Published:Updated:

அடுத்தடுத்து நடக்கும் அமைச்சர்கள் இல்ல அசத்தல் விழாக்கள்… பிரமாண்ட விழாக்களின் பின்னணி

அடுத்தடுத்து நடக்கும் அமைச்சர்கள் இல்ல அசத்தல் விழாக்கள்… பிரமாண்ட விழாக்களின் பின்னணி
அடுத்தடுத்து நடக்கும் அமைச்சர்கள் இல்ல அசத்தல் விழாக்கள்… பிரமாண்ட விழாக்களின் பின்னணி

மிழக அமைச்சர்கள், தங்களின் குடும்ப விழாக்களை பிரமாண்டமாக நடத்தித் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதாக சர்ச்சைகள் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன. 

திருச்சிக் கலையரங்கம் மண்டபத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனது இளைய மகன் ஜவஹர்லால்நேருவின் இரண்டு வயது மகனுக்குக் காதணி விழாவை டிசம்பர் 30-ம் தேதியன்று நடத்தினார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வளர்மதி, காமராஜ், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர். அழைப்பிதழில் பெயர் இருந்தும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிலர் மட்டும் ஆப்சென்ட் ஆனார்கள். திருச்சி கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் திருச்சி மாவட்ட அதிகாரிகள் பலரும் புடைசூழ ஆஜரானார்கள். விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் தனித்தனியே, ``தங்கச் சங்கிலி” செய்தார்கள். டெல்டா மாவட்ட அமைச்சர் ஒருவர் ஐந்து பவுன் செயினை அளித்து அசத்தினாராம். 

விழாவுக்காக, `சேலத்தின் சிங்கமே', `தேனியின் தங்கமே' என்று முதல்வர் மற்றும் துணை முதல்வரையும், அமைச்சர்களையும் வரவேற்று,  வெல்லமண்டி நடராஜனின் பேரனை அவர்கள் வைத்திருப்பது போன்ற புகைப்படங்களுடன் போஸ்டர்கள், பேனர்கள் வைத்து அசத்தியிருந்தனர்.

விழாவுக்காக மண்டபத்தின் எதிரே இருந்த ஆம்னி பேருந்து நிலையம், சாலைகள் இவர்கள் வசமானது. `இரண்டு வயதுக் குழந்தையின் காதணி விழாவுக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா?' எனற திருச்சிவாசிகள் திகைத்துப் போகும் அளவுக்கு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. 

விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்குச் சால்வை அணிவித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமாரைத் திட்டமிட்டுத் தவிர்த்தார். இந்தக் கோபத்தை குமார், அவரின் பின்னால் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் காட்டினார். மேலும் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய முதல்வருக்கு வரவேற்பு கொடுத்த ப.குமார், கட்சி நிர்வாகிகளை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும்போது, வெல்லமண்டி நடராஜன் குறுக்கிட்டதாகவும், அப்போது குமார், ``அமைச்சர் எல்லாம் அப்புறம்தான். நான் மாவட்டச் செயலாளர்” எனச் சத்தம் போட்டதாகவும் தெரிவித்தனர் நிர்வாகிகள். நிலைமையைப் புரிந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``சத்தம் வேண்டாம்பா” எனக் கூறி கிளம்பினாராம். இவையெல்லாம் மாவட்ட அரசியலில் பலத்த உஷ்ணத்தைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து திருச்சி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் நம்மிடம், ``அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வசமிருந்த மாவட்டச் செயலாளர் பதவி, எம்.பி ப.குமாருக்கு மாற்றப்பட்டதை, அமைச்சரைவிட அவரது மகன் ஜவஹரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு கிருபாகரன், ஜவஹர்லால் நேரு என்று இரண்டு மகன்கள். தொகுதி அலுவலகம், மாவட்ட அரசியல் என அத்தனையிலும் இளைய மகன் ஜவஹர் தலையீடு அதிகளவில் உள்ளது. 

சமீபகாலமாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனது மகன் ஜவஹருக்கு மாவட்டப் பொறுப்பு கேட்டுவந்தார். அதற்கு ப.குமார் இடம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்தக் கடுப்பில் இருந்த அமைச்சர் தரப்பு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ப.குமாரை திருச்சி விமான நிலையத்தில் சந்தித்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பான வீடியோவை, முதல்வரிடமே காட்டியுள்ளனர். அமைச்சரின் இந்தச் செயல்கள் அனைத்தும் குமார் தரப்பைக் கடுங்கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதனால், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் குமார் கலந்துகொள்வதில்லை. திருச்சியில் மாவட்டக் கழகம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டாலும், ஆளாளுக்குத் தன் புகழைப் பேசி கடுப்பேற்றுவதைப் போன்று நடந்துகொள்கிறார்கள். இதுபோன்ற செயல்பாடுகளால் திருச்சி அ.தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் மீண்டும் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தச் சூழ்நிலைகளுக்கு இடையே முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்சோதி, எம்.பி. ரத்தினவேலு ஆகியோரும் தங்களுக்குச் சாதகமாக எதுவும் நடக்காதா எனக் காத்துக்கிடக்கிறார்கள்” என்கின்றனர். 

இதுகுறித்துப் பேசிய ப.குமார் ஆதரவாளர்கள், ``அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தொடர்ச்சியாக கோஷ்டிப் பூசலைக் கையிலெடுத்து வருகிறார். செந்தில் பாலாஜி - ப.குமார் சந்திப்பை சர்ச்சையாக்கியதுடன், திருச்சி கிழக்குத் தொகுதியில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து வருகிறார். மாவட்டத்தைப் பிரித்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு வாங்கவும், அவரது மகன் ஜவஹருக்கு எம்.பி. சீட் பெறவும் வெல்லமண்டி முயற்சி மேற்கொண்டுள்ளார்” எனக் குற்றம்சாட்டினர். 

இதற்கு வெல்லமண்டி நடராஜன் தரப்போ, ``மாவட்டச் செயலாளர் மாற்றம் நடந்த பிறகு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் அமைச்சர் செயல்பட்டு வருகிறார். ஆனால், குமார் தரப்புதான் தொடர்ச்சியாக அமைச்சரைக் குறை சொல்லி வருகிறது. தினகரன் அணிக்குப் போய்விட்டுவந்த சிலர், ஆவின் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகளை மிரட்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இவற்றை மறைக்கவே, இப்படி திசை திருப்பிவிடுகிறார்கள். இதற்கு முன்பு ப.குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விமான நிலையத்தில் வைத்து சண்டை போட்டுள்ளார். அதே பாணியில் இப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடமும் அவர் நடந்து கொண்டுள்ளார்” என அலுத்துக்கொண்டனர்.

சமீபத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது 14-வயது மகள் அக்‌ஷய நிவேதாவுக்கு ஆயிரம் பேருந்துகளில் ஆட்களைத் திரட்டி பிரமாண்டமாக மஞ்சள் நீராட்டு விழா நடத்தினார். இதேபோல் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமாருக்கு கோவில்பட்டியில் நடந்த திருமணம், அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரன்களுக்கு நடத்திய பிரமாண்டமான காதுகுத்து நிகழ்ச்சி வரிசையில் தற்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேரனின் காதணி விழாவும் பிரமாண்டமாக நடந்தேறியுள்ளது.  

இந்த விழாக்களில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள், `பலமாக' செய்முறை செய்கிறார்கள். மொய்ப்பணம் கோடிகளைத் தாண்டுகிறது. இவை அனைத்தும் கறுப்பை வெள்ளையாக்கும் முயற்சி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்குக் கோடிகளில் `மொய்' பணம் வசூலாகிறது. எப்படியோ, கட்சிக்காரர்கள் `சந்தோஷமாக' இருந்தால் சரி என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.