Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?

“மீண்டும் மழை தொடங்கலாம். சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மக்களையும் உமது நிருபர்களையும் உஷார் படுத்தும்...” என்ற தகவலுடன் வந்து அமர்ந்த கழுகாரிடம், “நிச்சயமாக... சரி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்க வேலின் பதவியை ஓராண்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி அரசு கோபத்தில் இருக்கிறதாமே?” என்றோம்.

“ஆம், நீதித்துறையில் சிலர் பொன்.மாணிக்கவேலுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் இருப்பதாக எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு ஏற்பாடுகள் நடக் கின்றன. பொன்.மாணிக்க வேலுக்கு எதிராக நிறைய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எடப்பாடி அரசு தயாராகி வருகிறது.”

“என்ன ஆதாரங்கள்?”

“பொன்.மாணிக்கவேல் டி.எஸ்.பி-யாகப் பணியில் சேர்ந்ததில் இருந்து சிலைக் கடத்தல் பிரிவுக்கு வருவதற்கு முன்புவரை, 16 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தியிருக்கிறார். அவற்றை மீண்டும் தோண்டுகிறார்களாம். 1996-ல் டி.எஸ்.பி-யாக மாணிக்கவேல் பணிபுரிந்தபோது, சென்னையில் பாண்டியன் என்கிற ஆடிட்டர் இறந்துபோன விவகாரத்திலும் அவரது பெயர் அடிபட்டது. அதுதொடர்பாகவும் விசாரிக் கிறார்கள். அடுத்து, செங்கல்பட்டில் அவர் பணிபுரிந்தபோது, திருட்டு வழக்கு விசாரணையில் சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையும் தூசு தட்டுகிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?

“அடேங்கப்பா!”

“சிலைக் கடத்தல் வழக்குகளில் எதிலாவது தவறான தகவல்களை நீதிமன்றத் துக்கு பொன்.மாணிக்கவேல் தந்திருக்கிறாரா என்கிற கோணத்திலும் ஆலோசித்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் சுமார் 1,129 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 47 பேர் கைது செய்யப் பட்டனர். இவை தொடர்பான விசாரணையில் திரைமறைவு நிகழ்வுகள் ஏதாவது நடந்தனவா என்று சிலைக்கடத்தல் பிரிவில் பணியாற்றிவிட்டு, பொன்.மாணிக்கவேலுடன் கருத்து வேறுபாட்டால் வேறு பிரிவுக்கு மாற்றலாகிப் போனவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தியது உளவுப் பிரிவு. ஈரோடு மாவட்டத்தில் சாதாரணக் கல்லை, மரகதக்கல் என்று விற்க முயன்ற மோசடிக் கும்பல் ஒன்று சிலைக் கடத்தல் பிரிவிடம் பிடிபட்டது. அந்தக் கல்லின் மதிப்பை லட்சங்களில் மிகைப்படுத்தி மாணிக்கவேல் சொல்லிவிட்டதாக அரசிடம் புகார் வந்துள்ளது. அதே மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கோயில் பிரச்னை. உள்ளூர் முன்விரோதம் காரணமாக, சிலை காணாமல் போனதாகப் பொய் புகார் சிலைக் கடத்தல் பிரிவுக்கு வந்திருக்கிறது. அதை விசாரிப்பதாகச் சொல்லி, அந்தக் கிராமத்தின் இன்னோர் பிரிவினரைக் கைது செய்திருக்கிறார்கள். நடந்த உண்மையை ஈரோடு மாவட்ட போலீஸார் அப்போதே விசாரித்து அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக் கிறார்கள். அதையும் மாணிக்கவேலுக்கு எதிராகக் கிளப்பவிருக்கிறார்கள்.இதில்  பல விஷயங்கள் ஜூ.வி-யில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டவைதான்.”

“பொன்.மாணிக்கவேல் என்ன சொல்கிறார்? அவரை வழக்கில் சிக்கவைக்க ஏற்பாடு நடப்பதாகக் குற்றம்சாட்டினாரே?”

“அதற்குத்தான் உயர் நீதிமன்றம், ‘சிலைக் கடத்தல் பிரிவு அதிகாரிகள் மீதான எந்தப் புகார் வந்தாலும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அவற்றை முதலில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறது. மாணிக்கவேல் தரப்பிலோ, ‘அவர் டி.எஸ்.பி-யாக இருந்தபோது எழுந்த குற்றச்சாட்டுகள் அவை. அவற்றில் உண்மை இருந்தால் மாநில அரசு எப்படி எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி என்று வரிசையாகப் பதவி உயர்வு தந்திருக்கும்? அவை அனைத்தும் பொய் என்று நிரூபித்துத்தானே அவர் பதவி உயர்வு பெற்றிருப்பார். அவரிடம் நேர்மை இருக்கிறது. அதனால், அவரை ஒன்றும் செய்ய முடியாது’ என்று அடித்துச் சொல்கிறார்கள்.”

“தி.மு.க தலைவர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார் போல...”

“ஆம். வரும் 10-ம் தேதி டெல்லி செல்கிறாராம். அவர் மட்டுமல்ல, பி.ஜே.பி-க்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் சந்திக்க உள்ளார்கள். இந்தச் சந்திப்பு ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் வாய்ந்தாகப் பார்க்கப்படுகிறது. ‘கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக டெல்லியில் லாபி செய்யப் போகிறார் ஸ்டாலின். பி.ஜே.பி-க்கு எதிராக வகுக்கப்படும் கூட்டணியில் தி.மு.க-வின் ரோல் என்ன, அடுத்து மத்தியில் ஆட்சி மாறினால் தி.மு.க-வுக்கு கிடைக்கவிருக்கும் முக்கியத்துவம் என்ன என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் திட்டங்கள் வகுக்கப்படும்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?

“சரி, ஸ்டாலினின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா”

“அதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சோனியாவின் தமிழக விசிட் என்னவானது?”

“கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்கிறார் என்பதைத்தான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனே... அவருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கிறார்களாம். கலந்து கொள்பவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்”

“அ.தி.மு.க தரப்பு நாடாளு மன்றத் தேர்தல் வியூகங்களை இதுவரை ஆரம்பிக்க வில்லையே?”

“அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. பி.ஜே.பி-யுடன் கடைசிக் கட்டதில் கூட்டணி அமைத்து விடும் முடிவில் அ.தி.மு.க உள்ளது. ஆனால், தினகரனுடன் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வாக இருந்தால்தான் தனக்குப் பலன் என பி.ஜே.பி நினைக்கிறது. அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில், அ.தி.மு.க அணியில் மேலும் சில கட்சிகளைக் கொண்டுவந்து தி.மு.க-வுக்கு மாற்றாக வலுவான அணியை அமைக்கும் திட்டம் பி.ஜே.பி வசம் உள்ளது. மத்தியில் உள்ள முக்கியப்புள்ளி ஒருவர்தான் இதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.”

“சரி, தினகரன்?”

“டிசம்பருக்குப் பிறகுதான் தேர்தல் வேலைகளை ஆரம்பிப்பார் என்கிறார்கள். அடுத்த வாரம் அவர் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்திக்கிறார். கடந்த வாரமே அவர் பெங்களூரு செல்ல வேண்டியது... ஆனால், சசிகலாவுக்கு லேசாகக் காய்ச்சல் இருந்ததால், பயணம் தள்ளிப்போயிருக்கிறது. விரைவில் வழக்கு ஒன்றில் ஆஜராக, சசிகலா சென்னை வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது” என்ற கழுகார், “ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப் பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஓராண்டு முடிந்து விட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அருண் நடராஜன் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீது விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இன்னொருபுறம் திருத்தணியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ‘சரியான ஆதாரம் இன்றி பணப்பட்டுவாடா குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்’என்று தனியாக ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வழக்கை ரத்து செய்தார்.

இந்த சூழலில் மருதுகணேஷ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை மீண்டும் கடந்த மூன்றாம் தேதி நடந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ‘அ.தி.மு.க நிர்வாகி மனு மீது தனி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து வழக்கை ரத்து செய்தோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதை கேட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். ‘ அறிக்கை தாக்கல் செய்யும்படி நாங்கள் உத்தரவிட்ட நிலையில் ஏன் ரத்து செய்தீர்கள்’ என்று கேட்டதுடன், ‘இதுதொடர்பாக எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்று இரண்டு இணை ஆணையர்கள் தலைமையில் விசாரித்து டிசம்பர் 17-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இதற்கு அடுத்து, பெரியதாக எதுவும் நடக்கலாம். தயாராக இரும்...” என்றபடியே பறந்தார் கழுகார்.

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா?

பொறுப்பேற்றார் சுனில் அரோரா!

த்தியில் வாஜ்பாய் ஆட்சியில் பதவி வகித்து, தொடர்ந்து பி.ஜே.பி ஆட்சியில் உள்ள ராஜஸ்தானிலும் பல பதவிகள் வகித்தவர் சுனில் அரோரா. பஞ்சாப்பைச் சேர்ந்த இவர், 1980 பேட்சைச் சேர்ந்த ராஜஸ்தான் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவரை, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது மத்திய அரசு. 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட நேரத்தில், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மேலாண்மை இயக்குநராக இருந்தவர் இவர். மோடி பிரதமரானவுடன் மத்தியத் திறன் மேம்பாட்டுத் துறைக்குச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2015-ல் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை செயலாளரானார். அங்கே இருந்தவரை மோடி அரசு, 2017 செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று மூன்றாவது தேர்தல் ஆணையராக நியமித்தது. அது திட்டமிட்ட நியமனம் என்று அப்போதே பேசப்பட்டது. அதன் பிறகு ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் ஓய்வுபெற... தற்போது சுனில் அரோரா தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனமாகியுள்ளார்.

மேக்கேதாட்டூ... பதில் தராத மத்திய அரசு

மே
க்கேதாட்டூ பிரச்னை கிளம்பியிருக்கும் நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேக்கேதாட்டூ பிரச்சனையை தமிழக பிரதிநிதிகள் கிளப்பினார்கள். ஆனால், அதற்கு மத்திய அரசு தரப்பில் சரியான பதில் இல்லை. நதிநீர் பங்கீடு குறித்தும் விவாதிக்கப் பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, ஜனவரியில் காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டத்தை கூட்டவிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு