Published:Updated:

மோடி எழுதிய 'பி.ஜே.பி அரசின் சாதனைகள்' கடிதம்... நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா?

பிரதமர் மோடி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அரசுப் பணத்தைக் கொண்டு தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தைச் செய்யத் தொடங்கியிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மோடி எழுதிய 'பி.ஜே.பி அரசின் சாதனைகள்' கடிதம்... நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா?
மோடி எழுதிய 'பி.ஜே.பி அரசின் சாதனைகள்' கடிதம்... நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தனது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள குடும்பத் தலைவர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் பிரசார கடிதம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசு நிதியினை பிரதமர் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போதைய மத்திய அரசின் ஆட்சிக்காலம், வரும் மே மாதத்துடன் நிறைவுபெற உள்ளது. இதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றம் அமைப்பதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்காகத் தேசிய, மாநில அளவிலான கட்சிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் பி.ஜே.பி செய்த சாதனைகளை அரசு செலவில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியினை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். இதன்படி நாட்டில் உள்ள 10 கோடி குடும்பத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. 'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள குடும்பத் தலைவர்' என்ற பெயரில் அனுப்பப்படும் இந்தக் கடிதத்தில்,

``பிரதமர் பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கிய நேரத்திலிருந்து ஏழைகள், சாமான்ய மனிதன் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகப் பாடுபட்டு வருகிறேன். இந்த நோக்கத்தை நிறைவேற்ற வீட்டுவசதி முதல் வருமானம்வரையிலும், கல்விமுதல் சுகாதார வசதிவரையிலும் மக்கள் வாழ்வதற்கான சூழலை எளிமைப்படுத்தப் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இதன்படி குடிசை வீட்டில் வசித்துவரும் ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடு வழங்குவதில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த வீடுகள், குடும்பத்துப் பெண்களின் பெயரில் வழங்கப்படுவதால் அவர்களின் கெளரவம் அதிகரித்துள்ளது. இதேபோல செளபாக்யா திட்டத்தின்கீழ் மின் இணைப்பு வழங்குதல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச கேஸ், ஏழை மக்களின் இல்லங்களுக்குச் சென்று வங்கிச் சேவைகளை வழங்க ஜன்தன் திட்டம், ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதமரின் சுரஷா பீமா யோஜனா, அடல் ஓய்வூதிய திட்டம், வயா வந்தன் யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் குறைவான வருவாய்கொண்ட ஏழைகளுக்குத் துணிச்சலையும், மன உறுதியையும் அளித்துள்ளது. இதேபோலக் கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் பிணை ஏதுமின்றி, கடன் வழங்க முத்ரா திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் நாட்டு மக்களின் வலிமையை அதிகரித்தாலும், அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நோயால் பாதிக்கப்படும் நிலையில் அந்த வலிமை வீணாகிவிடுகிறது. 

கொடிய நோய்கள் ஏற்படுத்தும் இந்தச் சவால்களிலிருந்து விடுபட, `பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டம் - ஆயுஷ்மான் பாரத்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதன்படி, நாட்டில் 10 கோடிக் குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய்வரை சுகாதார காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குடும்ப உறுப்பினர் ஒருவர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சை செலவில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்வரை அரசே ஏற்கும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் தேர்வுசெய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதியைப் பெற்று பயனடையலாம். இதனால், எவ்வித சிரமமும் இன்றிச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் சிகிச்சை பெற முடியும்'' என பிரதமர் நரேந்திர மோடி அதில் குறிப்பிட்டுள்ளார். 

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தினை விவரித்து அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பி.ஜே.பி அரசின் கடந்த நான்கரை ஆண்டுச் சாதனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார யுக்தியாக மோடி இதனை அனுப்பியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 10 கோடிக் குடும்பத் தலைவர்களுக்கு இந்தக் கடிதம் அஞ்சல் துறையின் வழியாக `விரைவு அஞ்சலாக' (SPEED POST) அனுப்பப்பட்டுள்ளது. இதற்கெனக் குறைந்தபட்சமாக ரூ.17-ம் அதிகபட்சமாக ரூ.45-ம் இந்திய அஞ்சல் துறைக்குச் செலுத்தப்பட வேண்டும். அதன்படி, இந்த 10 கோடி கடிதங்களுக்கும் குறைந்த பட்சமாக 170 கோடி ரூபாய்முதல் அதிகபட்சமாக 450 கோடி ரூபாய்வரை செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இது, அரசு நிதியிலிருந்தே வழங்கப்பட்டிருக்கக் கூடும். அதேநேரத்தில், அஞ்சல் துறைக்கு அரசால் இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கவில்லை எனில், ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் இந்திய அஞ்சல் துறை மேலும் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்படும். இந்த நிலையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட  இந்தக் கடிதங்கள் முறையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதனையும் கண்காணிக்கும்படி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளது, பி.ஜே.பி. தலைமை. இதன்மூலம் பிரதமர் மோடி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அரசுப் பணத்தைக் கொண்டு தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தைச் செய்யத் தொடங்கியிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், கஜா புயல் போன்ற பேரிடர் பாதிப்புகளுக்குப் போதுமான நிதியினை வழங்க மறுக்கும் மோடி அரசு, தனது ஆட்சியின் சாதனைகளைப் பரப்ப அரசு நிதியிலிருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையைச் செலவுசெய்து வாக்குகளை அறுவடை செய்ய முயன்றிருப்பது பாதிக்கப்பட்டவர்களை வேதனையடையச் செய்துள்ளது.