மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)

என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் உச்சம் அரக்கோணம் தொகுதி!

#EnnaSeitharMP
#MyMPsScore

குடிநீர் பயன்பாட்டில் இருக்கிற, உலகின் மிகவும் மாசுபட்ட பத்து நதிகளில் முதலிடம் வகிக்கிறது பாலாறு. வேலூர் மாவட்டம் வழியே செல்லும் பாலாற்றில், சுமார் 800 தோல் தொழிற்சாலைகளின் குரோமியம் கலந்த கழிவுநீர் கலக்கிறது. பாலாற்றில் 617 ஆற்று ஊற்றுக்கால்வாய்கள் இருந்தன. அந்தக் கால்வாய்கள் அனைத்தும்  குரோமியம் கழிவுகளால் அழிந்துவிட்டன. சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) நடத்திய ஆய்வில் கிடைத்தத் தகவல்கள் இவை. இன்னோர் அபாயம்... ராணிப்பேட்டை. இங்கிருக்கும் மூடப்பட்ட தொழிற்சாலையில் மலைபோலக் குவிந்துகிடக்கும் சுமார் இரண்டரை லட்சம் டன் குரோமியம் கழிவுகளால் அந்த நகரமே கிட்டத்தட்ட மக்கள் வாழத் தகுதியில்லாத நரகம்போல மாறிவிட்டது. இதை, ‘மினி போபால்’ என்று எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். இவ்வளவுப் பிரச்னை இருக்கின்றன. என்ன செய்தார் இந்தப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கிய அரகோணம் தொகுதியின் எம்.பி அரி?

தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சுபாஷ், ‘‘சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ‘ரோப் கார்’ திட்டத்தை நிறைவேற்றுவதாக எம்.பி வாக்குறுதி தந்தார். ஆனால், ரோப் கார் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, பாதியில் போட்டுவிட்டார்கள். ‘காவேரிப்பாக்கத்தில் விசைத்தறி பூங்கா கொண்டு வருவேன்’ என்றார் எம்.பி. அதைச் செய்யவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் பல தடுப்பணைகள் கட்டி, உயரத்தையும் அதிகரித்துள்ளனர். ஆந்திர அரசின் அத்துமீறலை எதிர்த்து ஒரு வார்த்தைகூட எம்.பி பேசவில்லை.

ராணிப்பேட்டை நகரம் சுற்றுச்சூழல் சீரழிவின் உச்சத்தில் உள்ளது. இங்கு சூழலைப் பாதுகாக்கச் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான சிறப்புத் தொகுப்பு நிதியை ஒதுக்கக் கேட்டோம். அதையும் அவர் செய்யவில்லை.

என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் தொழிற்சாலையில் இரண்டரை லட்சம் டன் குரோமியக் கழிவுகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மலைபோல் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது, இதிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுநீர் நிலத்தடியில் கலந்து ராணிப்பேட்டை பூமி முழுவதும் பரவிவிட்டது. இதனால், மக்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குரோமியக் கழிவுகளை அப்புறப்படுத்தும்படி ஏராளமானப் போராட்டங்கள் நடத்திவிட்டோம். எம்.பி தரப்பிலிருந்து ஒரு நடவடிக்கையும் இல்லை. சோளிங்கரிலிருந்து பனப்பாக்கம் வழியாக, காஞ்சிபுரத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என்று கேட்கிறோம். ஒன்றும் நடக்கவில்லை. மாணவர்கள் வெகு தூரம் சென்று படிக்கிறார்கள் என்பதால் பனப்பாக்கம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என்பதும் எங்களின் பிரதானக் கோரிக்கைகள். இதெல்லாம் எம்.பி-யின் கண்ணுக்குத் தெரியவில்லை’’ என வருத்தப்பட்டார்.

சோளிங்கரைச் சேர்ந்த தொழில் பிரமுகரான கே.ஆறுமுகம், ‘‘திருத்தணி, அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதிகளை ஒருங்கிணைத்து ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ அமைக்கப்படாததால், இங்கு வேலைவாய்ப்புகளே இல்லை. இதனால், இந்தத் தொகுதியின் மக்கள் வேலைக்காக சென்னையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதனால், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்குச் செல்வோரின் பாதி வாழ்க்கை, ரயில் பயணத்திலேயே முடிந்துவிடுகிறது. ராணிப்பேட்டை சிப்காட்டில் மூடப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளுடன் அரக்கோணத்தையும் இணைக்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுப்பது, ரசாயனத் தோல் கழிவுகளால் மாசடைந்த பாலாற்றை மீட்பது, பாதிப்படைந்த நிலத்தடி நீரைச் செறீவூட்டுவது என எதையும் எம்.பி செயல்படுத்தவில்லை’’ என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முல்லை, ‘‘அரக்கோணத்தில் ‘ரிங் ரோடு’ திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால், இந்தத் திட்டம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத்தளத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, கிடப்பில் போட்டுவிட்டனர். வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் ஆகியவற்றைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதற்கும் எம்.பி குரல் கொடுக்கவில்லை. மழையின்போது தோல் தொழிற்சாலைகளிலிருந்து ரசாயனக் கழிவுகளை அப்படியே பாலாற்றில் விடுகின்றனர். காட்பாடியில் தமிழ்நாடு (டெல்) வெடிமருந்துத் தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. ராணிப்பேட்டையில் ஒன்பது லட்சம் மரங்களைக்கொண்ட ‘நவ்லாக்’ பண்ணையைச் சரியாகப் பராமரிக்கவில்லை. இதற்கெல்லாம் எம்.பி எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை’’ என்றார் வருத்தத்துடன்.

ஆற்காடு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனிடம் பேசினோம். ‘‘சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.எஸ்.எஸ் கல்லூரி அருகே மேம்பாலம் கட்டித்தருவதாக வாக்குறுதி கொடுத்தார் எம்.பி. அதோடு சரி. ஆற்காட்டுக்கு பைபாஸ் சாலை கேட்டோம். நடவடிக்கை இல்லை. ஆற்காட்டில் எந்த அரசுக் கல்லூரியும் இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம்கூட எம்.பி போடுவதில்லை’’ என்றார்.

‘‘தொகுதிப் பிரச்னை, பொதுப் பிரச்னை என எதற்கும் எம்.பி வந்ததில்லை. ராணிப்பேட்டை, காட்பாடி வழியாக சித்தூர்வரை செல்லும் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளும் துரிதமாக நடக்கவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன’’ என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் ரமேஷ் கண்ணா.

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் ரகுநாதன், ‘‘அரக்கோணம் வழியாகச் செல்லும் திருவனந்தபுரம் மெயில், மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 11 ரயில்கள் இங்கு நிற்காமல் செல்கின்றன. அவை இங்கு நின்று செல்லும் என்று எம்.பி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரக்கோணம் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. அரக்கோணம் - தக்கோலம் ரயில் பாதையை மின்மயமாக்குவது, திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை அமைப்பது ஆகிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன” என்றார். காட்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வினோ, ‘‘திருவள்ளுவர் பல்கலைக் கழகம், வேலூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் சேர்க்காடு கிராமத்தில் உள்ளது. அங்கு செல்ல வேலூரில் இருந்து போதிய பஸ் வசதி இல்லை” என்றார்.

அரி தத்தெடுத்த கிராமமான தண்டலத்துக்குச் சென்றோம். ‘‘எம்.பி தத்தெடுத்த கிராமம் என்று சொல்லும் அளவுக்கு இந்த நான்கரை ஆண்டில் எங்கள் ஊருக்கு எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. குடிநீர் பிரச்னை இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. நூலகமும் பூட்டியே இருக்கிறது. தண்டலம் அருகே சித்தேரி ஜங்ஷனில் கால்நடை மருத்துவமனை கொண்டுவந்தால், மக்களுக்கு உதவியாக இருக்கும்’’ என்றார் அந்த ஊரைச்சேர்ந்த இளைஞர் அஜித் குமார்.

இதற்கெல்லாம் எம்.பிஅரி என்ன சொல்கிறார்? ‘‘தொகுதி முழுவதும் குடிநீர், சாலை, பசுமை வீடு, கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். 140 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வாங்கிக் கொடுத்துள்ளேன். 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்குப் புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தண்டலம் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்துள்ளேன். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். எஸ்கலேட்டர், லிஃப்ட், நடைமேடை விரிவாக்கம் வசதிகளுடன் காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களை மேம்படுத்திவருகிறேன். இச்சிப்புத்தூர் ரயில் நிலையத்தில் நான்கு ரயில்கள் நின்று செல்கின்றன. வேளச்சேரி - அரக்கோணம் ரயிலைத் திருத்தணிவரை நீட்டிக்க அரசாணை இருக்கிறது. ஆனால், அரக்கோணத்தில் ரயில் நிரம்பி விடுகிறது என்றும், திருத்தணி வரை அதை நீட்டிக்க முடியாது என்றும் ரயில்வே தெரிவித்தது. எனவே, கூடுதல் எண்ணிக்கையில் ரயில்களை விடும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். அரக்கோணம் கூட்ஸ் ஷெட் மூடப்படும் நிலை இருந்தது. அதை விரிவுபடுத்தப் போதிய நிதி ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

சோளிங்கர் ரயில் நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த வேண்டும் என்று பத்து முறை நாடாளுமன்றத்தில் பேசினேன்.  திருத்தணியில் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் கால தாமதமாக வந்துகொண்டிருந்தது. அதை, குறித்த நேரத்தில் இயக்க ஏற்பாடு செய்துள்ளேன். அரக்கோணத்தில் திருவனந்தபுரம் மெயிலை சபரிமலை காலத்திலாவது நிறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். காட்பாடி ரயில் நிலையத்தில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறேன். வேலூர் மாவட்டத்தில் நிலவும் சுற்றுச்சூழல், பாலாறு பிரச்னைகள் குறித்து டெல்லியில் அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களிடம் பேசிவருகிறேன். உயிர் காக்கும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு பிரதமர் நிதியிலிருந்து 75 பயனாளிகளுக்கு நான்கு கோடி ரூபாய் பெற்றுத் தந்துள்ளேன்’’ என்றார் அரி. 

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- எஸ்.முத்துகிருஷ்ணன். இரா.தேவேந்திரன், கோ.லோகேஸ்வரன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)
என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)
என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

தி
ருத்தணியில் இருக்கிறது அரக்கோணம் எம்.பி-யின் அலுவலகம். ‘சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும்’ என ஆற்காடு சத்தியமூர்த்தி என்பவர் மனு அளித்தார். அந்த மனுவை, நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பி இருப்பதாக எம்.பி அலுவலகத்திலிருந்து பதில் கிடைத்தது. திருத்தணியைச் சேர்ந்த ரவி, ‘முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளுடன் திருத்தணியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அரக்கோணம் ரயில்வே பணிமனையைப் புனரமைக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதினார். அதற்கு, புதிய பஸ் நிலையத்துக்கான வேலைகள் தொடங்கியிருப்பதாகவும் அரக்கோணம் ரயில்வே பணிமனை புதுப்பித்தல் குறித்து ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் எம்.பி அலுவலகத்தில் பதில் அளித்தார்கள். 

என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)
என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)