Published:Updated:

விருது பெறும் அளவுக்கு என்ன செய்தார்? - விருதுநகர் கலெக்டருக்கு எதிராக எழும் சர்ச்சை

விருது பெறும் அளவுக்கு என்ன செய்தார்? - விருதுநகர் கலெக்டருக்கு எதிராக எழும் சர்ச்சை
விருது பெறும் அளவுக்கு என்ன செய்தார்? - விருதுநகர் கலெக்டருக்கு எதிராக எழும் சர்ச்சை

இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள 115 மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

விருது பெறும் அளவுக்கு என்ன செய்தார்? - விருதுநகர் கலெக்டருக்கு எதிராக எழும் சர்ச்சை

சுகாதாரம், கல்வி, வேளாண்மை, அடிப்படை கட்டமைப்பு, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் வளர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர், ராமநாதபுரம் உட்பட இந்தியா முழுவதும் 115 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தி முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்த மாவட்டங்களை வளர்ச்சியின் அடிப்படையில் தரவரிசைப்படி பட்டியல் வெளியிட்டு நிதி ஆயோக் அமைப்பு ஒவ்வொரு மாதமும் கண்காணித்து வந்தது. தற்போது இந்தப் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

அதன்படி, விருதுநகர் முன்னேறும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா கடந்த டிச. 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டெல்லிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சிவஞானம் இந்திய துணைக் குடியரசுத் தலைவரிடம் மாற்றத்தின் சாதனையாளர் விருது வாங்கிக் கொண்டிருந்தார். நான் அழைத்து வந்தவருக்கு விருது கிடைத்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமையாக கூறினார்.

மாவட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் ஆட்சியருக்கு எந்த அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுந்துள்ளது.

விருது பெறும் அளவுக்கு என்ன செய்தார்? - விருதுநகர் கலெக்டருக்கு எதிராக எழும் சர்ச்சை

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் கூறும்போது, ``இந்தத் திட்டம் கொண்டு வந்தபோது கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் மாவட்டம் எந்த நிலையில் உள்ளது. அதை எப்படி முன்னேற்ற வேண்டும் என்ற எந்தவித திட்டமிடலும் இல்லை. எப்போதும்போலதான் இப்போதும் மாவட்டத்தின் நிலை உள்ளது. 2 மாதங்களுக்கும் மேலாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுகமாவும் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வேலையின்றி தவித்து வருகின்றனர்.

பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது சமூக, பொருளாதார நிலையில் நமது மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர வளர்ச்சியடைந்ததாக சொல்ல முடியாது. ஆனால், சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்ற விவரமே எங்களுக்குத் தெரியவில்லை'' என்றார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் கூறும்போது, ``விருதுநகர் மாவட்டம் 10, 12-ம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஆனால், இன்னும் மாணவர்களின் இடைநிற்றல் இங்கே இருக்கவே செய்கிறது. மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளாக உள்ள திருச்சுழி, காரியாபட்டி போன்ற பகுதிகளில் இன்னும் சாலை வசதிகூட போதிய அளவில்

விருது பெறும் அளவுக்கு என்ன செய்தார்? - விருதுநகர் கலெக்டருக்கு எதிராக எழும் சர்ச்சை

இல்லை. அருப்புக்கோட்டை, ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கைத்தறி, நெசவு ஆகிய தொழில்கள் நலிவடைந்துள்ளன. ஏற்கெனவே சிவகாசிப் பகுதியில் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த தீப்பெட்டி ஆலைகளில் ஆட்குறைப்பு செய்தனர். தற்போது 2 மாதங்களுக்கும் மேலாகப் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு கூலி வேலைகளுக்காகச் சென்று கொண்டிருக்கின்றனர். மக்களுக்குத் தேவையான எந்தத் திட்டங்களையும் ஆட்சியர் செயல்படுத்தவில்லை. மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை கணினியில் ஏற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கலாம். இல்லையெனில் தென்னிந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்துக்கு விருது கொடுக்க வேண்டும் என்பதற்காகவோ அரசியல் காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என்றார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் வைரமுத்து கூறும்போது, ``விருதுநகர் மாவட்டம் கல்வியில் முன்னேறியுள்ளது. ஆனால் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்துக்குப் பள்ளி ஆசிரியர்கள் தான் கடுமையான மனஉளைச்சலுக்கு மத்தியில் உழைத்துள்ளனர். பள்ளி அரையாண்டுத் தேர்வு முடிந்து மீண்டும் பள்ளியில் திறந்துவிட்டது. ஆனால் மாணவர்களுக்கு 2-ம் பருவத்தில் வழங்க வேண்டிய சீருடைகள் இன்னும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையிலான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் எந்த மாவட்டத்திலும் நடைபெறவில்லை. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மாதம்தோறும் நடைபெறுகிறது. மற்றபடி கல்விக்கென சொல்லிக் கொள்ளும்படியாக ஆட்சியர் எந்தப் பணிகளையும் செய்யவில்லை. எந்த அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது என்றே தெரியவில்லை” என்றார்.