Published:Updated:

“பிரதமர் பிஸி!” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“பிரதமர் பிஸி!” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்
“பிரதமர் பிஸி!” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

“பிரதமர் பிஸி!” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

பிரீமியம் ஸ்டோரி

‘டெல்லியில் நடந்த விவசாயிகளின் பேரணியில் தமிழகத்தின் மானத்தையே வாங்கிவிட்டார்கள்’ என்று கருத்துத் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இதைக் கேட்டு, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கொந்தளித்துப்போயுள்ளனர். இந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ ‘உயிரைவிட மானம் பெரிது’ என்று குறிப்பிடும் நீங்கள், அந்த மானத்தையே விடத் துணியும் அளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் வேதனைகளைப் புரிந்துகொள்ளவில்லையா?’’

‘‘தமிழக விவசாயிகளுக்கு வலியும் வேதனையும் இருக்கிறதென்றால், மற்ற மாநில விவசாயிகளுக்கு அந்த வலியும் வேதனையும் கிடையாதா? தமிழகத்திலேயே எத்தனையோ விவசாயச் சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் எல்லாம் இதுபோல்தான் போராடுகிறார்களா? இன்றைக்கு விவசாயச் சங்கத் தலைவராக இருக்கும் அய்யாக்கண்ணு, இதற்கு முன்பு எங்கள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த வகையில் எனக்கும் பழக்கம்தான். கடந்தமுறை இதே விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, நான் எத்தனையோ முறை அவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இவர்கள் யாருடைய கைப்பாவையாகவோதான் செயல்பட்டுவருகிறார்களே தவிர, விவசாயிகளின் நலனுக்காக உண்மையாகப் போராடவில்லை. போராட்டத்தில், தமிழக விவசாயிகள் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக இதுபோன்று நடந்துகொள்கிறார்கள். உண்மையில் இவர்களின் சிந்தனைகளே வேறு. எந்தப் போராட்டம் என்றாலும், இதுபோல் மானத்தை வாங்கக்கூடிய வகையில் இருக்கக் கூடாது. இது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கான மானப் பிரச்னை. இவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டது ஒட்டுமொத்தத் தமிழர்களையுமே அவமானப்படுத்திவிட்டது’’

“பிரதமர் பிஸி!” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

‘‘ ‘அமைச்சரை, எங்களின் நிர்வாணம் பாதித்த அளவுக்கு, சாமியார்களின் நிர்வாணம் ஏன் பாதிக்கவில்லை...’ என்று அந்த விவசாயிகள் கேட்கின்றனரே?’’

‘‘யார் நிர்வாணமாகப் போவது என்பது இங்கே பிரச்னை இல்லை. யாரின் பிரதிநிதிகளாகப் போய், நிர்வாணப்படுத்துகிறார்கள் என்பதுதான் இப்போது பிரச்னை. அவர்கள் குறிப்பிடுவதுபோல எல்லாச் சாமியார்களும் நிர்வாணமாக இருப்பதில்லை. குறிப்பிட்ட சில சாமியார்கள், ‘நிர்வாண வாழ்க்கை’ என்பதை அவர்களே அமைத்துக்கொண்டார்கள். அவர்களிடம் போய், ‘நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து உடையுடன் டெல்லிக்குச் சென்று, பேரணியில் எல்லோரும் உடையணிந்து செல்லும்போது இவர்கள் மட்டும் ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாகச் செல்வது எந்தவகையில் நியாயம்?’’

‘‘கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிட பிரதமர் வரவில்லை என்பதே தமிழகத்தின் மீதான மத்திய பி.ஜே.பி அரசின் பாராமுகத்தைத்தானே காட்டுகிறது?’’

‘‘உலக நாடுகளுடன் இந்திய நாட்டின் உறவைப் பலப்படுத்த வேண்டியத் தேவை உள்ளது. அவை ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்ட பல்வேறு திட்டங்கள். எனவே, பிரதமர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் ஊடகத்தினருக்கு நன்றாகவே தெரியும். அவரது அன்றாட நடவடிக்கைகள் குறித்த செய்திகளையும் ஊடகத்தினர்தான் வெளியிட்டுவருகிறார்கள். இத்தனைக்கும் மத்தியில், புயல் பாதிப்புகளைக் கண்டறிவதற்கான மத்தியக் குழு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளது. அமைச்சர்கள் வந்துள்ளனர். நிவாரணம் வழங்கிப் பேசியுள்ளனர். இன்னும் வேறென்னதான் செய்வது’’

“பிரதமர் பிஸி!” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

‘‘நீங்கள் என்னதான் நியாயப்படுத்தினாலும், மிகப் பெரிய அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது பிரதமர் வந்து பார்வையிட வேண்டியது அவரது கடமை இல்லையா?’’

‘‘நான் இல்லையென்று சொல்லவில்லை. அதே நேரம், அவர் எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஒருநாளின் பெரும்பான்மை மணி நேரத்தை நாட்டுக்காகவும் நாட்டு  மக்களுக்காகவும் அவர் செலவிடுகிறார். எனவே, அவருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு, பணிச்சூழல் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். பிரதமர் ஒன்றும் சும்மா இருக்கவில்லையே.’’

‘‘இக்கட்டான இந்த நேரத்தில், மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு கட்டவிருக்கும் அணைக்கான ஆய்வுப் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது திட்டமிட்ட செயல்தானே?’’

‘‘அது ஆய்வு அறிக்கைக்கான ஒப்புதல் அல்ல. ‘இப்படியொரு திட்டத்தை எந்த முறையில் நிறைவேற்றத் திட்டமிட்டு ள்ளனர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும், தண்ணீரை எப்படியெல் லாம் பயன்படுத்தப்போகிறார்கள்’ என்பதைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஒப்புதலைத்தான் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. மற்றபடி, மேக்கேதாட்டூவில் அணைக் கட்டுவதில், எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம்.’’

‘‘சரி, கர்நாடக அரசு அணையைக் கட்டிக்கொள்ள மத்திய பி.ஜே.பி அரசு ஒப்புதல் வழங்கினால், தமிழக பி.ஜே.பி அதை உறுதியாக எதிர்க்குமா?’’

‘‘அப்படி ஓர் ஒப்புதலை மத்திய பி.ஜே.பி அரசு கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை!’’

- த.கதிரவன்
படம்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு