்கு முறையான சிகிச்சைக் கொடுக்கப்பட்டதா?

டிசம்பர் 7-ம் தேதி சரணடைந்ததும் சிறைக்கு மாற்றப்பட்டேன். அதன்பிறகு கடந்த 10-ம் தேதி சிறையில் முதன்முறையாக வலி அதிகமானது. ஸ்டான்லிக்குக் கொண்டு செல்வதை என் கணவருக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. முதல் நாள் ஐ.சி.யூ போன்ற வார்டில் இருந்தேன். வலி இருக்கும்போதே, வேறு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டேன். இந்த வலி ஏற்படும் போது, மூச்சுத் திணறலும் ஏற்படும். ஃபேன் வசதிகூட இல்லாத அறையில் இருந்ததால், மூச்சுத்திணறல் அதிகமானது. இதை மருத்துவர்களிடம்  சொன்னதும், சிறைக் கைதிகளுக்கான வார்டுக்கு மாற்றப்பட்டேன். எப்போது வலி வரும் என்று தெரியாத தீவிர இதயத்துடிப்பு நோய் உள்ள ஒருவரைக் கைதிகளுக்கான வார்டில் வைத்துதான் சிகிச்சையளித்தார்கள். காலை உணவு 11 மணிக்குத்தான் கொடுக்கிறார்கள். திரவ உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பால் கேட்டால், அதுவும் கொடுப்பதில்லை.

உங்கள் கணவர் விவேக்கை மருத்துவமனைக்குள் அனுமதித்தார்களா?

மருத்துவமனையில் எனக்குக் காவலுக்கு நிறைய போலீஸ் இருக்கிறார்கள். என்னைப் பார்க்க வருபவர்கள், சிறையில் மனு போட்டு மருத்துவமனைக்கு வந்து பார்க்க வேண்டும். என் கணவரைக் கூட அருகில் விடவில்லை. 5 நிமிட அனுமதி மட்டுமே கொடுத்தார்கள். நான் அனுமதிக்கப்பட்டதைக் கூடத் தாமதமாகத்தான் விவேக்கிற்குத் தெரியப்படுத்தினார்கள். விவேக் வந்து பார்த்தபோது, வலியால் துடித்துக்கொண்டிருந்தேன். `நான் செத்துக்கொண்டிருக்கிறேன்' என்று சொன்னதும் விவேக் கலங்கி விட்டார். வலி வரும் நேரத்தில் கூட ஒத்தாசைக்கு யாராவது வேண்டும். தூக்கிவிடக்கூட யாரும் இல்லை. அருகில் உள்ள காவலர்களைக் கூப்பிட்டால், `அது எங்கள் வேலை இல்லை' என்று சொல்கிறார்கள். 

மருத்துவமனைக்கும் சிறைக்கும் ஏன் அடிக்கடி மாற்றப்பட்டீர்கள்?

கடந்த 13-ம் தேதி சிகிச்சை முடிந்தது என்று சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அன்று மாலையே மீண்டும் வலி அதிகரிக்க, உடனடியாகப் புழல் சிறையிலிருந்து ஸ்டான்லிக்குக் கொண்டுவரப்பட்டேன். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் டிஸ்சார்ஜ். ஆனால், வலி அப்படியேதான் இருந்தது. மீண்டும் 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டேன். புழலுக்கும் ஸ்டான்லிக்கும் சென்று வருவதிலேயே இன்னும் வலி அதிகரிக்கிறது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தால், எனக்குப் பிணை கிடைக்கும் என்று நினைத்து இப்படிச் செய்கிறார்களோ என்னவோ. எனக்குப் பிணை வேண்டாம் என்றுதான் சரணடைந்தேன். இதைக்கூட யாரும் புரிந்துகொள்ளவில்லை. மக்களுக்காகப் போராடினால் இதுதான் கதிபோல.