Published:Updated:

முடிந்துபோனதா கிரானைட் நாடகம்...? - மினி தொடர் - பாகம் 1

முடிந்துபோனதா கிரானைட் நாடகம்...? - மினி தொடர் - பாகம் 1
முடிந்துபோனதா கிரானைட் நாடகம்...? - மினி தொடர் - பாகம் 1


- கே.கே.மகேஷ்


படங்கள்:
எஸ்.கிருஷ்ணமூர்த்தி & பா.காளிமுத்து


ர்நாடகாவின் ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல தமிழகத்தின் கிரானைட் மோசடி. ஆரம்பத்தில் பட்டாசு கிளப்பிய அரசின் அதிரடி நடவடிக்கைகள், இப்போது சுவாரசியமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாடகம் முடிவுக்கு வருகிறது என்று சட்டப்புள்ளிகள் எல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசம். உண்மையில் இந்த வழக்குகள் இப்போது எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அலசி ஆராயவே இந்தத் தொடர்.

அதற்கு முன், இந்த வழக்கு பற்றி சின்ன ஃபிளாஷ் பேக்...


சகாயத்தின் அறிக்கை

முடிந்துபோனதா கிரானைட் நாடகம்...? - மினி தொடர் - பாகம் 1

மதுரை மாவட்டத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவோடு பன்னெடுங்காலமாக நடந்து வந்த கிரானைட் கொள்ளை திடீரென அரசின் நடவடிக்கைக்கு உள்ளாவதற்கு முக்கியக் காரணம் மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம். அவரின் முயற்சி இல்லை என்றால், இப்போதும் கிரானைட் குவாரிகள் வழக்கம் போல கொள்ளையடித்துக் கொண்டு இருந்திருக்கும். கடும் பணி நெருக்கடியிலும் கூட, மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளை எல்லாம் பார்வையிட்ட சகாயம், அதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்தார். இதுதொடர்பாக கடும் நடவடிக்கை தேவை என்று ந.க.எண் 488/2012/ கனிமம் நாள் 19.05.2012 தேதியிடப்பட்ட அறிக்கையைத் தமிழக அரசின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார் சகாயம்.

அரசின் டாமின் நிறுவனம் சில லட்சங்களை மட்டுமே சம்பாதித்துள்ளது. ஆனால் இதை சார்ந்து இயங்கும் கிரானைட் நிறுவன உரிமையாளர்கள் பல்லாயிரம் கோடிகளை ஈட்டியுள்ளார்கள் என்பதை இந்த அறிக்கை விரிவாகச் சுட்டிக்காட்டியது. அரசுக்கு இதனால் ஏற்பட்ட நிதியிழப்பு சுமார் ரூ.16,000 கோடி என்றும், இதற்கு வருவாய், கனிம வளத்துறை அதிகாரிகள் முழுவதும் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்றும் அந்த அறிக்கையில் சகாயம் கூறியிருந்தார்.
பி.பழனிச்சாமி கைது

இந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டது. இதற்கிடையில் கலெக்டர் சகாயம் மாற்றப்பட்டார். புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா மதுரை வந்தார். 3 மாதம் கழித்து சகாயத்தின் கடிதம் திடீரென மீடியாக்களில் வெளியாக, அதன் பிறகுதான் அரசு நடவடிக்கையில் இறங்கியது. இதுதொடர்பாக மக்களுக்கு எழுந்த சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்றாலும், அடுத்து வந்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சகாயத்தைப் போலவே கிரானைட் விவகாரத்தில் நேர்மையாக நடந்து கொண்டார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவரது அதிரடி நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் 18 குழுக்களை அமைத்து குவாரிகளில் ரெய்டு நடத்திய அவர், முதல் நாளிலேயே 9 குவாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

முடிந்துபோனதா கிரானைட் நாடகம்...? - மினி தொடர் - பாகம் 1

அரசு அனுமதித்த அளவை விட கூடுதல் கற்களை திருட்டுத்தனமாக எடுத்தது, அனுமதி பெறாத இடங்களில் குவாரி நடத்தியது, அரசு புறம்போக்கு இடங்கள், பாதைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்தது, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது, விவசாயிகளை மிரட்டி இடங்களை பறித்தது என்று பல்வேறு புகார்களைப் பெற்று, பி.ஆர்.பி. பழனிச்சாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரை போலீஸார் அங்கே தேடுகிறார்கள், இங்கே தேடுகிறார்கள் என்று தகவல்கள் பரவிய நிலையில், கடந்த 19.8.12 அன்று பி.பழனிச்சாமி மதுரையில் சரண் அடைந்தார். மொத்தம் 15 வழக்குகளில் அவரைக் கைது செய்தனர் போலீஸார். மறுநாள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் பழனிச்சாமி.

ஜாமீனும் சர்ச்சையும்


இதற்கிடையே, பழனிச்சாமியின் மனுவை ஏற்று டிசம்பர் 14 ம் தேதி 15 வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம். அன்று வெள்ளிக்கிழமை என்பதால், திங்கட்கிழமை மாலையில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் பழனிச்சாமி.

முடிந்துபோனதா கிரானைட் நாடகம்...? - மினி தொடர் - பாகம் 1

அதாவது வெறும் 115 நாளில் அவர் வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு கடந்த மார்ச் 7 ம் தேதி அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் உறவினர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போது அவர்களும் வெளியே வந்துவிட்டார்கள்.

அழகிரி மகன் துரை தயாநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 100 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுக்க ஓடி ஒளிந்து கொண்டிருந்தார் தயாநிதி. தன் மனைவி அனுஷாவை எஸ்.பி. ஆபீஸுக்கு அழைத்து போலீஸார் விசாரித்த போது கூட, தயாநிதி வெளியே வரவில்லை. இதற்கிடையே, 'முக்கிய குற்றவாளி பழனிச்சாமிக்கே ஜாமீன் கிடைத்துவிட்டதை  சுட்டிக்காட்டி, அவருக்கும் முன்ஜாமீன் வாங்கிவிட்டார்கள் வழக்கறிஞர்கள். ஆக, துரை தயாநிதி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டார். இதுவரையில் கிரானைட் முதலாளிகள், பினாமிகள் வீடுகளில் நடத்திய ரெய்டில் சொல்லிக் கொள்ளும்படியான ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

மொத்தமாக வழக்குப் போட்டுவிட்டு அதனை சரிவர கவனிக்க முடியவில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்குப் போடும் முடிவுக்கு வந்தார்கள் போலீஸார். அதிலும் கூட தொடர்ந்து முன்ஜாமீன் வாங்கிக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி. அவர் கைதாகி வெளிவே வந்த பிறகு மேலும் 20 வழக்குகள் அவர் மீது பாய்ந்திருக்கின்றன. ஆனால், எல்லாவற்றிலும் முன்ஜாமீன் வாங்கிவிட்டார் பழனிச்சாமி. இதுவும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

குண்டர் சட்டம் பாயாதது ஏன்?


முடிந்துபோனதா கிரானைட் நாடகம்...? - மினி தொடர் - பாகம் 1

அது என்ன என்பதை சொல்கிறார் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "20 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளின் ஆதரவோடு நடந்து வந்த மோசடி, சகாயம் என்ற தனிமனிதரால் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது. வேறு வழியே இல்லாமல், அதே நேரத்தில் வேண்டா வெறுப்பாக நடவடிக்கையை ஆரம்பித்தது அரசு. கொள்ளைக்கு துணை போனவர்களைக் கொண்டே கொள்ளையடித்தவர்களைத் தண்டிக்கும் நூதன நாடகத்தைத் தொடங்கினார்கள். ஆக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, இஸ்ரோவின் எஸ் பேண்ட் மோசடி, ரெட்டி சகோதரர்கள் வழக்கு, 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி நிலக்கரி ஊழல் வழக்கு போன்றவற்றின் கதி தான், கிரானைட் மோசடி வழக்கிற்கும் வரும் என்று எதிர்பார்த்தேன். அது தான் நடந்திருக்கிறது. 

கூடங்குளம் அழிவுத்திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவிவிட்டதைப் போலவே, 10 ஆண்டுகளுக்கு முன்பு குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீதும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சினார்கள் அதிகாரிகள். ஆனால், அரசுச் சொத்தைக் கொள்ளையடித்த, சீர்செய்யவே முடியாத அளவுக்கு ஒரு தாலுக்காவையே அழித்தொழித்த பி.ஆர்.பி. மீது குண்டர் சட்டம் பாயவில்லை. அவருக்கு பிணை கிடைப்பதற்கு அரசும், நீதித்துறையைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது அவரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் பிறப்பித்துவிட்டது.

முடிவுக்கு வரும் நாடகம்

##~~##
மற்ற துறைகள் எல்லாம் தவறு செய்கிற போது நடவடிக்கை எடுக்கிற, கட்டுப்படுத்துகிற அதிகாரம் கொண்ட துறை நீதித்துறை. ஆனால், பி.ஆர்.பி. விஷயத்தில் நீதித்துறையும் சர்ச்கைகளில் சிக்கியிருப்பது கசப்பான உண்மை. மதுரை உயர்நீதிமன்றம் பி.ஆர்.பி. தொடர்பான வழக்குகளை தினசரி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. அதீத வேகம் காட்டுகிறது. அவருக்கு ஜாமீன் கொடுக்கிறது. அழகிரி மகனுக்கு ஜாமீன் கொடுக்கிறது. இதெற்கெல்லாம் காரணம், அரசின் மறைமுக ஆதரவு தான். இதை எல்லாம் பார்த்துதான் 'அயோக்கியர்களின் கடைசி புகலிடம் நீதித்துறையா?' என்று கண்டன போஸ்டர்களை அச்சிட்டு ஊரெல்லாம் ஒட்டினோம்.
'நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன்... நீ அழுகிற மாதிரி நடி' என்பது தான் அரசுக்கும், பி.ஆர்.பிக்குமான ஒப்பந்தம். இப்போது அவர்களுக்கும், பி.ஆர்.பி. நிறுவனத்திற்கும் இடையேயான பேரம் படிந்துவிட்டது போல் தெரிகிறது. ஆக, இந்த நாடகம் சுமூகமான முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது" என்கிறார்.
இது ஒருபுறமிருக்க, கிரானைட் ஊழலை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்த சிலர், கோடிகளை வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் தடதடக்கின்றன. யார் அவர்கள்? என்ன நடந்தது?

நாளை பார்க்கலாம்...