Published:Updated:

`சமூக ஊடகங்கள் பேசுவதைப் பத்திரிகைகளும் பேச வேண்டும்!'- `ராம்நாத் கோயங்கா’ விருதுபெற்ற குணசேகரன்

`சமூக ஊடகங்கள் பேசுவதைப் பத்திரிகைகளும் பேச வேண்டும்!'- `ராம்நாத் கோயங்கா’ விருதுபெற்ற குணசேகரன்
`சமூக ஊடகங்கள் பேசுவதைப் பத்திரிகைகளும் பேச வேண்டும்!'- `ராம்நாத் கோயங்கா’ விருதுபெற்ற குணசேகரன்

ந்திய ஊடக உலகில் தனித்தன்மையோடும் தன்னம்பிக்கையோடும் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு ``ராம்நாத் கோயங்கா'' விருது, கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. 13 வது ஆண்டு விருது வழங்கும் விழா கடந்த 4-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அச்சு, காட்சி, டிஜிட்டல் என 18 பிரிவுகளிலிருந்து 29 பத்திரிகையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

2017-ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளருக்கான விருதுக்கு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒகி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான குமரிக் கடலோரத்தில் களத்தில் இருந்து செயலாற்றி, பிரச்னைகளின் வேர்களைக் கண்டறிந்து, களநிலவரத்தை மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் குணசேகரன். ஒகி புயலின் பாதிப்பையும், மீனவர்கள் சந்தித்த துயரையும் ஒரு மணி நேர ஆவணப்படமாகவும், களத்தில் இருந்து `காலத்தின் குரல்’ விவாத நிகழ்ச்சிகள், தொடர் நேரலைகள் மூலமாகவும் மீனவ மக்களின் துயரை உலகறியச் செய்ததற்காக குணசேகரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

`ராம்நாத் கோயங்கா' விருதை முதன்முறையாகத் தமிழ் ஊடகத்துக்கான பிரிவில் வென்ற குணசேகரனிடம் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளை முன்வைத்தோம்.

ராம்நாத் கோயங்கா விருது வாங்கியது குறித்து..?

இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் ஊடகத்தில் பணியாற்றி வந்தாலும், இந்த விருது என் ஊடகப் பயணத்தின் முக்கியமான  மைல்கல். புலிட்சர் விருதுபோல, இந்த ராம்நாத் கோயங்கா விருது ஊடகவியலாளர்களுக்குத் தனித்துவமானது. ஒரு பத்திரிகையாளனாக இந்த விருதைப் பெற்றது பெருமிதம் தந்த தருணம். என்னுடைய ஊடக வாழ்க்கையை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினமணியிலிருந்து துவங்கினேன். அவர்களிடமிருந்தே இந்த விருதைப் பெற்றிருப்பது மனநிறைவைத் தருகிறது. இது எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த விருதாகக் கருதவில்லை.  ஒகி புயலின்போது, எங்களுடைய நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மேற்கொண்ட முயற்சிக்கான அங்கீகாரம்தான் இந்த விருது. நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று எல்லோருடைய பங்களிப்பின் காரணமாகவே  கள நிலவரத்தைச் சிறப்பாக பதிவுசெய்ய முடிந்தது. இது எங்கள் கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த பரிசாகவே கருதுகிறேன். தொடர்ந்து  ஓடுவதற்கான ஊக்க மருந்து இது. 

பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழக ஊடகத்துக்கு கோயங்கா விருது சாத்தியமாகியிருக்கிறதா? 

2017-ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, பேராசிரியை பமீலா பிலிப்போஸ் ஆகியோரைக் கொண்ட நடுவர்குழு தேர்வு செய்தது. பிராந்திய மொழிகளுக்கான விருதுக்கு எல்லா மாநிலங்களிலிருந்தும் அதிக போட்டி இருக்கும். இத்தனை ஆண்டுகள் விருது கொடுக்கப்படவில்லை என்பதற்காக, தமிழகத்தில் சிறப்பான ஊடகவியலாளர்கள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. மிகச்சிறந்த ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். இங்கு சிலருக்கு இந்த விருது குறித்து தெரியாமல் இருக்கிறது. இப்போது கிடைத்திருக்கக்கூடிய விருது நல்லதொரு தொடக்கமாக அமையும். 

ஒகி புயல் தாக்கி ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், அந்த மக்களின் வாழ்வாதாரம் மாறாமலே இருக்கிறதே?

புயல் பாதித்த சமயத்தில், கன்னியாகுமரி சென்றது மறக்க முடியாத அனுபவம். ஆழ்கடல் மீன்பிடித்தல் பற்றி நான் அணுக்கமாக அறிந்துகொண்டது அப்போதுதான். தெற்காசியாவிலேயே ஆழ்கடல் மீன்பிடிப்பில் சிறந்து விளங்கியவர்கள் கன்னியாகுமரி மீனவர்கள். தங்களுடைய சிரமத்தையும் ஆதங்கத்தையும் அங்குள்ள மக்கள் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்கள். இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் காணாமல் போயிருப்பது குறித்து வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. கடின உழைப்புக்குப் பெயர்போன மீனவ மக்களுக்கு ஓர் இக்கட்டான சூழல் வரும்போது நிர்வாகமும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கமே அவர்களைப் பெருங்கோபத்துக்கு உள்ளாக்கியது. புயல் பாதிப்பு நடந்த நாள்கள் மட்டுமல்லாது சாதாரணமாகவே அவர்களுக்கு வரும் பிரச்னைகள் குறித்தும் நாங்கள் விரிவாகப் பதிவு செய்திருந்தோம். அப்போது, கல்வியும் பொருளாதாரமும் அவர்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கென அரசியல் ரீதியான பிரதிநிதித்துவம் இல்லை என்கிற ஆதங்கம் இருக்கிறது. அவர்களுக்கென அரசியலில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். 

ஊடகத்துறையின் முக்கிய விருது பெற்றிருக்கும் இந்த நேரத்தில் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முன்பைவிட தற்போது அதிக அளவில் பத்திரிகையாளர்கள் வருகிறார்கள். எல்லா வேலைகளிலும் சம்பளம் கிடைப்பதுபோல், பத்திரிகைத்துறைக்கும் சம்பளம் கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. சமூகத்துக்காக வேலை செய்கிறோம் என்ற பொறுப்புணர்வோடு வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நின்று, அவர்களின் குரலாகச் செய்தியைப் பதிவு செய்ய வேண்டும், அப்போதுதான் அது சமூகத்தின் மகிழ்ச்சியாக இருக்கும். தமிழகத்துக்கு என சில தனித்தன்மைகள் உள்ளன. அவற்றை உள்வாங்கிக் கொண்டு, அதுகுறித்த தீவிர வாசிப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எந்தத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் நம் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப்பும் நேர்மையும்தான் இந்தத்துறையின் உயரத்துக்குக் கொண்டு செல்லும். அறத்தோடு செயல்பட வேண்டியதுதான் இங்கு மிக முக்கியம்.

தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் எந்தளவில் இருக்கிறது?

பெரிய சவால்களும் இல்லை; ஓஹோவென மெச்சும்படியாகவும் இல்லை. சமூக ஊடகங்களில் பொதுமக்களே துணிச்சலாகப் பேசுபவற்றை, பத்திரிகை ஊடகங்கள் பேசாத நிலையும் இருக்கின்றது. எல்லாமே மோசம் என்று அவநம்பிக்கையை விதைக்க மாட்டேன். நம்பிக்கை தரக்கூடிய தொடர் செயல்பாடுகளும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அச்சுறுத்தல் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. முன்பைவிட தனிநபர் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. நினைத்ததை அச்சமின்றி பேசுவதோ எழுவதோதான் ஊடக சுதந்திரம். பூரண ஊடக சுதந்திரம் எங்குமே இல்லை. பூரண ஊடக சுதந்திரமே லட்சியம், அதை அடைவதற்கு இன்னும் தூரம் செல்ல வேண்டும். இதுவொரு தொடர் ஓட்டம். சலிப்பின்றியும் சமரசம் இன்றியும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.