Published:Updated:

திருவாரூரில் களமிறங்குவாரா மு.க. அழகிரி? - அவசர ஆலோசனையில் ஆதரவாளர்கள்

மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டை ரசிக்காத கட்சிக்காரர்கள்தான் அழகிரியை நிற்கச் சொல்லி ஃபோகஸ் செய்கிறார்கள்.

திருவாரூரில் களமிறங்குவாரா மு.க. அழகிரி? - அவசர ஆலோசனையில் ஆதரவாளர்கள்
திருவாரூரில் களமிறங்குவாரா மு.க. அழகிரி? - அவசர ஆலோசனையில் ஆதரவாளர்கள்

`உன்னை மதிப்பவர்களுக்கு மலராய் இரு. உன்னை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இரு’ -  இதுதான் மு.க.அழகிரியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ். 

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, பருவமழையைக் காரணம் காட்டி தள்ளிவைத்திருந்தது தேர்தல் ஆணையம். தற்போது திடீரென திருவாரூக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் சிலர். கஜா புயல் பாதிப்பால், விழுந்து கிடக்கும் மரங்கள் சரி செய்யப்படாதால், திருவாரூரில் தினம் ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. `நிவாரணத் தொகை தரப்படவில்லை என்று மக்கள் கொதித்துப்போயிருக்கிற இந்த நேரத்தில்... இடைத்தேர்தல் தேவையா?' என்று எதிர்க்கட்சிகள் கேட்க ஆரம்பித்துள்ளன. 

திருவாரூர் தொகுதியில் சுமார் 2,50,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கருணாநிதி இறந்த பிறகு, உடனடியாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், மு.க. அழகிரி அவரது சொந்த ஊருக்கு நேரில் சென்றார். திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அங்கே வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து உளவுத்துறை போலீஸார் திகைத்தனர்.  

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் வரை மு.க.அழகிரி காத்திருந்தார். `ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்லி தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டார். ஆனால், இதற்கு எந்தவித பதிலையும் ஸ்டாலின் சொல்லவில்லை. இதனால் கோபமான அழகிரி, `திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும்' என்று காத்திருந்தார். அதற்குள்ளாக தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வார் ஸ்டாலின் எனவும் எதிர்பார்த்தார். இன்றுவரை கட்சியில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்தநிலை தொடருவதை அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் விரும்பவில்லை. கட்சியிலிருந்து அழகிரி நீக்கப்பட்டபோது கட்சியின் விதிப்படி நீக்கத்துக்கான கடிதத்தைக்கூட அவருக்கு இன்னும் அனுப்பவில்லை. இதை கட்சியின் சீனியர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் சுட்டிக்காட்டியும் ஸ்டாலின் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், தி.மு.க தலைமைக்கு சில விஷயங்களைப் புரிய வைப்பதற்காக திருவாரூரில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட நினைக்கிறாராம் அழகிரி. அதேநேரம், தற்போது கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள ஸ்டாலின், தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு, திருவாரூரில் போட்டியிடுவார் என்கிற வதந்தி முதலில் பரவியது. அடுத்து, கருணாநிதியின் மகள் செல்வி திருவாரூரில் போட்டியிடுவார் என மற்றொரு தகவல் பரவியது. மூன்றாவதாக, `உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார்' என்றார்கள். ஆனால், உதயநிதி தற்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார். அவர் இப்போதைக்கு போட்டியிடும் எண்ணத்திலும் இல்லை. எனவே, தி.மு.கழக திருவாரூர் மா.செ பூண்டி கலைவாணனுக்கே சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 


 

இதுபற்றி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருணாநிதி குடும்பத்து நண்பர் ஒருவரிடம் கேட்டபோது,  ``மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டைப் ரசிக்காத கட்சிக்காரர்கள்தான் அழகிரியை நிற்கச் சொல்லி ஃபோகஸ் செய்கிறார்கள். திருவாரூரில் பிறந்தவர் அழகிரி. தற்போது, மாற்றுக்கட்சியிலிருந்து தி.முக-வுக்கு வருகிறவர்களில் ஆரம்பித்து யார் யாரையோ கட்சிக்குள் புதிதாகச் சேர்க்கிறார் ஸ்டாலின். இந்தக்கட்சிக்காக தென்மண்டலச் செயலாளராக இருந்த அழகிரியை மட்டும் சேர்த்துக்கொள்ள அவர் மறுக்கிறார். 2009-ல் தென் மாவட்டங்களில் 10 தொகுதிகளில் 9 எம்.பி. சீட்டுகளை ஜெயித்துக்கொடுத்தவர் அழகிரி. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மதுரை எம்.பி-யாகவும் ஜெயித்தவர்.

ஜெயலலிதா காலத்தில் அழகிரியையும் அவரது குடும்பத்தினரையும் மையமாக வைத்து போடப்பட்ட ஏராளமான வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அண்மையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஐ.பெரியசாமி மேடையில் இருந்தபோதே, இரு கோஷ்டியினர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். தென்மாவட்டத்தில் கட்சி நிர்வாகம் தாறுமாறாக கிடக்கிறது. அதை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு வலிமையான நிர்வாகிகள் தேவைப்படுகின்றனர். மீண்டும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக அழகிரியைச் சேர்த்துக்கொள்வதில் என்ன தவறு?'' என்றவர், `` திருவாரூரில் அழகிரி போட்டியிட்டால் தி.மு.க ஒட்டு கணிசமாகப் பிரியலாம். அ.தி.மு.க, அ.ம.மு.க...என்று இரண்டாகப் பிரிந்து கிடக்கும்போது, தி.மு.கழகமும் பிரிய வேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பு நினைக்கிறது’’ என்கிறார் நிதானமாக. 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிளோ, `` அழகிரிக்கு வாய்ஸ் இல்லை. அவரையெல்லாம் திருவாரூர் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஸ்டாலின் யாரை நோக்கி கை நீட்டுகிறாரோ... அவர்தான் வேட்பாளர். கட்சிக்குத் தலைவர் ஆனதும், ஸ்டாலின் சந்திக்கிற முதல் தேர்தல் என்பதால், பம்பரமாய் சுழன்று கட்சிக்காரர்கள் தேர்தல் வேலை பார்ப்பார்கள். திருவாரூரில் வெற்றியைத் தக்கவைப்போம்'' என்கிறார்.