Published:Updated:

`தலைமையை விமர்சிக்கிறார் பொன்முடி!’ - ஸ்டாலினிடம் கொளுத்திப் போட்ட தி.மு.க மா.செ-க்கள்

`தலைமையை விமர்சிக்கிறார் பொன்முடி!’ - ஸ்டாலினிடம் கொளுத்திப் போட்ட தி.மு.க மா.செ-க்கள்
`தலைமையை விமர்சிக்கிறார் பொன்முடி!’ - ஸ்டாலினிடம் கொளுத்திப் போட்ட தி.மு.க மா.செ-க்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் தன்னையும் மீறி எ.வ.வேலு செயல்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `தனக்கு எதிராக சதிவேலை செய்கிறார்கள்' என்ற எண்ணம் பொன்முடி மனதில் ஏற்பட்டுவிட்டது.

தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை, தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என அ.ம.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். `செந்தில் பாலாஜியை இழுத்ததுக்குப் பதிலடியாக இதை நாம் செய்ய வேண்டும்' எனத் தினகரனிடம் வலியுறுத்தியுள்ளனர் அக்கட்சி நிர்வாகிகள். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், `என்னென்ன கேள்விகளை எழுப்ப வேண்டும்?' என்பதை விளக்கிக் கூறுவதற்காக இந்தக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் பொன்முடியும் `விக்ரவாண்டி' ராதாமணியும் கலந்துகொள்ளவில்லை. கடந்த சில வாரங்களாக தி.மு.க தலைமையோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார் பொன்முடி. இதன் தொடர்ச்சியாக ஸ்டாலின் நடத்தும் கூட்டங்களையும் அவர் புறக்கணித்து வருகிறார். ``கருணாநிதி மறைவுக்குப் பிறகு, பொருளாளர் மற்றும் முதன்மைச் செயலாளர் பதவிகளுக்கு யார் வருவார்கள் என்ற விவாதம் கிளம்பியது. இந்தப் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட சிலர் முயற்சி செய்து வந்தனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கட்சியின் சீனியர்களான துரைமுருகனுக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் பதவி வழங்கப்பட்டது. இப்படியொரு போட்டியை ஏற்படுத்தியதால் எ.வ.வேலு மீது கோபத்தில் இருந்தார் பொன்முடி. தி.மு.க-வில் வேலுவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் அவர் ரசிக்கவில்லை" என விவரித்த அறிவாலய நிர்வாகி ஒருவர், 

``கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி நடந்த தி.மு.க மா.செ-க்கள் கூட்டத்தையும் பொன்முடி புறக்கணித்துவிட்டார். அதேநாளில் நடந்த பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிக்காகவும் அவர் சென்னைக்கு வரவில்லை. மேலும், விழுப்புரம் வடக்கு மா.செ-வாக இருக்கும் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தானின், இல்லத் திருமண விழாவுக்கு ஸ்டாலின் அப்பாயின்மென்டை வாங்கிக் கொடுத்தார் எ.வ.வேலு. இதில் பொன்முடி படு அப்செட். விழுப்புரம் மாவட்டத்தில் தன்னையும் மீறி எ.வ.வேலு செயல்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `தனக்கு எதிராக சதிவேலை செய்கிறார்கள்' என்ற எண்ணம் பொன்முடி மனதில் ஏற்பட்டுவிட்டது. அதனால் கட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கிறார். சொல்லப்போனால், தலைமையை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியதை ஸ்டாலின் கவனத்துக்குச் சிலர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பொன்முடி மீது ஸ்டாலினுக்கு எந்தவித கோபங்களும் இல்லை. கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதையே அவர் விரும்புகிறார்" என்றார் விரிவாக. 

தி.மு.க தலைமை மீது பொன்முடி அதிருப்தியில் இருப்பதைக் கவனிக்கும் அ.ம.மு.க நிர்வாகிகள், இதுகுறித்து தினகரனிடம் பேசியுள்ளனர். `கருணாநிதி மரணம் அடைந்த நாளிலிருந்தே பொன்முடியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அவரை நம்பக்கம் கொண்டு வரும் வேலைகளில் இறங்கலாம். செந்தில்பாலாஜியை பறித்துக்கொண்டு, நமக்கு அதிர்ச்சி கொடுத்ததைவிட அவர்களுக்கு நாம் பேரதிர்ச்சி கொடுக்க வேண்டும்' என நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த தினகரனோ, `இல்லை. பொன்முடி நம்பக்கம் வர மாட்டார். அவரிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம். அமைதியாக இருங்கள்' எனக் கூறிவிட்டார். இந்தப் பதிலில் அ.ம.மு.க நிர்வாகிகள் சமாதானமடையவில்லை. 

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய பொன்முடி தரப்பினர், `இயற்கை வைத்திய சிகிச்சைக்காக கேரளா சென்றிருக்கிறார். தலைமை மீது அவருக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை' என்கின்றனர். 
 

அடுத்த கட்டுரைக்கு