மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)

என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)

‘கடுக்காய்’ கொடுக்கிறாரா காமராஜ் எம்.பி?ஓவியம்: கார்த்திகேயன் மேடி

#EnnaSeitharMP
#MyMPsScore

டெங்கு கொசு புண்ணியத்தில் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான் காமராஜ். ‘‘டெங்கு கொசுக்கள் டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கின்றன...’’ என்று கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி எம்.பி காமராஜ் பேசிய பேச்சை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அவர் சொன்னதுபோல டெல்லியிலிருந்து கொசுக்கள் வந்தனவா, இல்லையா என்பது இப்போது விஷயமல்ல... டெல்லியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு என்ன திட்டங்களைக் கொண்டுவந்தார் காமராஜ்? பார்ப்போம்.

‘‘பக்கத்திலேயே கோமுகி அணை இருக்கிறதுதான். ஆனால், எப்போதாவது ஒருமுறைதான் அணை நிரம்பும். இதனால், போதிய தண்ணீர் வசதி இல்லாமல் பின்தங்கிய பகுதியாக கள்ளக்குறிச்சி இருக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தொழிலைக் கைவிட்டு, கட்டட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள். தொகுதியில் மலைவாழ் பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். பழங்குடியினரில், ‘கல்வியறிவில் பின்தங்கியவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று வருவாய்த் துறை அறிவித்தது. ஆனால் வனத்துறையோ, ‘பழங்குடி மக்களுக்கு நிலம் தர முடியாது’ என்று கைவிரித்துவிட்டது. பழங்குடி மக்களுக்கு நிலம் கிடைக்க எம்.பி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழங்குடியினர் சிறு வன மகசூலாக இயற்கையாகக் கிடைக்கும் கடுக்காய்களைச் சேகரித்து, பொடி செய்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவருகிறார்கள். அவர்கள், ‘கடுக்காய் தொழிற்சாலையை அரசு அமைக்க வேண்டும்’ என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்துவருகிறார்கள். எம்.பி காமராஜ் பாராமுகம் காட்டிவருகிறார்’’ என்கிறார் சி.ஐ.டி.யு தொழிற்சங்க விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் வீராசாமி.

என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)

‘‘1919-ம் ஆண்டிலேயே சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்பு, இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 90 கோடி ரூபாயை ஒதுக்கியது. 2007-ல் தி.மு.க அரசு, மாநில அரசின் பங்குத் தொகையாக 40 கோடி ரூபாயைக் கொடுத்தது. பணிகள் இழுத்துக்கொண்டே போனதால், பட்ஜெட்டும் அதிகமாகிவிட்டது. அதனால், கூடுதலாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திட்டம் முழுமையடையவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும். ஆனால், அதற்காக எம்.பி காமராஜ் எதையும் செய்யவில்லை’’ என்று நொந்துகொள்கிறார் தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினரான செல்வநாயகம்.

மக்களிடம் பரவலாகப் பேசியபோது, நிறையப் பிரச்னைகளை அவர்கள் பட்டியலிட்டனர். ‘‘கள்ளக்குறிச்சியை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை. கல்வராயன் மலை உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் மக்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்குப் போக பல கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே, கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் காமராஜ், ‘கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக மாற்றுவேன்’ என்று வாக்குறுதி அளித்த வெற்றிபெற்றார். இதுவரை அதற்காக அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கள்ளக்குறிச்சி முழுவதுமே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதைத் தவிர்ப்பதற்கு, புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அல்லது பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். தவிர, கள்ளக்குறிச்சிக்கு வெளியே ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம். எதையுமே எம்.பி கண்டுகொள்ளவில்லை. கள்ளக்குறிச்சி முழுக்கவே தண்ணீர் பிரச்னை கடுமையாக இருக்கிறது. ஏரிகளில் கிணறு வெட்டி குடிநீர் விநியோகம் செய்யலாம். இதுபோன்ற அத்தியாவசியமானத் திட்டங்களுக்குக்கூடத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியுதவி செய்ய எம்.பி மறுக்கிறார். கள்ளக்குறிச்சி தலைமைப் பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர், செவிலியர்கள் கிடையாது. தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால், அதற்கான மருந்துகள் போதிய அளவில் இல்லை. விஷக் கடிக்கு உள்ளானவர்களை சேலம் மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்குத்தான் அனுப்பி வைக்கிறார்கள்’’ என்று பிரச்னைகளை அடுக்கினார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் சின்னப்பா, ‘‘தொகுதியில் மூன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், இரண்டு தனியார் ஆலைகள் உள்ளன. 2017-18 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு அரசு நிர்ணயித்த விலை 2,750 ரூபாய். ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை ஏமாற்றி, மிகக் குறைந்த விலைக்குக் கரும்பு கொள்முதல் செய்கிறார்கள். கரும்பு வெட்டப்பட்டு 15 நாள்களுக்குள் விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கவேண்டும். ஆனால், ஓர் ஆண்டு கடந்த பின்னரும்கூட, விவசாயிகளுக்குப் பணம் கொடுக்காமல் தனியார் ஆலைகள் ஏமாற்றிவருகின்றன. ‘ஒரு டன் கரும்புக்கு 100 கிலோ சர்க்கரை கிடைத்தால்தான், டன் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த 2,750 ரூபாய் கிடைக்கும்’ என்று மத்திய அரசு அறிவித்தது. வறட்சியான கள்ளக்குறிச்சி தொகுதியில், ஒரு டன் கரும்புக்கு இந்த அளவில் சர்க்கரை கிடைப்பது சாத்தியமில்லை. இது எம்.பி-க்கும் நன்றாகவே தெரியும். இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசவில்லை’’ என்று குமுறுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில், காமராஜுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோற்ற தி.மு.க வேட்பாளர் மணிமாறன், “காய்கறிச் சந்தைக்குப் பெயர்போன இடம் தலைவாசல். அதனால், இங்கு குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. ஆனால், அதை அமைக்கவில்லை. தொகுதியின் மக்கள் தொகையில் கல்வராயன் மலையில் வாழும் மலைவாழ் பழங்குடியினர் நான்கில் ஒரு பங்கு உள்ளனர். பழங்குடியின மக்களுக்காக நிறைய நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், அவர்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட எம்.பி செய்துதரவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில், தொகுதியை எட்டிப்பார்த்ததுகூடக் கிடையாது. அவர் தத்தெடுத்த கா.அலம்பலம் கிராமத்துக்குக்கூட அவர் போகவில்லை’’ என்றார்.

கா.அலம்பலம் கிராம மக்களைச் சந்தித்தோம். ‘‘குடிசை வீடுகளை எல்லாம் கூரை வீடுகளாக்கித் தருவேன், தெருக்களுக்கு சிமென்ட் பாதை போடுவேன் என்றெல்லாம் எம்.பி சொன்னார். எதையுமே அவர் செய்யவில்லை. கழிவுநீர் போகக்கூட வழியில்லாமல் சாக்கடை தேங்கிக் கிடப்பதால், கொசுத்தொல்லை தாங்கமுடிய வில்லை. குடிநீர் இல்லை. இந்த நான்கரை வருடங்களில் ஓரிரு தடவை மட்டுமே எம்.பி எங்கள் ஊருக்கு வந்துள்ளார். ஒருமுறை புதிய தண்ணீர் குழாயைத் திறக்க வந்தவரிடம், மக்கள் திரண்டு பிரச்னைகளைச் சொன்னோம். அப்போது போனவர்தான்... பின்பு இந்த ஊருக்கே வரவில்லை’’ என்றனர் சோகமாக.

எம்.பி காமராஜிடம் பேசினோம். ‘‘கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. தேவையான இடங்களில் பாலம் கட்டும் பணிகளும் நடைபெறுகின்றன. விரைவில் பணிகள் நிறைவடையும். என் தந்தை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது மலைவாழ் மக்களுக்காக, கடுக்காய் தொழிற்சாலையைக் கொண்டுவந்தார். கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் செயல்பட்ட அந்தத் தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியதால், தற்போது செயல்படவில்லை. அந்தத் தொழிற்சாலையை லாபகரமாக நடத்துவதுபற்றி ஆலோசித்துவருகிறேன். கள்ளக்குறிச்சி ரிங்ரோடு அமைப்பதற்கு முன்னோட்டமாக, பாலம் கட்டும் பணிகளுக்கு அளவீடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

கரும்பு விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டுவரை நிலுவைத் தொகை கொடுக்கப்பட்டுவிட்டது. விடுபட்டிருந்தால், பேசி நடவடிக்கை எடுக்கிறேன். குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்க, தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்குவது சாத்தியமல்ல. கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது தனியார் நிறுவனத்தினர் தலைவாசலில் காய்கறிகளைச் சேமித்து வைக்கும் குளிர் பதனக் கிடங்கு அமைக்க முன்வந்தால், அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன். தொகுதி முழுக்கவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. ஆனாலும், மாநில அரசு வழங்கும் வறட்சி நிவாரண நிதியிலிருந்து கிணறு மற்றும் போர்வெல் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. தொகுதி முழுக்கவே சாலைகள் போடப்பட்டுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதியில் நியாய விலைக் கடை, பால் சொசைட்டி கட்டடங்கள், நிழற்குடை, உயர் மின்கோபுர விளக்கு வசதி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சியில் மட்டும் காவல்துறைக்காக 17 இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை அமைத்துத் தந்திருக்கிறேன்’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- த.கதிரவன், ஜெ.முருகன்

என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)
என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

ள்ளக்குறிச்சி அண்ணா நகரில் இயங்குகிறது எம்.பி அலுவலகம். ‘70 ஆயிரம் மக்கள் வசிக்கும் கல்வராயன்மலையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மலைவாழ் மக்கள் சமவெளிக்கு வந்து செல்ல பயன்படுத்திய வெள்ளிமலை, பன்னியப்பாடி வழியாக மாயம்பாடி வரும் தார்ச்சாலை திட்டம், காப்புக்காடு என்ற பெயரில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழு கிலோ மீட்டரில் போக வேண்டிய இடத்துக்கு, 40 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. பழைபடி அந்த சாலையில் சென்றுவர அனுமதிக்க வேண்டும்’ என அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், எம்.பி அலுவலகத்தில் மனு அளிப்பதற்காகப் பலமுறை சென்றார். ஆனால், அலுவலகம் பூட்டப்பட்டே கிடந்தது. பிறகு, எம்.பி-யின் உதவியாளர் சொன்னபடி அலுவலக முகவரிக்கு பதிவுத் தபாலில் மனுவை அனுப்பியிருந்தார். அதற்கும் பதில் இல்லை. இந்த மனு பற்றி எம்.பி-யிடம் கேட்டோம். “கோரிக்கையை வனத்துறையிடம் தெரிவித்திருக்கிறேன்” என்றார்.

என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)
என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)
என்ன செய்தார் எம்.பி? - காமராஜ் (கள்ளக்குறிச்சி)