Published:Updated:

‘கல்வித்துறைக்காகத் தனியாக டி.வி சேனல்!’ - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

‘கல்வித்துறைக்காகத் தனியாக டி.வி சேனல்!’ - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
‘கல்வித்துறைக்காகத் தனியாக டி.வி சேனல்!’ - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கல்வித்துறைக்காக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்குவதற்கும், கல்வியாளர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்கின்ற வகையிலும் டி.வி சேனல் ஒன்றை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக, ஈரோடு மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சிறப்பு நோக்குக் கூட்டம், ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் ஈரோடு எம்.பி செல்வக்குமாரசின்னையன் ஆகியோர் கலந்துகொண்டு, 25 தொழில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.630 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டியாகவும், அமைதிப் பூங்காவாகவும் தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தொழிலைத் துவங்குவதற்கு மட்டுமல்லாமல், தங்குதடையில்லாமல் தேவையான மின்சாரம் கிடைப்பதற்கும், சாலை மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அவர்களுக்குச் சிறப்பாக வழங்கக்கூடிய மாநிலமாக தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், தமிழகம் பாதுகாப்புள்ள மாநிலமாக இருக்கின்ற காரணத்தால், அண்டை நாடுகளில் இருந்து தொழில் துவங்குவதற்காகப் பல்வேறு முதலீட்டாளர்கள் வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “கல்வித்துறைக்காக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்குவதற்கும், கல்வியாளர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்கின்ற வகையிலும், டி.வி சேனல் ஒன்றை உருவாக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. சமூக நலத்துறையும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து, அங்கன்வாடிகளில் இருக்கின்ற 51 ஆயிரம் மாணவர்களுக்கும், தமிழகத்தில் இருக்கின்ற மற்ற மாணவர்களின் சேர்க்கை என ஒரு லட்சம் மாணவர்களுக்கு, எல்.கே.ஜி, யூ.கே.ஜி-க்கான வகுப்பறைகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஜனவரி 21-ம் தேதியன்று, தமிழக முதலமைச்சர் அதைத் தொடங்கிவைக்க இருக்கிறார். வருகின்ற ஆண்டில் அதற்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.