Published:Updated:

``எனக்கு தி.மு.க-விலிருந்து அழைப்பு வருகிறது!" - நெகிழும் நாஞ்சில் சம்பத்

தி.மு.க-வின் அனைத்து மட்டங்களிலிருந்தும் எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. `நீங்கள் உங்களது முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும். மீண்டும் தாய்மடிக்கே தாவி வரவேண்டும்' என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

``எனக்கு தி.மு.க-விலிருந்து அழைப்பு வருகிறது!" - நெகிழும் நாஞ்சில் சம்பத்
``எனக்கு தி.மு.க-விலிருந்து அழைப்பு வருகிறது!" - நெகிழும் நாஞ்சில் சம்பத்

தீவிர அரசியலிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத், தற்போது சினிமாவில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், இலக்கிய மேடைகள், அரசியல் கட்சித் தோழமைகளின் திருமண விழாக்களில் தலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார், நாஞ்சில் சம்பத். இந்த நிலையில், அ.ம.மு.க பிரமுகர் திருமண விழாவுக்காகக் கோவை வந்திருந்த அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அவர், சினிமா தவிர, அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., பி.ஜே.பி. உள்ளிட்ட கட்சிகள் குறித்த கேள்விகளுக்கும் சுடச்சுடப் பதிலளித்தார்.

``அரசியல் டு சினிமா எப்படி இருக்கிறது?"

``கட்சியில், அரசியலிலிருந்துதான் நான் விலகியிருக்கிறேன். தத்துவ அரசியலிலிருந்து நான் விலகவில்லை. கட்சி என்கிற எல்லையைக் கடந்து, அரசியல் என்கிற கோட்டைத் தாண்டி, தமிழை ஒன்றிணைக்கிற எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன். மற்றபடி, வேறு எந்த மாற்றமும் இல்லை".

``இனி, கட்சி அரசியலில் உங்களைப் பார்க்க முடியாதா?"

``கட்சி அரசியல் வேண்டாம் என்றுதான் விலகிவிட்டேன். ஆனால், மூன்று மாநிலங்களில் வீழ்த்தப்பட்ட பி.ஜே.பி-யை நாடாளுமன்றத் தேர்தலிலும் வீழ்த்துவதற்காக ஏதாவது ஒரு மேடையிலிருந்து எனது குரல் ஒலிக்கும். அதற்காக ஏதாவது ஒரு கட்சியில் இணைந்துதான் எதிர்க்க வேண்டும் என்றில்லை. நாஞ்சில் சம்பத் காணாமல் போய்விடவில்லை. எங்கே இருந்தாலும் வகுப்புவாதத்துக்கு எதிராக நான் தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டேதான் இருப்பேன்".

``பி.ஜே.பி மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?"

``பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கிவிட்டார். இந்திய ரூபாய்க்கு எந்தச் சந்தையிலும் மதிப்பு கிடையாது. கருத்துச் சுதந்திரத்தை கல்லறைக்கு அனுப்பிவிட்டார். நாட்டைத் தரைமட்டமாக்கிய மத்திய மோடி அரசை, தூக்கி எறிய வேண்டியது அவசியம். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும்".

``தி.மு.க கூட்டணியில் இடம்பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனவே?"

``பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா லட்சியங்கள் வெல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். அ.தி.மு.க., பி.ஜே.பி-யிடம் அடிமையாக இருக்கிறது. தி.மு.கதான் பி.ஜே.பி-க்கு எதிராகப் போருக்குத் தயாராகியுள்ளது. ஆயுதங்கள் கூர் தீட்டப்பட்டுவிட்டன. தேதியை அறிவிப்பது மட்டும்தான் மிச்சம். தி.மு.க-வின் அனைத்து மட்டங்களிலிருந்தும் எனக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. `நீங்கள் உங்களது முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும். மீண்டும் தாய்மடிக்கே தாவி வரவேண்டும்' என்றெல்லாம் கூறி வருகின்றனர். அவர்களிடம், `யோசிக்கிறேன்' என்று பதில் சொல்லியிருக்கிறேன். ஆனால், நான் தி.மு.க-வில் இணைவதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில், தி.மு.க வெல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது உறுதி".

``அ.ம.மு.க-வில் என்னதான் நடக்கிறது?"

``அ.ம.மு.க-வின் தலைவருக்கும், ஜனநாயகத்துக்கும் மிகத்தொலைவு. அதனால்தான், அங்கிருந்து நான் வெளியில் வந்தேன். அங்கு ஜனநாயகமே இல்லை. அதன் வளர்ச்சி இனி கஷ்டம்தான். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை".

``அ.தி.மு.க., இனி என்னாகும்?"

``அ.தி.மு.க என்ற ஒரு கட்சி இனி இருக்காது".

``சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது?"

``நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன், `எல்.கே.ஜி' படத்தில் நடித்து முடித்துவிட்டேன். அடுத்ததாக, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் `நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு' என்ற படத்திலும் மேலும், இரண்டு படங்களிலும் நடிக்கவுள்ளேன்.