அலசல்
Published:Updated:

“பஞ்சராகிக் கிடக்குது புதுவை அ.தி.மு.க!” - தலையிடுமா தலைமை?

“பஞ்சராகிக் கிடக்குது புதுவை அ.தி.மு.க!” - தலையிடுமா தலைமை?
பிரீமியம் ஸ்டோரி
News
“பஞ்சராகிக் கிடக்குது புதுவை அ.தி.மு.க!” - தலையிடுமா தலைமை?

“பஞ்சராகிக் கிடக்குது புதுவை அ.தி.மு.க!” - தலையிடுமா தலைமை?

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவு, பின்னர் அணிகள் இணைப்பு, மீண்டும் பிளவு என்று தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிரடித் திருப்பங்களால், புதுச்சேரி அ.தி.மு.க-வினரும், எம்.எல்.ஏ-க்களும் குழம்பிக்கிடக்கிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதி களைக் கைப்பற்றிய அ.தி.மு.க., கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. பெரிய வெற்றியைப் பெற்றபோதிலும், மூன்று தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வியால் கடுப்பான ஜெயலலிதா, மூன்று மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்து தூக்கியடித்தார். புதுச்சேரி மாநிலச் செயலாளராக இருந்த எம்.எல்.ஏ அன்பழகனை நீக்கிவிட்டு, தற்காலிகப் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ-வான புருஷோத்தமனை நியமித்தார். ஆனால் இவரோ, எந்தவித அரசியல் செயல்பாடுகளும் இல்லாதவராக இருக்கிறார் என்று  அ.தி.முக தொண்டர்கள் குமுறுகிறார்கள்.

“பஞ்சராகிக் கிடக்குது புதுவை அ.தி.மு.க!” - தலையிடுமா தலைமை?

புதுச்சேரியில் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா என நான்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த களேபரத்தில் கூவத்தூர் சென்ற இவர்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிறகு, எடப்பாடி - ஓ.பி.எஸ் என அணிகள் பிளவுபட்டபோது, ஓ.பி.எஸ்-ஸை கடுமையாக விமர்சித்தனர். இரு அணிகளும் இணைந்தபின், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த எம்.எல்.ஏ-க்கள், புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற முதல்வர் எடப்பாடிக்குப் பூங்கொத்து கொடுத்துவிட்டு,  ‘மரியாதை நிமித்தம்’ என்று கூறிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்த தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக் காணவந்த தினகரனைச் சந்தித்து, ‘நாங்கள் உங்கள் பக்கம்தான்’ என்று சொல்லிவைத்தனர். பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில்கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்தவர்கள், ஒரு கட்டத்தில் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு எடப்பாடி பக்கம் சாய்ந்தனர்.

“பஞ்சராகிக் கிடக்குது புதுவை அ.தி.மு.க!” - தலையிடுமா தலைமை?

கடந்த மாதம் நடந்த அரசு விழா மேடை ஒன்றில் அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன், கவர்னர் கிரண் பேடியை நேருக்கு நேர் ‘யூ கோ’ என்று விளாசிய காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்காக நெட்டிசன்களும், நடுநிலையாளர்களும் இவரின் துணிச்சலைப் பாராட்டிய நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரோ, ‘நாராயணசாமியின் கைக்கூலியாக செயல்படுகிறார்’ என்று அவரை விமர்சித்தார். அன்பழகன் ஆதரவாளர்களோ, “ஓ.பி.எஸ் தர்மயுத்தம் அறிவித்தபோது, அவருக்கு முதல் ஆதரவுக்குரல் எழுப்பியவர்தான் ஓம் சக்தி சேகர். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்காக, ஜெ. பேரவையின் மாநிலச் செயலாளராக இருந்த இவரின் பதவியும் அப்போது ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது” என்று இவரைச் சாடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் “அன்பழகன் தலைமையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸுக்குத் தாவப்போகிறார்கள். அதனால்தான், அவர் நாராயணசாமிக்கு ஆதரவாக கிரண் பேடியைக் கடுமையாக விமர்சிக்கிறார்” என்று தகவல் திடீரென பரபரத்தது. இந்த விவகாரங்கள், புதுச்சேரி அ.தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

“பஞ்சராகிக் கிடக்குது புதுவை அ.தி.மு.க!” - தலையிடுமா தலைமை?

அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “எட்டுவழிச் சாலை அமைந்தால் வாகனங்களின் தேய்மானம் குறையும் என்று சட்டப்பேரவையில் பேசுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி. வாகனங்களின் டயர்கள் தேய்கின்றன என்று கவலைப்படும் அவர், புதுச்சேரியில் பஞ்சராகிக் கிடக்கும் தன் கட்சியைப் பற்றி கவலைப்படவில்லை. கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் தலைவிரித்தாடுகிறது. நாராயணசாமி ஆட்சிக்கு வந்து உருப்படியான மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. அதை விமர்சித்துப் பேசவோ, கூட்டம் போடவோ சரியான மாநிலச் செயலாளர் இல்லை. அ.ம.மு.க-வுடன் ஒப்பிடும்போது, எங்கள் கட்சி பலவீனமாக உள்ளது. இதைப்பற்றி பலமுறை தலைமைக்கு புகார் கொடுத்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கட்சியை வழிநடத்தும் தகுதியுள்ள புதிய மாநிலச் செயலாளரை உடனே நியமிக்க வேண்டும். இல்லையென்றால், அம்மா வளர்த்த கட்சி கண்ணெதிரில் கரைவதை வேடிக்கைதான் பார்க்க வேண்டும்” என்றனர் ஆதங்கத்துடன்.

- ஜெ.முருகன், படங்கள்: அ.குரூஸ்தனம்