Published:Updated:

`இப்படிக்கு, பசியாறிய 16 கிராமங்கள்!' - கனிமொழியை நெகிழவைத்த பிறந்தநாள் வாழ்த்து #Kanimozhi

`இப்படிக்கு, பசியாறிய 16 கிராமங்கள்!' - கனிமொழியை நெகிழவைத்த பிறந்தநாள் வாழ்த்து #Kanimozhi
`இப்படிக்கு, பசியாறிய 16 கிராமங்கள்!' - கனிமொழியை நெகிழவைத்த பிறந்தநாள் வாழ்த்து #Kanimozhi

தி.மு.க மகளிரணித் தலைவி கனிமொழி இன்று 51-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து பொது வாழ்க்கையில் பரபரவென இயங்கிக்கொண்டிருக்கும் பெண் அரசியல்வாதி.


 

தி.மு.க-வின் மகளிரணித் தலைவி, மாநிலங்களவை உறுப்பினர் இப்படிதான் பலருக்கும் கனிமொழியைத் தெரியும். ஆனால், வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் கனிமொழி  கலை, இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் உடையவர். கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி உள்ளிட்டவை அவரின் கவிதைத் தொகுப்புகள். பாம்பே ஜெயஸ்ரீயுடன் இணைந்து சிலப்பதிகாரம் என்னும் இசைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். 


 

மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் பேசும் நேர்த்தியைத் தொண்டர்கள் கொண்டாடுவதுண்டு. நாடாளுமன்றம் ஆகட்டும், மேடைப் பேச்சுகள் ஆகட்டும், தான் கூற வரும் கருத்தை தாழ்மையான அதே சமயம் அழுத்தமான குரலில் பதிவு செய்வதுதான் இவரின் தனிச்சிறப்பு. பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது கனிமொழிக்கு வழங்கி கௌரவப்படுத்தியது. 


 

மிகவும் பரபரப்பாக இயங்கிவந்த கனிமொழி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அரசியல் நடவடிக்கைகளில் சற்று தொய்வடைந்தார். ஆனால், கஜா புயல் ஆடிய கோர தாண்டவம், கனிமொழியை மீண்டும் களத்தில் நிறுத்தியது. டெல்டா மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்துள்ளார். கஜா புயல் பாதிப்புக்கு மறுநாளே  10,000 கிலோ அரிசி, 5,000 கிலோ பருப்பு, 5,000 கிலோ எண்ணெய் என உணவுப் பொருள்களை லாரிகள் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். குறிப்பாக பேராவூரணி பகுதி மக்களுக்கு  இவர் செய்த உதவி அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. 


 

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமொழி பிறந்தநாளான இன்று அவருக்காக வைக்கப்பட்ட பேனர்களே அம்மக்களின் அன்பைப் பிரதிபலிக்கிறது. ``எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக அறிகிறேன். கழகத் தோழர்கள் இதைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்த நாளைக் கொண்டாடும் எண்ணம் இல்லை. நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு நேரில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கனிமொழி. ஆனாலும், தொண்டர்கள் அவரின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அன்னதானம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து எளிய முறையில் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.  


 

கனிமொழியின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் கருணாநிதி சி.ஐ.டி காலணி இல்லத்துக்கு வந்து தன் செல்ல மகளை வாழ்த்துவார். அதன் பின்னர் தொண்டர்கள் கேக் வெட்டிக் கொண்டாடி, வாழ்த்துக் கூறி அன்பளிப்புகளைக் கொடுப்பார்கள். கடந்த ஆண்டும் கனிமொழியின் பிறந்தநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து வாழ்த்துச் சொன்னார். ஆனால், இம்முறை எந்தவித கொண்டாட்டங்களிலும் கனிமொழி ஆர்வம் காட்டவில்லை.

இன்று காலை, தூங்கி எழுந்ததுமே யாரிடமும் சொல்லாமல், கருணாநிதியின் சமாதிக்கு வந்த கனிமொழி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பின்னர் எந்தவித கொண்டாட்டமும் நடைபெறவில்லை.   

தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கனிமொழிக்காகப் பேனர்கள் வைத்திருந்தாலும், ``கலைஞரின் மறுவுருவே; கருணையின் திருவுருவே; வாழிய பல்லாண்டு! - இப்படிக்குப் பசியாறிய 16 கிராமங்கள்’’ என்று  செறுவாவிடுதி, மடத்திக்காடு, உப்புவிடுதி, திருச்சிற்றம்பலம், ஈச்சன்விடுதி, புனல்வாசல், மேலக்காடு, கீழக்காடு, நரியங்காடு, நடுவிக்கோட்டை உள்ளிட்ட 16 கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் அதிக கவனம் பெற்றுள்ளது. ஆணாதிக்கம் மிக்க அரசியல் களத்தில், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண் அரசியல்வாதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!