Published:Updated:

`வேட்பாளர் அறிவிக்காவிட்டால் அச்சப்படுவதாக அர்த்தமா?’ - எடப்பாடி பழனிசாமி எதிர்க்கேள்வி

`வேட்பாளர் அறிவிக்காவிட்டால் அச்சப்படுவதாக அர்த்தமா?’ - எடப்பாடி பழனிசாமி எதிர்க்கேள்வி
`வேட்பாளர் அறிவிக்காவிட்டால் அச்சப்படுவதாக அர்த்தமா?’ - எடப்பாடி பழனிசாமி எதிர்க்கேள்வி

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். 

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய 10-ம் தேதி கடைசித் தேதியாகும். தி.மு.க மற்றும் அ.ம.மு.க சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அக்கட்சிகள் தேர்தல் பணியை முடுக்கிவிட்டிருக்கின்றன. இந்தநிலையில், அ.தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணலை நடத்தினர். 

நேர்காணலுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 52 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், 45 பேர் இன்றைய நேர்காணலில் கலந்துகொண்டிருந்த நிலையில், 7 பேர் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ளவில்லை என்று கூறி கட்சித் தலைமை வேட்பாளராக யாரை அறிவித்தாலும் ஏற்பதாகக் கடிதம் கொடுத்திருந்தனர். நிர்வாகிகள் முன்னிலையில் நேர்காணலை நடத்தி முடித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவார்’ என்றார். திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், `எப்போது தேர்தலை நடத்தினாலும், அதை எதிர்கொண்டு அ.தி.மு.க வெற்றிபெறும்’’ என்றார்.

வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்படக் காரணம் மற்றும் இடைத்தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க அச்சப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``வேட்புமனுத் தாக்கல் செய்ய 10-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. வேட்பாளரை அறிவிக்காவிட்டால், உடனே தேர்தலைக் கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? உரிய நேரத்தில் தலைமை சார்பாக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும். அதேபோல், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சரித்திர சாதனையை அ.தி.மு.க படைக்கும்’’ என்றார்.