Published:Updated:

கஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி!
கஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி!

படங்கள்: பா.பிரசன்னா

பிரீமியம் ஸ்டோரி

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருள்களை எடுத்துச் சென்றவர்களை ஆளும் கட்சியினர் தாக்கி, பொருள்களைப் பறித்துச்சென்ற சம்பவம் அ.தி.மு.க அரசுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. இப்போது, அதேபோன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள் நாகை மாவட்ட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் சிலர்.

புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தாசில்தார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்படித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அமைச்சர்களின் வாகனங்களில் செல்வதாலும், அமைச்சர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், அவர்களைக் கைதுசெய்ய முடியாமல் தவிக்கிறது காவல் துறை.

சில நாள்களுக்கு முன்பு வேதாரண்யத்தில் உள்ள புயல் நிவாரண முகாம்களுக்கு உணவுப் பொருள்களை ஏற்றிவந்த லாரியை அ.தி.மு.க பிரமுகரான கதிர்வேல் தலைமையிலான கும்பல் ஒன்று வழிமறித்து, பொருள்களை அபகரித்தது. அங்கு வந்த தாசில்தார் ஸ்ரீதர், துணை தாசில்தார் மற்றும் இரண்டு அலுவலர்களைத் தாக்கியதுடன், தாசில்தாரின் வாகனத்தையும் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது.

கஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி!

இன்னோர் இடத்தில், புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கீழ்வேளூர் வட்டம், அகரகடம்பனூர் வி.ஏ.ஓ-வான செல்வியை ஆளும் கட்சியினர் தாக்கியுள்ளனர். செல்வி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “போன மாதம்தான் இந்த ஊருக்கு செல்வி மாற்றலாகி வந்தார். ஒன்றியச் செயலாளர் சிவாவை நேரில் சந்தித்து மரியாதை செய்யுமாறு சிலர் கூறினர். ஆனால், செல்வி போகவில்லை. அதனால், சிவா ஆத்திரத்தில் இருந்தார். புயல் நிவாரண முகாமில் உணவு தயாரிப்புப் பணியில் செல்வி இருந்தபோது, அடியாட்களுடன் வந்து ஊராட்சிப் பணியாளர் ஜெயபாலை சிவா உதைத்தார். அதைத் தட்டிக்கேட்ட செல்வியின் கன்னத்தில் அறைந்து, அவரை எட்டிஉதைத்து, சேலையைப் பிடித்து சிவா இழுத்தார். ராஜேந்திரன் என்பவரும் செல்வியைத் தாக்கினார். உடனே, போலீஸுக்கும் தாசில்தாருக்கும் செல்வி தகவல் கூறினார். இரண்டு மணி நேரம்வரை யாரும் வரவில்லை. கைத்தாங்கலாக செல்வியை ரோட்டுக்கு அழைத்து வந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். செல்வியிடம் புகார் வாங்கி வழக்குப் பதிவு செய்த போலீஸார், யாரையும் கைது செய்யவில்லை” என்றனர்.

கஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி!

ஊர் மக்களிடம் பேசினோம். “அகரகடம்பனூரைச் சேர்ந்த அதிரடிப் பிரமுகரான சிவா, கீழ்வேளூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக உள்ளார். கூட்டுறவு வங்கி தேர்தலில் தன்னை எதிர்த்த பூவிழி பாஸ்கரன் என்ற பெண்மணியைத் தாக்கியதாக இவர் மீது வழக்குப் பதியப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்துக்குத் தனது ஆட்களுடன் சென்ற சிவா, அங்கும் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து தாசில்தார் தையல்நாயகி கொடுத்த புகாரின்பேரில் சிவாவைக் கைது செய்ய போலீஸார் சென்றார்கள். அப்போது, போலீஸாரை சிவாவின் ஆட்கள் சூழ்ந்து கொண்டதால், போலீஸார் திரும்பி வந்துவிட்டார்கள். தற்போதும் போலீஸார் சிவாவைக் கைது செய்யும் முனைப்பில் உள்ளனர். ஆனால், அமைச்சர்களின் கான்வாய் வாகனங்களிலும் அமைச்சர்களின் கார்களிலும் அவர் செல்வதால், போலீஸார் தயங்குகிறார்கள்...” என்றனர்.

இதுகுறித்து சிவாவிடம் கேட்டோம். “பட்டப் பகல்ல பொதுமக்கள் மத்தியில் ஒரு பொம்பளையை அடிக்க முடியுமா? அதெல்லாம் கட்டுக்கதை. அந்த அம்மாகிட்ட, ‘நான் உள்ளுர்க்காரன். எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு மக்களுக்கு உணவு கொடுத்தால் என்ன...’ன்னு கேட்டேன். தாசில்தார் அலுவலகத்துக்குப் போய், ‘நிவாரணப் பணிகளை உடனே செய்யுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு, ‘கொலை மிரட்டல் விடுத்தேன்’ன்னு புகார் செய்யிறாங்க. இந்த வழக்குகளுக்கு எல்லாம் முன்ஜாமீன் வாங்கியிருக்கேன்’ என்றார்.

கஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி!

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன், வருவாய் அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் ஆகியோர், “சிவா கைது செய்யப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். சிவா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அடுத்தகட்டப் போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரித்தனர்.

இதுகுறித்து நாகை மாவட்ட எஸ்.பி விஜயகுமாரிடம் கேட்டபோது, “நிவாரணப் பணியிலும் இங்கு வருகை தரும் வி.ஐ.பி-களுக்குப் பாதுகாப்பு தரும் பணியிலும் இருக்கிறோம். எங்களின் காவலர்களும் தாக்கப்பட்டுள்ளனர். வாகனம் உடைக்கப்பட்டிருக்கிறது. நடவடிக்கை எடுக்கக் காலஅவகாசம் இல்லை. தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில், நால்வரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். சிவாவைக் கைதுசெய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

- மு.இராகவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு