Published:Updated:

“திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்புகள் உள்ளன!”- வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்

“திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்புகள் உள்ளன!”- வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்
“திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்புகள் உள்ளன!”- வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. `கஜா புயலால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள திருவாரூர் பகுதி மக்களுக்கு இன்னும் புயல் நிவாரணப் பொருள்களோ, உதவித்தொகையோ முழுமையாகப் போய்ச் சேராத நிலையில், இடைத்தேர்தலை உடனடியாக  நடத்தக் கூடாது' என்று காவிரி டெல்டா விவசாயிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தலை ஒத்திவைக்கக் கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

திருவாரூர் தொகுதியைச் சார்ந்த மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு ஆஜராகி, ``கஜா புயலால் திருவாரூர் தொகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்துள்ளனர். உடனடியாகத் தேர்தல் நடத்தினால் இந்தத் தொகுதியில் பெருவாரியான மக்களால் முழுமையாகத் தேர்தலில் பங்கேற்க முடியாது. எனவே, இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்”  என வாதங்களை முன்வைத்தார். அதை விசாரித்த நீதிபதிகள், ``இந்த வழக்கு குறித்த மனுவை முதலில் தாக்கல் செய்யுங்கள். அதன் பிறகு, அந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொள்வது பற்றி விசாரிக்கப்படும்” என்றனர். 

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு  முன்னிலையில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ள மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்திடம்  சில  கேள்விகளை முன்வைத்தோம்…

``இடைத்தேர்தலைத் தள்ளி வைக்கச் சொல்வதற்கு, என்னென்ன வாதங்களை முன்வைக்க உள்ளீர்கள்?”

``முதற்காரணம், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து அந்தப் பகுதி மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. அந்தப் பகுதி மக்களில் பலர் வாக்காளர் அடையாள அட்டைகள், வாக்காளர் அடையாளச் சீட்டுகளை இழந்துள்ளனர். அவர்களிடம் தேர்தல் நடத்தி என்ன பயன்? புயல் ஏற்படுத்திச் சென்றுள்ள தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரமே சீரழிந்துள்ள இந்த நேரத்தில் இடைத்தேர்தல் வைத்தால் பொதுமக்களால் முழுமையாகத் தேர்தலில் பங்கேற்க முடியாது. அதுமட்டுமன்றி, திருவாரூர்த் தொகுதி மக்கள் பெருவாரியானோர் விவசாயப் பெருங்குடி மக்கள். அவர்களால் கொண்டாடப்படும் முதன்மையான திருவிழா பொங்கல். எனவே, இடைத்தேர்தல் காலத்தில் அரசு கடுமையான நெருக்கடிகளை விதிக்கும். இதனால் அந்தப் பகுதி மக்களால் பொங்கல் விழாவை முழுமையாகக் கொண்டாட முடியாது. தவிர, புயல் நிவாரணப் பொருள்களும் முழுமையாகச் சென்றடையாத நேரத்தில் தேர்தல் நடந்தால் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி, நிவாரண நிதி என ஏமாற்றி ஓட்டுக்குப் பணப்பட்டுவாடா செய்ய நேரிடும். இதுபோன்ற தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன”

``உங்கள் வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுப்பதற்குக் காரணம் என்ன?”

``இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எங்களால் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளுக்குள் எந்த அளவுக்குச் செயல்பட முடியும் எனத் தெரியவில்லை. எனவே, இந்த மனுவில் உரிய முகாந்திரம் இருந்தால் அவசர வழக்காக விசாரிக்க எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். அந்த வழக்கு எப்படியும் அடுத்தநாள் விசாரணைக்கு வரும். 

``இதற்கு முன்னால் நீங்கள் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி, வழக்குத் தொடர்ந்து  எப்போதாவது தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதா?”

``திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே, 2010-ம் ஆண்டு பென்னாகரத்தில் இடைத்தேர்தல் பொங்கல் நேரத்தில் நடைபெறுவதாக இருந்தது. பொங்கல் பண்டிகையை வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபடலாம் எனக்கருதித் தேர்தலை ஒத்திவைத்தனர். அதேபோல் ஒரு நடைமுறையைத் திருவாரூர் இடைத்தேர்தலிலும் எடுக்க முடியும்”.

``இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்?”

``உச்ச நீதிமன்றத்திலும் திருவாரூர் இடைத்தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி, மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கொண்டுவந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பையும். உயர் நீதிமன்றத்தில் உள்ள என்னுடைய வழக்கின் தீர்ப்பையும் வைத்துத்தான் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த தெளிவான முடிவுக்கு வரமுடியும்”.