மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)

என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)

“என்னைப்போல ஒரு எம்.பி-யும் இல்லை!”

#EnnaSeitharMP
#MyMPsScore

க்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையின் சொந்த மாவட்டம் கிருஷ்ணகிரி. அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. இருவருக்கும் ஏழாம் பொருத்தம். இதில், தனக்கு விசுவாசியாகவும் தம்பிதுரைக்குப் போட்டியாகவும் முனுசாமியால் உருவாக்கப்பட்டவர் அசோக்குமார். அ.தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராக இருந்த அசோக்குமாரை, தன் முயற்சியால் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு சீட் பெற்றுக்கொடுத்து வெற்றியும் பெறவைத்தார் முனுசாமி. வெற்றிபெற்ற அசோக்குமார், கிருஷ்ணகிரி தொகுதிக்கு செய்தது என்ன? கிருஷ்ணகிரி தொகுதியை வலம்வந்தோம். 

கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி-யான வெற்றிச்செல்வன், ‘‘ஜோலார்பேட்டை - ஓசூர் ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால், ரயில் பாதை புதர் மண்டிக்கிடக்கிறது. நான் எம்.பி-யாக இருந்தபோது, ‘இந்தப் பாதையில் மீண்டும் ரயில் இயக்கப்பட வேண்டும்’ என்று அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமாரைச் சந்தித்து முறையிட்டேன். அந்த முயற்சியைத் தொடர்ந்திருந்தால், வெற்றி கிடைத்திருக்கும். அசோக்குமார் செய்யவில்லை.

கிருஷ்ணகிரி வழியாகச் செல்லும் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னையிலும் எம்.பி அக்கறைக் காட்டவில்லை. இங்கே மா, மலர், காய்கறி சாகுபடி கணிசமாக நடைபெறுகிறது. அவற்றைப் பதப்படுத்தி வைப்பதற்கு, குளிர்பதனக் கிடங்குகள் இல்லை. கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரியும் ஓசூரில் பி..எஃப் அலுவலகமும் கொண்டுவருவதாகச் சொன்ன அசோக்குமார் அதை நிறைவேற்றவில்லை. கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர் பகுதிகளில் படித்த இளைஞர்கள் பலர் திருப்பூர், பெங்களூருவுக்கு வேலைத்தேடிச் செல்கிறார்கள். தொகுதிக்குள் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ‘ஓசூரில் ஐ.டி பார்க் அமைக்க வேண்டும்’ எனக் கோரிக்கை எழுந்தது. ஆனால், ஒரு சிறு தொழிற்சாலையைக்கூட அசோக்குமாரால் கொண்டுவர முடியவில்லை’’ என்றார்.

என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)

‘‘ஓசூர் தொடங்கி சிங்காரப்பேட்டை வரை தென் பெண்ணை ஆற்றில் வருடம் முழுவதும் ஓரளவுக்குத் தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. உலகம், ஆழியாழம், வானிஒட்டு ஆகிய இடங்களில் தென்பெண்ணை ஆறு இரு மலைகளுக்கிடையே ஓடுகிறது. இந்த இடங்களில் அணை கட்டினால் கிருஷ்ணகிரி மாவட்டம் தண்ணீர், மின்சார தேவைகளில் தன்னிறைவு பெறும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2,000 ஏரிகள் உள்ளன. ஆனால், அதற்கான இணைப்பு வாய்க்கால்கள் இல்லை. இதுபற்றி பலமுறை     எம்.பி-யைச் சந்தித்து மனு அளித்தும் பயனில்லை. கிருஷ்ணகிரி நகர்ப் பகுதி அருகிலேயே டோல்கேட் இருப்பதால், விவசாயிகளும் பொதுமக்களும் கிருஷ்ணகிரி நகரத்துக்குள் வருவதற்குச் சுங்கவரி செலுத்த வேண்டியுள்ளது. டோல்கேட்டை 10 கி.மீ தூரத்தில் உள்ள குருவரப்பள்ளிக்கு மாற்றச்சொல்லி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட மா சாகுபடி, தற்போது ஒரு லட்சம் ஏக்கராகக் குறைந்துவிட்டது. இதைப் பற்றி எம்.பி எந்தக் கவலையும் படவில்லை’’ என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம கவுண்டர்.

பர்கூர் ஜவுளி விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி சண்முகம், ‘‘பர்கூர் நகரத்தின் மக்கள் தொகை பத்தாயிரம்தான். ஆனால், 1,500 ஜவுளிக் கடைகள் இருக்கின்றன. தினமும் குறைந்தபட்சம் மூன்று கோடி ரூபாய்க்கும், பண்டிகை நேரங்களில் நாளொன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் வருகின்றனர். எனவே, பைபாஸ் வழியாகச் செல்லும் வாகனங்கள், பர்கூர் பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. அதை அவர் செய்து கொடுக்கவில்லை. ‘ஜவுளி பூங்கா கொண்டுவருவேன்’ என்றார். அதையும் நிறைவேற்றவில்லை’’ என்றார்.

‘‘ஊத்தங்கரையில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் அதிகம். இவர்கள் தினக்கூலிகளாகவும், நாடோடிகளாகவும் பெங்களூரு, திருப்பூர் போன்ற ஊர்களுக்குச் செல்கிறார்கள். இதைத் தடுப்பதற்காக கடந்த காலத்தில், 1,600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. இதில் தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து, நிரந்தர வேலைவாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். ஆனால், எம்.பி அசோக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரானைட், கல் குவாரிகள் செயல்படுகின்றன. அனுமதி பெறாத கிரானைட் மற்றும் கல்குவாரிகள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மலைகளைக்கூட தகர்க்கிறார்கள். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்  கண்டுகொள்வதில்லை. எம்.பி-யும் பாராமுகமாக இருக்கிறார்’’ என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம்.

தளி தொகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய அவைத் தலைவர் நாகராஜ், ‘‘மலைகள் சூழ்ந்த பகுதி தளி. மஞ்சு, பிலிக்கல், உளிபண்டா போன்ற பல மலைக் கிராமங்களுக்கும் சாலை வசதி இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜவளகிரி, தேவர்பெட்டா, மாடக்கல், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் யானைகள் தாக்கி 25-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். ‘மலைக் கிராமங்களுக்குச் சாலை வசதியும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ள மலைக் கிராமங்களுக்கு மின்சார வேலியும் போட்டுத் தருவேன்’ என அசோக்குமார் வாக்குறுதி கொடுத்தார். நாலரை ஆண்டுகள் போனதுதான் மிச்சம்’’ என்றார். 

“இந்தியாவிலேயே அதிக மலர் சாகுபடி செய்யும் பகுதி ஓசூர். சாமந்தி, மேரிகோல்ட், நிரபல், பட்டன் ரோஸ் எனப் பல வகையான மலர்கள் விளைகின்றன. நாள் ஒன்றுக்கு நூறு டன் பூக்கள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இங்கு குளிர்பதன வசதியிருந்தால், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். தனியார் மார்க்கெட்டில்தான் நீண்ட காலமாக மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பண மதிப்பிழப்புக்குப் பிறகு, ஓசூரில் 600-க்கும் மேற்பட்ட சிறு, குறு வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தொழிலாளர் நல அலுவலகம் இல்லை. மலர் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல... தொகுதி மக்களுக்கும் அசோக்குமாரால் எந்தப் பயனும் இல்லை’’ என்றார் ஓசூர் மலர் வர்த்தகச் சங்கத் தலைவர் திம்மராஜ்.

தளி ஒன்றியத்தில் ஜவளகிரி கிராமம், கெலமங்கலம் ஒன்றியத்தில் கருக்கனஹள்ளி கிராமம், பர்கூர் ஒன்றியத்தில் சின்னமட்டாரப் பள்ளி கிராமம் ஆகியவற்றைத் தத்தெடுத்திருக்கிறார் அசோக்குமார். அந்தக் கிராமங்களுக்குச் சென்றோம். ஜவளகிரியைச் சேர்ந்த வெங்கடேஷ், ‘‘26 குடும்பங்களுக்குப் பசுமை வீடுகள் கொடுத்தார்கள். பெட்டிக்கடை, சலூன் கடை, மெக்கானிக் ஷாப் ஆகியவற்றுக்காக ஒரு லட்சம் ரூபாய்வரை கடன் கொடுத்தார்கள். இரண்டு ஹைமாஸ் லைட் போட்டிருக்கிறார்கள். மூன்று முறை எம்.பி வந்து எட்டிப் பார்த்துட்டுப் போனார். பேருந்து நிலையம், வங்கி வசதி வேண்டும், மருத்துவமனை வேண்டும் என்றும் எம்.பி-யிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், எதையும் அவர் நிறைவேற்றித் தரவில்லை’’ என்றார்.  

இதற்கெல்லாம் என்ன சொல்கிறார் எம்.பி? நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ‘‘சாம்பல்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமேடை அமைத்துக்கொடுத்திருக்கிறேன். மோட்டூர் - ஆவின் பால் வரையிலும், காவேரிப்பட்டினம் - நரிமேடு வரையிலும் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனைக்கல் - ஓமலூர் ரயில் பாதையை இரு வழிப்பாதையாக மாற்றியிருக்கிறேன். 9.80 கோடி ரூபாயில் தொன்னிகான் கொட்டாய் பகுதியில் மேம்பாலம் கட்ட அனுமதி பெற்றுக் கொடுத்திருக்கிறேன். பர்கூர் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகள், சாலையைக் கடக்க 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டிக்கொடுத்திருக்கிறேன். கிருஷ்ணகிரியில் பாஸ்போர்ட் அலுவலகம், தலைமை தபால் அலுவலகம் தொடங்க மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.
ஓசூர் - தளி செல்லும் சாலையில் இரண்டு பாலங்களும், ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் ஐந்து இடங்களில் மேம்பாலமும் அமைக்க அனுமதி கிடைத்திருக்கிறது. சிக்காரிமேடு பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி வழியாகச் செல்லும் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைக்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை வரையிலான இருப்புப் பாதைக்கு மத்திய அரசுடன், மாநில அரசும் இணைந்து தொகைகளைப் பிரித்துக்கொண்டால் அமைத்துவிடலாம். இ.எஸ்.ஐ மருத்துவமனை இருப்பதால், புதிய மருத்துவமனைக்கு அனுமதி தரவில்லை. தத்தெடுத்த கிராமங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்காதபோதும் பல பணிகளை அங்குச் செய்துகொடுத்திருக்கிறேன். 2017-18 நிதியாண்டில் மத்திய அரசின் சிறப்பு நிதியிலிருந்து 60 கோடி ரூபாய் பெற்று, 115 கிலோ மீட்டரில் 38 சாலைகளும், ஒரு மேம்பாலமும், இந்த நிதியாண்டில் 40 கோடி ரூபாய் பெற்று, 60 கிலோ மீட்டரில் 23 சாலைகளும், மூன்று மேம்பாலங்களும் அமைக்க இருக்கிறேன். தமிழகத்தில் ஒரு எம்.பி கூட என்னைப் போல இவ்வளவு தொகையைப் பெற்று, பணிகளைச் செய்திருக்க மாட்டார்கள்” என்றார் அசோக்குமார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/www.vikatan.com/special/mpsreportcard/#innerlink என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- வி.கே.ரமேஷ், எம்.வடிவேல்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)
என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)
என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

கி
ருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது எம்.பி அலுவலகம். கிருஷ்ணகிரி டவுன் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த பீர் கணேஷுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூவரும் பள்ளி மாணவர்கள். பீர் கணேஷுக்குச் சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி பெறுவதற்காக எம்.பி அலுவலகத்தில் மனு கொடுத்தார் பீர் கணேஷ். ‘‘மனு அளித்து இரண்டு மாதங்கள் மேல் ஆகிவிட்டன. இன்னும் நிதி கிடைக்கவில்லை’’ என்றார் பீர் கணேஷ். எம்.பி அலுவலகத்தில் இதுபற்றி கேட்டபோது, ‘‘மனுவை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டோம்’’ என்றார்கள்.

என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)
என்ன செய்தார் எம்.பி? - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)