Published:Updated:

கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி.. இவர்களை ஏன் பேசச் சொன்னார் ஜெ.?

பொதுக்குழு ரிப்போர்ட்!

கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி.. இவர்களை ஏன் பேசச் சொன்னார் ஜெ.?

பொதுக்குழு ரிப்போர்ட்!

Published:Updated:
##~##

''என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை... நம்பாமல் கெட்ட​வர்கள்​தான் உண்டு!'' என்பது ஜெயலலிதா​வின் பிரபல முழக்கம். இப்போது, ''துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை... அந்தத் துரோகிகளின் பேச்சைக் கேட்பவர்களுக்கும் மன்னிப்பு இல்லை'' என்ற புதிய கோஷத்தைக் முழங்கி, சாட்டையைச் சுழற்றத் தொடங்கி இருக்கிறார் ஜெ! 

''நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்'' என்பதை அடித்துச் சொல்லி, உண்மை விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதற்காகவே பொதுக்குழுவைக் கூட்டியது போல் இருந்தது. அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல அனைத்துக் கட்சிக்காரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், கடந்த 30ம் தேதி சென்னையில் நடந்தது. சசிகலா மற்றும் அவரது உறவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 12 நாட்கள் கழித்து, இந்தக் கூட்டம் நடத்துவதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்தது.  1990ம் ஆண்டுக்குப் பிறகு சசிகலா இல்லாமல் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்குழு இது (சசிகலா செயற்குழு உறுப்பினராக ஆவதற்கு முன்னால், ஜெ.வுடன் பொதுக்குழு அரங்கத்துக்கு வருவார். பின்னால், தனி அறையில் இருந்தபடி நிகழ்வுகளுக்குக் காது கொடுப்பார்!)

வானகரம் மண்டபத்தில் மதியம் 2 மணிக்குத்தான் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1.40 க்கே ஜெயலலிதா ஆஜர். காரிலிருந்து இறங்கியவர், நேராக செயற்குழு கூட்டம் நடக்க இருந்த அறைக்குள் நுழைந்தார்.

கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி.. இவர்களை ஏன் பேசச் சொன்னார் ஜெ.?

அங்கே என்ன நடந்தது?

செயற்குழுவில் நடந்தவற்றை அதில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் நமக்கு அப்படியே லைவ் ரிப்போர்ட் கொடுத்தார். ''இறுக்கமான முகத்தோடு​தான் அம்மா வந்தாங்க. செயற்குழு உறுப்பினர்களிடம் மினிட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கியதும், 'பொதுக்குழுவில் யாரெல்லாம் பேசப்போறாங்க?’ என்று, ஓ.பி.எஸ்.ஸைப் பார்த்து கேட்டார். அவர், செங்கோட்டையனைத் திரும்பிப் பார்க்க.. கையில் ஒரு லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு செங்கோட்டையன் ஓடினார். அந்த லிஸ்ட்டை ஒரு முறை  அம்மா பார்த்தாங்க. செங்கோட்டையன்கிட்ட பேனா வாங்கி, அந்த லிஸ்ட்டில் இருந்த பல பெயர்களை அடிச்சிட்டாங்க. அவங்க கையாலேயே, கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி ஆகியோர் பெயர்களை எழுதினாங்க. ' இவங்க பேசட்டும். நான் எதுக்கு சொல்றேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்’ என்று, செங்கோட்டையனிடம் சொன்னதாகத் தெரியுது. செங்கோட்டையனும் வாய்மீது கை வைத்தபடியே தலையாட்டி விட்டு வந்து உட்கார்ந்தாரு. கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி ஆகிய மூன்று பேருக்குமே பொதுக்குழுவில் பேச அழைப்பார்கள் என்ற விஷயம் கடைசி வரை தெரியாதாம்.

முன்வரிசை அலர்ஜியில் மந்திரிகள்!

பொதுக்குழுவில் அன்வர் ராஜா, வளர்மதி, பி.எச்.பாண்டியன், சுலோசனா சம்பத், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், பொன்னையன், செங்கோட்டையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், செம்மலை, டாக்டர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் மேடை ஏற்றப்பட்டிருந்தனர். இந்த அளவுக்கு நிர்வாகிகள் மேடையில் அமர வைக்கப்பட்டது கடந்த காலங்​களில் நடைபெறவில்லை. அமைச்சர்கள் முன்வரிசையில் அமரவில்லை. இரண்டு மூன்று வரிசைக்கு பின்னால்தான் அமர்ந்திருந்தார்கள். கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன்தான் பொதுக்குழுவை தொகுத்து வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் நூர்ஜஹானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கட்சியின் பேச்சாளரான நூர்ஜஹானுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யம்தான்!

விஜயகாந்த்துக்கு கிடைத்த அர்ச்சனை!

யாருமே எதிர்பார்க்க நிலையில் விஜயகாந்த்தை வறுத்தெடுத்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. ''சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.வின் தயவில்தான் நாம் ஜெயித்தோம் என்று, விஜயகாந்த் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது உண்மையில்லை. அவருடைய ஓட்டுகள் நமக்கு உதவவில்லை. அவருடைய சக்தியால் அம்மா ஜெயிக்கவில்லை. நம்மோடு அவர் சேர்ந்ததால்தான், நமது செல்வாக்கால்தான் அவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்து உட்கார முடிந்தது. இந்த உண்மை விஜயகாந்துக்குப் புரியவில்லை. விஜயகாந்த் மட்டுமல்ல... வேறு யாருடனுமே கூட்டணி சேராமல் அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று 90 சதவீதத்துக்கும் அதிகமான உள்ளாட்சி இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது. அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்த் 2 நகராட்சிகளையும் 3 பேரூராட்சிகளையும் 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களை மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தங்கள் தயவால்தான் ஜெயித்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் விஜயகாந்த், ஏன் உள்ளாட்சித் தேர்தலில் இப்படி உதை வாங்கினார்? இந்த புள்ளிவிவரம் கூட புள்ளிவிவரப் புள்ளிக்குத் தெரியாமல் போனது ஏன்?'' என்று, அன்வர் ராஜா பேசிய போது ஏகத்துக்கும் கைதட்டல்.

கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி.. இவர்களை ஏன் பேசச் சொன்னார் ஜெ.?

''சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அவருக்கு அம்மா பார்த்துக் கொடுத்த கொடை. அ.தி.மு.க. போட்ட பரிசு. எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஒழுங்காக வேலை பார்க்கட்டும். அதை விட்டுவிட்டு அம்மாவைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். இதற்கு மேல் விஜயகாந்த்தைப் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை'' என்று முடித்தார் அன்வர் ராஜா.

விவரம் அறிந்த சில புள்ளிகள், ''விஜயகாந்த்தை இந்தளவுக்கு அன்வர் ராஜா போட்டு வாங்கியிருக்க வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மா சில கணக்குகள் வச்சிருக்காங்க. என்னதான் விஜயகாந்த் எடக்கு மடக்காக போனாலும், தி.மு.க. பக்கம் அவர் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்காங்க'' என்று ஒரு கணக்கு சொன்னார்கள்.  

பூசாரி தெய்வம் ஆகிவிட முடியாது..!

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன்தான் வரவேற்புரையிலேயே சசிகலா விவகாரத்தைத் தொட்டு வைத்தார்.  ''வெளியேற்றப்பட்ட சசிகலா அண்ட் கோ, இப்போது நடக்கும் பெங்களூரு கோர்ட் விவகாரங்களில் உள்ளடி வேலை பார்த்து விடக் கூடாது என்பதில் படுஉஷாராக இருக்கிறார் அம்மா. அதுகுறித்த முக்கியமான சட்ட விவகாரங்களை பி.எச்.பாண்டியன் மற்றும் அவர் மகன் மனோஜ் பாண்டியன் மூலமாக அலசி வருகிறார். அந்த வகையில் அம்மாவின் லேட்டஸ்ட் மனப்போக்கை நன்றாக அறிந்துகொண்டுதான், சசிகலாவை ஓபனாகப் போட்டுத் தாக்கினார் பாண்டியன்'' என்பது இந்த துணிச்சல் பாய்ச்சலுக்கு சிலர் விளக்கம் அளித்தனர்.

எட்டு பர்சென்ட்.. எட்டு பர்சென்ட்..!

பி.எச்.பி-யைத் தொடர்ந்து கே.பி.முனுசாமியை பேச அழைக்க.. அதை சற்றும் எதிர்பார்க்காத முனுசாமி மிரண்டு போய் மேடைக்கு ஓடினார். ஜெ.வை பார்த்து வளைந்து கும்பிடு போட்ட முனுசாமியை ஜெ. எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பார்க்க... ''சாணத்தைப் பிடித்து அதைப் பிள்ளையாராக மாற்றுபவர் அம்மா. அதற்காகச் சாணம் தன்னையே கடவுளாக நினைத்துக் கொண்டால் எப்படி? அது வெறும் சாணம்தான் என்று புரிய வைக்க, ஒரேயடியாக அதை அம்மா வழித்துப் போட்டுவிடுவார். அம்மா அருகில் இருப்பவர்கள், 'நாங்களும் பிள்ளையார் பிடிக்கிறோம்’ என்று முயன்றால்... அதுவும் நடக்காது. அப்படி நினைக்கிறவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். ஒன்றுக்கும் பயன்படாத பொருளாகி விடுவார்கள்'' என்று முனுசாமி பேசிக் கொண்டே போக.. கூட்டத்திலிருந்து யாரோ, ' எட்டு பர்சென்ட்... எட்டு பர்சென்ட்....’ என்று குரல் கொடுத்தார்கள். கத்தியது புரிந்ததோ, இல்லையோ... அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார் ஜெ.

''அமைச்சரின் சமீபத்திய செயல்பாடுகள் மீது விரக்தி அடைந்த ஒரு தொண்டர்தான் இப்படிக் குமுறினார்'' என்று காரணம் சொல்கிறார்கள்.  

திருடனைக் கொட்டிய தேள்..

'அடுத்து அமைச்சர் தங்கமணி பேசுவார்..’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்ல.. தங்கமணியும் அதை எதிர்பார்க்கவில்லை.  ''என்னை யார் என்று எங்க பக்கத்து (வயல்?) காட்டுக்காரனுக்குக் கூடத் தெரியாது. அப்படிப்பட்டவனை அழைத்து வந்து எம்.எல்.ஏ. ஸீட் கொடுத்து, இன்று அமைச்சராக்கி அழகு பார்த்திருப்பவர் கருணை உள்ளம் கொண்ட அம்மா. அவர் சொன்னால் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்'' என்று அவரும் பட படவென புகழ்ந்து தள்ளி விட்டு அமர்ந்து கொண்டார்.

''சசிகலா குடும்பத்தோடு தொடர்புடையவர்கள் என்று, தான் கருதும் சிலரையே பேச விட்டுப் பல்ஸ் பார்ப்பதற்காகத்தான் அம்மா இப்படி செஞ்சாங்க. திருடனுக்கு  தேள் கொட்டிய கதையா இவங்களும் பேசிட்டு வந்திருக்காங்க'' என்று சிரித்தார்  மூத்த அமைச்சர் ஒருவர்.

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது!

பொதுக்குழுவில் ஜெயலலிதா நிகழ்த்திய பளீர் பேச்சு... 'நிஜமாகவே சசி கிரகணம் விலகியதா?' என்ற

கே.பி.முனுசாமி, தங்கமணி, வளர்மதி.. இவர்களை ஏன் பேசச் சொன்னார் ஜெ.?

குழப்பத்தில் இருந்த விசுவாசிகளுக்கு வெளிச்சத்தை உண்டாக்கியது.  ''கட்சிக்காரர்கள் பலவிதம் உண்டு. தவறு செய்து கட்சியை விட்டு நீக்கப்படுகிறவர்கள், 'இது நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனைதான்.  இனிமேல் அரசியல் வேண்டாம்’ என்று ஒதுங்கி விடுவார்கள். இன்னும் சிலர் வேறு கட்சிக்குத் தாவி அரசியலை தொடர்வார்கள். அது தவறில்லை. ஆனால் இன்னும் சிலர் இருக்கிறார்கள். துரோகம் செய்து விட்டு இந்தக் கட்சியில் இடமில்லை என்று நீக்கிய பிறகும் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்​களை விடாப்பிடியாக தொடர்புகொண்டு, 'நாங்கள் மீண்டும் உள்ளே வந்துவிடுவோம், மீண்டும் செல்வாக்​குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே வந்து பழிவாங்குவோம். அதனால் எங்களைப் பகைத்​துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர்கள் அவர்கள். கட்சித் தலைமையின் மீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.  அதுமட்டுமல்ல... அத்தகையவர்களுடைய பேச்சை  நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது'' என்று ஜெயலலிதா ஆக்ரோஷமாக கர்ஜித்த போது.. கூட்டத்தில் ஆர்ப்பரிப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது.

சூடு பட்ட பூனை..

நன்றியுரை ஆற்ற செங்கோட்டையனை அழைத்த போது படு உற்சாகத்தோடு மைக் முன்பு வந்தார். சசிகலா குடும்பத்தினரால் அதிகம் காயம் பட்டவர் செங்கோட்டையன்தானே.. அது அவரின் பேச்சில் அப்பட்டமாக எதிரொலித்தது. ''அனுமானின் இதயத்தை பிளந்த போது ராமர்தான் இருந்தார். தொண்டர்களின் இதயத்தை பிளந்தால் அங்கே அம்மாதான் குடியிருப்பார். ஒவ்வொரு தொண்டனின் இதயத்துக்குள்ளும் இருக்கும் அம்மாவை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது. அந்த முயற்சிகூடத் தோற்றுப்போகும். அம்மா எடுக்கும் எந்த நடவடிக் கைக்கும் தொண்டர்கள் நாங்கள் அத்தனை பேரும் துணை இருப்போம்'' என்ற போது ஜெயலலிதா அவரை பார்த்து ஏதோ அர்த்த சிரிப்போடு புன்முறுவல் பூத்தபடி கைதட்டினாராம்.

முடிஞ்சது.. முடிஞ்சதுதான்..!

ஜெயலலிதாவின் ஆவேசப் பேச்சுக்குப் பின்னணி என்ன? கார்டன் வட்டாரத்தோடு தொடர்பு​டையவர் களிடம் விசாரித்தோம். கட்சியில் பதவிக்காகவும், சில காரியங்களை சாதித்துக் கொள்ளவும் சசிகலா குடும்பத்தாரிடம் பணம் கொடுத்தவர்கள், கொடுத்ததைத் திருப்பி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். 'இப்படி அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... திவாகரனை நீக்கிவிட்டு பாஸ்கரனை கொண்டு வந்தார்கள் அவரையும் நீக்கிவிட்டு தினகரனை பொறுப்புக்குக் கொண்டு வந்தார்கள். அதன்பிறகு அவரையும் ஒதுக்கி விட்டு டாக்டர் வெங்கடேஷ§க்கு பதவி கொடுத்தார். இப்படி எங்கள் மீது கடந்த காலங்களில் கோபம் இருந்தாலும் சின்னம்மாவின் மீது அம்மாவுக்கு எப்போதுமே பாசம் உண்டு. இப்படி நடப்பது தற்காலிகம்தான். வாடிக்கையானதுதான். மீண்டும் உள்ளே வருவோம். அப்போது உங்கள் வேலைகளை முடித்து கொடுப்போம்’  என்று பதில் வந்ததாம். இது ஆதாரபூர்வமாக அம்மாவோட கவனத்துக்கு போயிருக்கு. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அம்மா இப்படி  அதிரடியாகப் பேசி இருக்காங்க. அதாவது, மன்னார்குடியின் செல்வாக்கு என்று சொல்லி யாரும் இனி கோட்டையில் காரியம் சாதிக்க முடியாது. அப்படி அவர்களுக்கு உதவுகிற அதிகாரிகளுக்கும் தண்டனை உண்டு என்பதையும் சேர்த்தே இதன்மூலம் உணர்த்தி இருக்காங்க'' என்று சொல்கிறார்கள்.

சசி தரப்பினர் இதுவரை நடத்திய அதிரடி ஆட்டங்கள் குறித்து துப்பறிய பணிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளும் இதுவரை லேசான குழப்பத்திலேயே இருந்து வந்தனர். 'இனி அவர்களுக்கு நோ என்ட்ரி' என்று பொதுக்குழுவில் ஜெ. அடித்துப் பேசிய பிறகு, கொஞ்ச நஞ்ச சஞ்சலமும் நீங்கி முழு வேகத்தில் ரெய்டும், ரெக்கவரியும் நடத்தத் துவங்கி இருக்கிறார்களாம் இந்த அதிகாரிகள்.

- கே.ராஜாதிருவேங்கடம், எம்.பரக்கத் அலி

படங்கள்: சு.குமரேசன்