Published:Updated:

கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுப்பிரிவில் கல்வி, வேலைவாய்ப்பில் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நாளை இதை மசோதாவாக தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இடஒதுக்கீட்டின் பலனைப் பெறாதவர்கள், இதன் கீழ் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதைச் சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரூ.8 லட்சத்துக்குக் கீழ் ஆண்டு வருமானமும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முற்பட்ட சமூகத்தின் வாக்குகளைக் கவரவே இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.