பிரீமியம் ஸ்டோரி
மினி மீல்ஸ்

“ஜெ. ஆட்சியில் பேச முடியவில்லை!”

ஜெ
யலலலிதா உயிருடன் இருந்தபோது அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மட்டுமல்ல, அ.தி.மு.க-வைச் சார்ந்திருந்த பிற அமைப்பின் நிர்வாகிகள் எவரும் வாய் திறந்ததே இல்லை. அவர்களில் ஒருவர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார். அவர், நவம்பர் 28-ம் தேதி ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோது, மக்களின் பிரச்னைகளை எடுத்துச்சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். வரும் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வதற்குச் சமத்துவ மக்கள் கட்சித் தயாராகிவருகிறது. கஜா புயலின்போது, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சிறப்பாகச் செயல் பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பொருள்கள் கிடைக்கவும், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவும் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மின்வாரிய ஊழியர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.

மினி மீல்ஸ்

அதிகாரியிடம் பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!

டிக்கடி சென்னைக்கு வந்துபோகிற கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்குப் பெரிதும் கைகொடுப்பது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில். மாலை 5.20-க்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.50-க்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். திடீரென, சென்னையிலிருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸை, பயணிகள் ரயிலாக மாற்றி கொச்சிவேலிக்குக் கொண்டுசென்றனர். கொச்சிவேலியிலிருந்து கன்னியாகுமரி வந்து அதன்பிறகு சென்னை செல்வது என்று மாற்றினர். இதனால், தினமும் சுமார் இரண்டு மணிநேரம் காலதாமதமாக ரயில் புறப்பட ஆரம்பித்தது. இதைக் கண்டித்து அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தின. உடனே, நவம்பர் 28-ம்தேதி முதல் கொச்சுவேலிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செல்லாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார். ஆனாலும், அந்த ரயில் மறுநாளும் கொச்சுவேலிக்குச் சென்றது. அரசியல் கட்சிகள் மீண்டும் போராட்டம் அறிவித்தன. உடனே, தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம், பொன்.ராதாகிருஷ்ணன் பொங்கிவிட்டார். அதையடுத்து, நவம்பர் 29 முதல் சரியான நேரத்துக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.

மினி மீல்ஸ்

ரங்கசாமியின் ரகசிய யாகம்!

வே
லூர் அருகே செங்காநத்தம் மலைப்பகுதியில் காலபைரவர் கோயில் உள்ளது. இங்கு, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி 30-ம் தேதி ரகசியமாக வந்தார்.அங்கு, பைரவருக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகக் குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்விப் பூஜையில் கலந்துகொண்ட ரங்கசாமி, பைரவருக்கு தீபாராதனை காட்டி வழிபட்டார். இந்தப் பூஜையில் இசையமைப்பாளர் தேவாவும் பங்கேற்றிருந்தார் என்கிறார்கள் அந்த இடத்தில் இருந்தவர்கள். இந்தப் பூஜை குறித்து ரங்கசாமி தரப்பினரிடம் கேட்டபோது, ‘‘இது, சாதாரண பூஜைதான்’’ என்று மழுப்பினர். ரங்கசாமியைப் பூஜைக்கு அழைத்துவந்தவர், வேலூரைச் சேர்ந்த பகவதி சித்தர் என்கிற சாமியார். புதுச்சேரிக்கு அடிக்கடி சென்று ரங்கசாமியை இந்தச் சாமியார் சந்திப்பதுண்டாம். இருவரும் போனில் அடிக்கடி பேசிக்கொள்வார்களாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க முடியாத ரங்கசாமி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கிறாராம். அதற்காக இந்த யாகத்தை நடத்தியிருக்கலாம் என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில்.

மினி மீல்ஸ்

‘‘நாட்டாமையையே விரட்டியவங்க நாங்க..!’’

தூ
த்துக்குடியில் அண்மையில் நடந்த அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பேச்சில் சற்று காரம் அதிகம். அவர், “நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் கனிமொழி நிற்கப்போவதாகச் சொல்கிறார்கள். 1998-ல் தி.மு.க ஆட்சியின்போது, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் சரத்குமார் போட்டியிட்டார். ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றார். நாட்டாமை படம் வெளிவந்து நாட்டாமையாக வலம்வந்த சரத்குமாரையே நாங்கள் விரட்டியடித்தோம். நாட்டாமையை விரட்டிய அ.தி.முக., கனிமொழி மட்டுமல்ல, தி.மு.க சார்பில் யார் நின்றாலும் அவர்களை விரட்டியடிப்போம்” என்றார் கடம்பூர் ராஜு. இவரது பேச்சு தூத்துக்குடி தி.மு.க-வினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.


- செ.செல்மான், இ.கார்த்திகேயன், ஆர்.சிந்து, கோ.லோகேஸ்வரன்
படம்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு