Published:Updated:

`இடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்!’ - முதல்வரை சந்தித்த பின்னர் தமிழிசை பேட்டி

`இடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்!’ - முதல்வரை சந்தித்த பின்னர் தமிழிசை பேட்டி
`இடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம்!’ - முதல்வரை சந்தித்த பின்னர் தமிழிசை பேட்டி

'திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் இடைத்தேர்தல், வரும் 28-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தி.மு.க, அ.ம.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் அறிவித்துவிட்டன. பூண்டி கலைவாணனை தி.மு.க-வும், எஸ்.காமராஜை அ.ம.மு.க-வும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் நேர்காணல் முடிவடைந்த நிலையில், ஓரிரு நாள்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருவாரூர் இடைத்தேர்தலைத் தள்ளிவைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத் தேர்தல் ஆணையம், திருவாரூர் நிலைமைகுறித்து அறிக்கை தாக்கல்செய்துள்ளது. 

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது, ``திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது. திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம்  அல்லது நடக்காமலும் போகலாம். இடைத்தேர்தலைவிட மக்களந்த் தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணிகுறித்து விவாதிக்கப்படவில்லை" என்று கூறினார். 

தமிழிசையைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிவருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில், அது தொடர்பாக இருவரும் முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.