Published:Updated:

` தோற்போம் என அவர்களுக்குத் தெரியும்!'  - தேர்தல் ரத்தின் பின்னணியைக் கூறும் அ.ம.மு.க.

தேர்தலை நிறுத்துவதற்காகத் திட்டமிட்டு நாடகம் போட்டார்கள். அந்த நாடகத்தில் இப்போது வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

` தோற்போம் என அவர்களுக்குத் தெரியும்!'  - தேர்தல் ரத்தின் பின்னணியைக் கூறும் அ.ம.மு.க.
` தோற்போம் என அவர்களுக்குத் தெரியும்!'  - தேர்தல் ரத்தின் பின்னணியைக் கூறும் அ.ம.மு.க.

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ` திருவாரூரில் கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகமாகி, வாக்களிப்பதற்கு முழுவதும் எதிரான மனநிலை உருவாகிவிடும். வருகின்ற நாடளுமன்றத்  தேர்தலுடன் இணைத்து, மினி சட்டமன்றத்தேர்தல் என்று சொல்லுமளவுக்கு காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அ.ம.மு.க-வினர் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்ட நிலையில், ஆணையத்தின் இந்த அறிவிப்பை அவர்கள் வரவேற்கவில்லை. 

அ.ம.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

`` உயர் நீதிமன்றத்தில், ` பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நடத்துவோம்' எனத் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அப்படி அறிவிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும். அதற்காகத் தேர்தல் தேதியை அறிவித்தார்கள். தேர்தல் நடந்தால் திருவாரூரில் தி.மு.க-வும் அண்ணா தி.மு.க-வும் தோற்கும் என்பது அனைவருக்கும் முன்பே தெரியும். இதனை அறிந்து கலெக்டர் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் என அழைத்துப் பேசினார்கள். அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் என அனைவரும் ஒன்று சேர்ந்து, `தேர்தல் நடத்தக் கூடாது' எனக் கோரிக்கை வைத்தனர். தலைமைச் செயலாளரும். தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அதை வைத்துத் தேர்தலை நிறுத்திவிட்டனர். 

நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன், முன்பொருமுறை தலைமைச் செயலாளரிடம் தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாகக் கேட்டபோது, `நடத்தலாம்' என்றார். எந்த அடிப்படையில் அவர் இந்தக் கருத்தைச் சொன்னார் எனக் கேள்வி எழுப்ப வேண்டும். `இந்த விவகாரத்தில் நீங்கள் சொன்னதால்தான் அறிவிப்பு வெளியிட்டோம், இப்போது இப்படியொரு தர்மசங்கடம் நேர்ந்துவிட்டது' எனக் கூறி தலைமைச் செயலாளர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை நிறுத்துவதற்காகத் திட்டமிட்டு நாடகம் போட்டார்கள். அந்த நாடகத்தில் இப்போது வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் திருவாரூரில் தி.மு.க-வும் அண்ணா தி.மு.க-வும் தோற்கும்". 

இந்த நாடகம் எதற்காக எனக் கருதுகிறீர்கள்? 

`` தோல்வி பயம்தான் காரணம்". 

` தோல்வி வந்து சேரும்' என ஆளும்கட்சிக்கு முன்னரே தெரியாதா? 

`` தெரியும். மதுரை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன் காரணமாகத்தான் தேர்தல் தேதி அறிவித்தார்கள். எடப்பாடிக்குத் தெரிந்துதான் தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதலில் தலைமைச் செயலாளர் மூலமாக பாசிட்டிவ்வாக ஒரு லெட்டரும் பின்னர் நெகடிவ்வாக ஒரு லெட்டரும் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் தோற்பார்கள் என்றால், அ.ம.மு.க வெற்றி பெறும் என்றுதானே அர்த்தம்". 

சிறையில் சசிகலாவை, நடிகை விஜயசாந்தி சந்தித்துப் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதே? 

`` எதற்காக இந்த சந்திப்பு எனத் தெரியவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். நட்புரீதியாக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம்".