Published:Updated:

திருவாரூர்.. தி.மு.க-வின் கோட்டை.. கைப்பற்றுமா ஆளுங்கட்சி? #VikatanInfographics

தமிழ்நாட்டின் திருவாரூர் தொகுதிக்கும், ஹரியானா மாநிலத்தின் ஜின்ட் தொகுதிக்கும் ஜனவரி 28-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

திருவாரூர்.. தி.மு.க-வின் கோட்டை.. கைப்பற்றுமா ஆளுங்கட்சி? #VikatanInfographics
திருவாரூர்.. தி.மு.க-வின் கோட்டை.. கைப்பற்றுமா ஆளுங்கட்சி? #VikatanInfographics

னவரி 25, 2016. திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் அப்போதைய தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான கருணாநிதி. 2011 சட்டமன்றத் தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியை வெற்றிபெறச் செய்ததுபோல, 2016 தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம்' என மேடையில் முழங்கினர் தி.மு.க. பொறுப்பாளர்கள். 

இறுதியாகப் பேசினார் கருணாநிதி, ``உடல் நலிவுற்ற நிலையில் பேசக்கூட முடியாத சூழ்நிலையில் இருந்தேன். திருவாரூர் என்னைப் பேச வைத்துவிடும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என்ற கருத்தை உறுதிப்படுத்துங்கள். இதைப் பொதுமக்களிடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்லுங்கள்" என்று அந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துப் பேசினார். 

அந்தத் தேர்தலில் திருவாரூரில் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றார் கருணாநிதி. எனினும் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனது. உடல் நலிவுற்று, ஓய்வில் இருந்தவர், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலமானார். திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் காலியானது. ஆறு மாதங்களுக்குள் புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அந்தத் தொகுதியில் ஜனவரி 28 அன்று இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஹரியானா மாநிலத்தின் ஜின்ட் தொகுதிக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவருடைய தலைமையில் தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல் இது. தவிர, கருணாநிதியின் சொந்தத் தொகுதியில் நடக்கும் தேர்தல் என்பது கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியது. சுமார் மூன்றாண்டுகளுக்கு முன், தன் தந்தைக்காகப் பிரசாரம் செய்ய வந்தார் மு.க.ஸ்டாலின். அப்போது, ``இது கருணாநிதிக்குச் சொந்த மண் என்றால், எனக்கும் சொந்த மண்தான். என் சொந்தங்களிடம் உரிமையோடு வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன்." என்று பிரசாரம் செய்தார். 

தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வேட்டையைத் தொடங்கியுள்ளன. தி.மு.க. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன்.மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் மகள் செல்வி எனப் பலரும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நட்சத்திரத் தொகுதியாகக் கருதப்பட்ட திருவாரூர் தொகுதி, தி.மு.க-வின் மாவட்டச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

திருவாரூர் தொகுதி 2011-ம் ஆண்டில் தனித்தொகுதியிலிருந்து பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் போட்டியிட்டு வென்றார் கருணாநிதி. கருணாநிதி போட்டியிடுவதற்கு முன், 2006-ம் ஆண்டுக்குப் பின் நடந்த மூன்று தேர்தல்களிலும், தி.மு.க-தான் வெற்றிபெற்றது. 1996-ம் ஆண்டுக்கு முன் நடத்தப்பட்ட தேர்தல்களில் தி.மு.க - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த ஐம்பது வருடங்களாகத் திருவாரூர் தொகுதியில் திமுக - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகள் வென்றதே இல்லை. அ.இ.அ.தி.மு.க வுக்குப் பெரும் சோதனையாகத் திருவாரூர் களம் அமையும். 

2006-ம் ஆண்டுக்குப் பின் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சி வென்றுள்ளது. 2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சியில் நடத்தப்பட்ட 11 இடைத்தேர்தல்களில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வென்றது. 2011-க்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் 7 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் வென்றது உட்பட அனைத்திலும் அ.இ.அ.தி.மு.க-வே வெற்றி பெற்றது. 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் டி.டி.வி. தினகரன். எனினும் அவரும் ஜெயலலிதாவை முன்னிறுத்தியே பிரசாரம் செய்தார். ஆளுங்கட்சியாக அ.இ.அ.தி.மு.க இருப்பது தி.மு.க-வுக்குப் பெரிய சவாலாக அமையும். 

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு இந்த இடைத்தேர்தலில் சவாலாக அ.ம.மு.க. இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளிடையேதான் மும்முனைப் போட்டி நிலவும் என்று தெரிகிறது. `திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

மறைந்த தலைவரின் தொகுதியைத் தி.மு.க கைப்பற்றுமா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அடைந்த தோல்வியைச் சரிசெய்யவும், கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மதிப்பையும் அ.இ.அ.தி.மு.க பெறுமா, மீண்டும் ஆர்.கே.நகர் பார்முலா அ.ம.மு.க வுக்கு உதவுமா என்பதைத் திருவாரூர் மக்கள் முடிவு செய்வார்கள்.