Published:Updated:

`வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போட்டீங்களா?’ மோடிக்கு முத்தரசன் கேள்வி

`வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போட்டீங்களா?’ மோடிக்கு முத்தரசன் கேள்வி
`வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போட்டீங்களா?’ மோடிக்கு முத்தரசன் கேள்வி

பாரதிய ஜனதாவின் துணை அமைப்பு போல, தேர்தல் ஆணையம் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் காட்டமாகத் தெரிவித்தார்.

நெல்லையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 94-வது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்கு வருகை தந்த கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’2019-ம் ஆண்டில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடிவடையப் போகிறது. கடந்த 5 வருடங்களாகத் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்கள் விரோதமான ஆட்சியை நடத்திவருகிறார்கள். 

கறுப்புப் பணத்தை ஒழிக்க, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த மோடி, ’’60 நாள்களில் அனைத்துப் பிரச்னைகளும் தீரும். இல்லாவிட்டால், நடுரோட்டில் நிறுத்தி தீ வைத்துக்கொளுத்துங்கள்’ என்று ஆவேசமாகத் தெரிவித்த நிலையில், எதுவுமே நடக்கவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அப்பாவி மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள். நாடு முழுவதும் 300 பேர் உயிரிழந்தார்கள். ஆனால், அச்சத்தோடு கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்திருந்தவர்கள் எல்லோரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டதால், இப்போது அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். 

அதேபோல, ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து மூடப்பட்டன. அதனால் வேலை வாய்ப்பற்ற நிலை உருவாகிவிட்டது. ஆட்சிக்கு வந்த 100 நாள்களில், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக அறிவித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகச் சொன்னதையும் செய்யவில்லை. விவசாயிகளின் விளை பொருள்களுக்கான விலையை இரட்டிப்பாக்குவதாகச் சொன்னதும் வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது. 

அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவியதால், ராமர் கோயில் விவகாரத்தைக் கையில் எடுத்து பாரதிய ஜனதாவும் பரிவார அமைப்புகளும் அரசியல் செய்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், ராமர் கோயில் கட்டப்போவதாக பா.ஜ.க-வினர் பகிரங்கமாகப் பேசிவருகிறார்கள். கேரளாவில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், அக்கட்சியினர் சபரிமலை விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். 

சபரிமலையில் இருந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் விலக்கியதால், இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். இதற்காக, பாரதிய ஜனதா போராட்டம் என்கிற பெயரில் வன்முறையைத் தூண்டுகிறது. சென்னை, கோவை, குமரி மாவட்டங்களில் வன்முறைகளில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். கோவை, குமரி மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் அலுவலகங்கள்மீது தாக்குதல் நடத்தியதுடன், கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகளைத் தடுக்காமல், எடப்பாடி பழனிசாமி அரசு வேடிக்கைபார்த்துள்ளது.

கஜா புயல் பாதித்த பாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்கு 15,000 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்ட நிலையில், வெறும் 1114 கோடியை மட்டுமே மத்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசு தமிழக அரசுமீது பாரபட்சத்துடன் செயல்படுகிறது. கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, தமிழக மக்களுக்குத் துரோகம் செய்திருக்கிறது. 

மத்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. அது, மக்களின் அமைப்பாகச் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்தில் நம்பகத்தன்மை இருக்கவில்லை. அது பா.ஜ.க-வின் துணை அமைப்பு போல செயல்படுகிறது. 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல், கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது. 

திருவாரூர் மாவட்டத்தில் புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், வாக்காளர்களுக்கு நிவாரண உதவி என்கிற பெயரில் பணம் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை அ.தி.மு.க ஒருமுறைகூட வெற்றிபெற்று இருக்காத அந்தத் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் அதிக வாக்குகளில் வெற்றிபெறுவார். அதற்கு, கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்’’ என்று தெரிவித்தார்.