Published:Updated:

` கரும்புள்ளி ஆகிவிடக் கூடாது!'  - சமரசப் பேச்சால் சமாதானமான அழகிரி

அங்கு நாம் போட்டியிட்டு, தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியொரு நெருக்கடியை நாம் தர வேண்டியதில்லை.

` கரும்புள்ளி ஆகிவிடக் கூடாது!'  - சமரசப் பேச்சால் சமாதானமான அழகிரி
` கரும்புள்ளி ஆகிவிடக் கூடாது!'  - சமரசப் பேச்சால் சமாதானமான அழகிரி

` திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என்ற முடிவை எடுத்திருக்கிறார் மு.க.அழகிரி. ` தலைவர் வென்ற தொகுதியில் என்னால் ஒரு பங்கம் வந்துவிடக் கூடாது' என ஆதரவாளர்களிடம் அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, வரும் 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. `கஜா புயல் பாதிப்பால், தேர்தலை நடத்தக் கூடிய சூழல் அங்கு இல்லை' என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தார் சி.பி.ஐ கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா. இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து அறிக்கை கேட்டுள்ளது ஆணையம். இதுகுறித்து இன்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், ` திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கியப் பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நடந்து வரும் நேரத்தில், திடீரென இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தி.மு.க-வினர் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடத்தினார் ஸ்டாலின். முடிவில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை வேட்பாளராக அறிவித்தார். அவரும் இன்று காலையிலிருந்தே தீவிர பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார். இந்த நிலையில், `தி.மு.க-வுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் மு.க.அழகிரி போட்டியிடுவார்' என்ற தகவல் வெளியானது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கவலையடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அழகிரியிடமே நேற்று முன்தினம் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தினர். அப்போது, ` இந்தத் தேர்தலில், குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயை செலவழிக்கவும் ஆளும்கட்சி தயங்காது. அவர்களது நடவடிக்கைகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இந்த முறை தி.மு.க-வுக்கு கடுமையான நெருக்கடிகளை அ.தி.மு.க தரும். அப்பா வென்ற தொகுதியில் நாம் தோற்றுவிட்டால், அது நம்மீது மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்திவிடும்' என விளக்கியிருக்கிறார் குடும்ப உறுப்பினர் ஒருவர். இந்தக் கருத்துகளை அழகிரி உள்வாங்கிக் கொண்டார். 

இதை நேற்று தன்னைச் சந்திக்க வந்த திருவாரூர் தொகுதி பிரமுகர்களிடம் விளக்கிக் கூறியிருக்கிறார். ` களத்தில் நீங்கள் இறங்க வேண்டும், உங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு' எனக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த அழகிரி, ` அது தலைவர் தொகுதி. அவர் போட்டியிட்டு வென்ற தொகுதி. மீண்டும் அங்கு உதயசூரியன் வெற்றி பெற வேண்டும். அங்கு நாம் போட்டியிட்டு, தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியொரு நெருக்கடியை நாம் தர வேண்டியதில்லை. நாம் சற்று பொறுமையாக இருப்போம். இப்படியொரு சூழலில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. தேர்தலில் போட்டியிடும் யாருக்கும் நாம் சப்போர்ட் செய்ய முடியாது. நம்மால் ஒரு பங்கம் வந்துவிட்டால், அது கரும்புள்ளியாகிவிடும். நீங்களும் என் பெயரைப் பயன்படுத்தி, எதுவும் செய்துவிட வேண்டாம்' என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரி ஆதரவாளர் ஒருவர், `` திருவாரூர் தொகுதியில் துரை தயாநிதி போட்டியிடுவார் என்றெல்லாம் தகவல் வெளியாகியிருந்தது. தி.மு.க-வுக்குத் தன்னுடைய வலிமையைக் காட்ட வேண்டும் என நினைத்தார் அழகிரி. குடும்பத்தில் அவர் மதிக்கும் சிலரிடம் இருந்து சமாதானப் பேச்சு வந்ததால், அமைதியாகிவிட்டார். மீண்டும் அண்ணனைக் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், தி.மு.க தலைமைக்கு இதுபற்றிய சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை' என்றார் ஆதங்கத்தோடு.