பிரீமியம் ஸ்டோரி

மிழக அரசியலில் குழப்பக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. வழக்கம்போல வைகோதான் வைரல். தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னமும் சூடுபிடிக்கும். இப்படி சண்டையும் சச்சரவுமாக இருந்தால் கட்சிகள் எப்போது கூட்டணி வைப்பது,  எப்போது மக்களைக் கவர்வது... அதன்பின் எப்போது ஆட்சியைப் பிடிப்பது? இந்த வேலைகள் சுளுவாக முடிய கட்சிகள் சிலபல நடிகர்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

ஐடியா அய்யனாரு!

அ.தி.மு.க - அஜித்
அஜித்தும் ஓ.பி.எஸ்-ஸும் ஒரே மாதிரி ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். இப்போது இரு தரப்பையும் இணைக்கும் விஷயமாக இருக்கிறது ஹெலிகாப்டர். இப்போதுகூட ஒரு ஹெலிகாப்டர் நிறுவனத்தோடு ஆலோசனை நடத்தினாராம் அஜித். தவிர, அஜித் பிரியாணி நன்றாகச் சமைப்பார். பொதுக் கூட்டங்களில் பிரியாணி பொட்டலம் கொடுக்க உதவியாக இருக்கும். இவ்வளவு தகுதிகள் இருப்பவரை அ.தி.மு.க மிஸ் பண்ணவே கூடாது!

தி.மு.க - சமுத்திரக்கனி
கூட்டணியில் அதிக ஒட்டு வேலைகள் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆளாளுக்குப் பிரிந்துபோவதைத் தடுக்க அண்ணன் சமுத்திரக்கனியை இறக்கினால் போதும். ‘தோழமைன்னா தோசை மாதிரி, எப்படி திருப்பிப் போட்டாலும் ஒரே மாதிரி இருக்கும், கூட்டணின்னா குலோப் ஜாமூன் மாதிரி.. லைட்டா அழுத்தினாலும் சிதைஞ்சிடும்’ என அவரின் டிரேட்மார்க் ஸ்டைலில் பேசினால்... அவரது பேச்சை நிறுத்துவதற்காகவேனும் பிரிந்தவர் கூடுவர்.

பா.ம.க - டெல்லி கணேஷ்
‘தமிழன்’ படத்தில் இளைய தளபதியாக இருந்த விஜய்யை சிகரெட்டை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்துவார் டெல்லி கணேஷ். ‘அவ்வை சண்முகி’ படத்தில் அவ்வை சண்முகிக்கும் ஜெமினி கணேஷனுக்குமான கலப்புக் காதலை கடுமையாக எதிர்ப்பார். இப்படியாக பா.ம.க-வின் கொள்கைகளோடு பச்சக்கென பொருந்திப் போவதால் டெல்லி கணேஷை பயன்படுத்திக்கொள்ளலாம்.

காங்கிரஸ் - கணேஷ் வெங்கட்ராம்

பார்க்க அசப்பில் ராகுலைப்போலவே குழந்தை முகமாக இருக்கிறார். கோபமோ, வருத்தமோ ரியாக்‌ஷனும் ராகுலைப் போலவே. எப்படியும் தேர்தல் சமயத்தில் ராகுல் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் போகவேண்டியது இருக்கும். அவரால் போக முடியாத இடங்களுக்கு இவரை அனுப்பலாம்.

பி.ஜே.பி - எஸ்.வி.சேகர், அஸ்வின்சேகர், விசு மற்றும் பலர்
இன்றைய தேதியில் எஸ்.வி.சேகர், விசு, கங்கை அமரன், அஸ்வின் சேகர் என அதிக சூப்பர் ஸ்டார்கள் இருப்பது இந்தக் கட்சியில்தான். சூப்பர் ஸ்டாரே இங்கு இருப்பதாகத்தான் பேச்சு. ஆனாலும், மைலேஜ் எடுபடாமல் தவழ்கிறது தமிழக பி.ஜே.பி. அநேகமாக அடுத்து ஹாலிவுட்டில்தான் ஆள் தேட வேண்டியிருக்கும். என்ன செஞ்சு என்ன? பாலா இருந்தா பொங்கும்... பச்சத் தண்ணி எப்படிப் பொங்கும்?! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு