Published:Updated:

தி.மு.க தனித்து நின்றால்... அது விஷப்பரீட்சை! - எச்சரிக்கும் திருமாவளவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தி.மு.க தனித்து நின்றால்... அது விஷப்பரீட்சை! - எச்சரிக்கும் திருமாவளவன்
தி.மு.க தனித்து நின்றால்... அது விஷப்பரீட்சை! - எச்சரிக்கும் திருமாவளவன்

தி.மு.க தனித்து நின்றால்... அது விஷப்பரீட்சை! - எச்சரிக்கும் திருமாவளவன்

பிரீமியம் ஸ்டோரி

நாடாளுமன்றத் தேர்தல் கண்ணுக்கெட்டுகிற தூரத்தில் தெரிவதற்கு முன்பே, தமிழகத்தில் கூட்டணிக் குளறுபடிகள் ஆரம்பித்துவிட்டன. ‘தி.மு.க கூட்டணியில் இருக்கிறோமா... இல்லையா?’ என்று தெரியாமல் கடந்த சில நாள்களாகத் தவித்துவந்த வி.சி.க-வும், ம.தி.மு.க-வும், ‘தோழமையில் இருக்கிறோம்’ என்று இப்போது கூறியுள்ளன. இந்நிலையில், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்தோம்.

‘‘தி.மு.க கூட்டணியைப் பலவீனப்படுத்த பி.ஜே.பி முயற்சி செய்கிறது என்று எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?’’

‘‘வட மாநிலங்களில் சரிந்துவரும் தன் செல்வாக்கை, தென் மாநிலங்களில் ஈடுகட்ட பி.ஜே.பி முயற்சி செய்கிறது. சபரிமலை பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி, கேரளாவில் ஆட்சி செய்துவரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலையை மக்களிடையே உருவாக்கிவருகிறார்கள். தமிழ்நாட்டில், அ.தி.மு.க ஏற்கெனவே உடைந்துபோயிருப்பதால், அதுபற்றி அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. தி.மு.க-வும், அதன் தோழமைக் கட்சிகளும்தான் பலமான எதிர்க்கட்சிகளாக உள்ளன. எனவே, இந்தக் கூட்டணி உருவாகிவிடக் கூடாது என்று ஒரு வியூகமே வகுத்து பி.ஜே.பி செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் ஒருசேர ஓரம்கட்டுவதற்கான பி.ஜே.பி-யின் இந்த முயற்சியில் ரஜினி, கமல் போன்றோரைக் கையில் எடுத்துக்கொள்ளவும் அல்லது புதிதாக வேறு ஒரு நபரை களத்தில் இறக்கிக் கைகோத்துக்கொள்ளவும் அவர்கள் தயாராக உள்ளனர். காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி உருவாகிவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம்.’’

தி.மு.க தனித்து நின்றால்... அது விஷப்பரீட்சை! - எச்சரிக்கும் திருமாவளவன்

‘‘பி.ஜே.பி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘அரசியலைப் பொறுத்தவரையில், ஒரு கட்சியின் அணுகுமுறை களையும் அறிக்கைகளையும்தான் ஆதாரமாகக் காட்டமுடியுமே தவிர, ஆவணங்களையெல்லாம் காட்ட முடியாது. அண்மையில், ராஜபக்‌சே இந்தியாவுக்கு வந்திருந்தபோது, இறுதிப் போரில் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் உதவி குறித்துப் பேசவைத்ததேகூட இந்த முயற்சியின் ஓர் அங்கம்தான்.

சபரிமலை விவகாரத்தில், கேரள காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி-யின் நிலையைத்தான் எடுத்திருக்கிறது என்பதால் அங்கே அரசியல் செய்ய வழியின்றி, காங்கிரஸ் ஆளுகின்ற புதுச்சேரியில் வந்து காங்கிரசுக்கு எதிராக பந்த் போராட்டம் நடத்துகிறார்கள். ஆக, புதுச்சேரியில் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதை இங்கே தமிழ்நாட்டில் காங்.-தி.மு.க கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியாகத்தானே பார்க்க முடியும்! இதுமட்டுமல்ல... தி.மு.க தோழமைக் கட்சிகளான வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் இடதுசாரிகளைத் தொடர்ந்து குறிவைத்து அவர்கள் விமர்சித்துவருவதேகூட இதற்கான ஆதாரங்கள்தான்!’’

‘‘ ‘சாதிய ரீதியிலான படுகொலைகளைக் கண்டிப்பதில், தி.மு.க உறுதியான நிலைப்பாடு எடுப்பதில்லை’ என்று நீங்கள் பொதுக்கூட்டங்களில் பேசிவருவதும், கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்களே?’’

‘‘வெண்மணி படுகொலையில் ஆரம்பித்து தொடர்ச்சியாகத் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் சாதிய வன்கொடுமைகளைப் பற்றி பெரிய கட்சிகளே, கருத்து சொல்லக்கூட முடியாத நெருக்கடி நிலைதான் இங்கு இருக்கிறது என்று பேசியிருக்கிறேன். மற்றபடி, தி.மு.க என்று குறிப்பிட்டு எந்த இடத்திலும் பேசவில்லை. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலித் எம்.எல்.ஏ-க்களேகூட, இந்தச் சாதிய இறுக்கம் குறித்துப் பேசமுடியாத அளவுக்கு ஓர் அச்ச உணர்வு இங்கு இருக்கிறதுதானே!’’

‘‘தி.மு.க கூட்டணி குறித்து கேள்வி எழுந்துவரும் சூழலில், டி.டி.வி.தினகரனை நீங்கள் சந்தித்ததும், மறுநாளே மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியதும் கூட்டணி குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறதே?’’

‘‘புயல் பாதித்த பகுதிகளில் மக்களைச் சந்திக்க வந்த இடத்தில், டி.டி.வி.தினகரனை ஏதேச்சையாகச் சந்தித்துப்பேச நேரிட்டது. அடுத்ததாக, கூட்டணி குறித்து இப்போது எழுந்துள்ள விவாதங்களுக்கு முன்பே, எங்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும்விதமாக மு..க.ஸ்டாலினைச் சந்தித்துப்பேச நேரம் கேட்டிருந்தோம். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றக் கூட்டத்தொடர், வி.சி.க-வின் ‘தேசம் காப்போம்’ மாநாடு, தி.மு.க நடத்தவிருக்கிற கருணாநிதி சிலை திறப்பு விழா என வரும் டிசம்பர் மாதத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகள் உள்ளன. இந்த நிலையில், மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பது மற்றும் நிகழ்ச்சி நிரல் அமைப்பு தேதிகளை முடிவுசெய்வது தொடர்பாக மட்டுமே மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினேன்.’’

‘‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தனித்துக் களம்காணும் முடிவில் இருப்பதால்தான், கூட்டணிக் கட்சிகள் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘தி.மு.க தனித்து நின்றால் ஜெயித்துவிடலாம் என்பது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அது ஒரு விஷப் பரீட்சை!  தோழமைக் கட்சிகள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தி.மு.க தலைமைக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், தொகுதிப் பங்கீட்டின்போது, கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களைப் பங்கீடு செய்வதில் நமக்கு நெருக்கடியோ, இக்கட்டோ நேரலாம் என்ற தயக்கம் வேண்டுமானால் தி.மு.க-வுக்கு இருக்கலாம். இது என் யூகம். ஆனாலும், ‘இந்தமுறை தோழமைக் கட்சிகளை நாம் இழந்துவிட வேண்டாம். வாக்குகளைச் சிதறடிக்க அனுமதித்துவிடக் கூடாது’ என்பதில் தி.மு.க தலைமை உறுதியாக இருப்பதை என்னால் உணரமுடிகிறது.’’

- த.கதிரவன்
படம்: ப.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு