Published:Updated:

“காங்கிரஸின் காவி அரசியல் தப்பில்லை!”

“காங்கிரஸின் காவி அரசியல் தப்பில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“காங்கிரஸின் காவி அரசியல் தப்பில்லை!”

சுவாமி அக்னிவேஷ் சப்போர்ட்

காவி அரசியலுக்கு எதிராக, காவி உடைக்குள் இருந்துகொண்டே குரல் கொடுப்பவர் ஆர்ய சமாஜத்தின் ஸ்வாமி அக்னிவேஷ். பசுப் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பேசியதால், சில மாதங்களுக்கு முன்பு பி.ஜே.பி-யினரால் தாக்கப்பட்டவர். ‘அமர்நாத் லிங்கம் வெறும் பனிக்கட்டிதான்... கடவுள் அல்ல’ என்று பனிக்கட்டியிலேயே நெருப்பைப் பற்றவைத்தவர். எப்போதுமே ‘ஹாட்’ அரசியலில் இருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...

“எமர்ஜென்சியிலிருந்து இந்திய அரசியலைக் கவனித்துவருகிறீர்கள். இன்றைக்கு என்ன வித்தியாசம்?”

“அன்று எமர்ஜென்சியை மக்களே எதிர்த்தார்கள். புரட்சியில் இறங்கினார்கள். வன்முறையின்றி வெற்றி பெற்றார்கள். ஆனால், இப்போது சுதா பரத்வாஜ், வரவர ராவ் என்று கேள்வி கேட்பவர்கள்கூட கைது செய்யப் படுகிறார்கள். மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். சரியான வாய்ப்பு வரும்போது, அவர்களின் கோபம் பெரிதாக வெடிக்கும். இந்திய ஜனநாயகத்தில் அதைத் தேர்தல் என்பார்கள். 2019-ல் அதற்கு பதில் கிடைக்கும்.”

“காங்கிரஸின் காவி அரசியல் தப்பில்லை!”

“உங்கள் நண்பர் சுஷ்மா சுவராஜ்கூட சமீபத்தில் தன் கட்சியினரால் தாக்கப்பட்டார். உங்களையும் தாக்கினார்கள். இது என்ன காவிக்கும் காவிக்குமான சண்டை?”

“சுஷ்மா சுவராஜ் ஓர் அமைச்சராக பாஸ்போர்ட் விவகாரத்தில் ஒரு பெண்ணுக்கு உதவினார். அவர் மதம் பார்க்கவில்லை. ஆனால், பி.ஜே.பி-யினர் அவரை மோசமாக வசைபாடினார்கள். அங்கே மோடிகூட சுஷ்மாவுக்காக வரவில்லை. ஆனால், சுஷ்மா இதில் அடங்கிப்போனதுதான் வேதனை. அவர் வலுவாக நின்றிருக்கலாம். தன் கட்சியிடம் கேள்வி கேட்டிருக்கலாம். பல பொது மேடைகளில் நான் இஸ்லாமில் இருக்கும் குறைகளைப் பற்றி கேள்வி கேட்டிருக்கிறேன். அவர்கள் எதிர்த்ததில்லை. ஆனால், இந்துத்வவாதிகள் என் உயிரைப் பேரம் பேசும் அளவுக்குத் துணிந்துவிட்டார்கள்”

“மதத்தை வைத்து அரசியல் ஏன்? இந்து மதம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதில்லையா?”

“எல்லா மதங்களும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவை. எல்லா மதங்களின் அறமும் ஒன்றுதான். கடவுளை நம்புபவர்கள் கோயிலுக்குச் சென்றுதான் வழிபடவேண்டும் என்றில்லை. நம் மனம்தான் கோயில். அந்த அடிப்படையில் மனதளவிலும் உடல் அளவிலும் நாம் தூய்மையாக இருக்க வேண்டும். ஆனால், இதைச் செய்யாமல் மற்ற மதங்களையும் அவற்றைச் சார்ந்தவர்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், உண்மையை உணர வேண்டும்”

“காங்கிரஸ் கட்சியும் வாக்கு அரசியலுக்காக காவி அரசியல் செய்துகொண்டிருக்கிறது, அவர்கள் எப்படி பி.ஜே.பி-க்கு மாற்றாக இருக்க முடியும் ?

“தனி ஒரு கட்சியால் பி.ஜே.பி-யை அகற்ற முடியாது. காங்கிரஸுக்கும் இது பொருந்தும். காங்கிரஸுடன் சேர்ந்து அத்தனைக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அவர்கள் பி.ஜே.பி-யால் சிதிலமடைந்திருக்கும் சமூகநீதியைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதற்காக அவர்கள் கடவுள் பெயரைச் சொல்லியோ, காவி அரசியல் செய்தோ வாக்குச் சேகரிப்பதிலும் தவறில்லை.”

“நீங்கள் காவி உடை அணிந்தவர்களிலேயே வித்தியாசமானவராக இருக்கிறீர்கள். பாபர் மசூதி இடிப்பு விவகாரத்திலும் நீங்கள் பி.ஜே.பி-யை எதிர்த்தீர்கள்...”

“நான் அயோத்திக்கு நேரில் சென்றிருக்கிறேன். அங்கே ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடம் மட்டும் 15-க்கும் மேல் இருக்கின்றன. தவிர தசரதன், கோசலை வாழ்ந்த இடங்கள் என்றும் சில கோயில்கள் இருக்கின்றன. ராமர் கோயில் கட்டும் விவகாரத்தின்போது, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கும் நானும் சேர்ந்து அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பாபர் மசூதி இருப்பது வெறும் மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலத்தில்தான். அதன் அருகில் சுமார் 67 ஏக்கர் அரசு நிலம் காலியாக இருந்தது. அது மொத்தத்திலும் கோயில் கட்டிக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தோம். ‘இல்லை, பாபர் மசூதியின் மையப்பகுதியில் இருக்கும் நான்கு அடி நிலம்தான் ராமர் பிறந்தது. அங்குதான்  கோயில் கட்ட வேண்டும்’ என்று அத்வானி பிடிவாதமாக இருந்தார். 14-ம் நூற்றாண்டில் அல்லது, 15-ம் நூற்றாண்டில் பாபர் படையெடுப்பில் அந்தக் கோயிலை இடித்ததாகச் சொல்கிறார்கள். அதே காலகட்டத்தில் வாழ்ந்த ராம பக்தரான துளசிதாசர், அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட தனது ராமசரித மானஸில் குறிப்பிடவில்லை. அவரே பதிவுசெய்யாதபோது அத்வானியும் உமாபாரதியும் சொல்வதை எப்படி ஏற்கமுடியும்?”

“பெண்கள் சபரிமலைக்குச் செல்வது பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்து மதம் அதை அனுமதிக்கிறதா?”

“கடவுள் ஆணோ பெண்ணோ கிடையாது. கடவுளுக்கு பாலினமே கிடையாது. ‘ஐயப்பனுக்கு பிரம்மச்சர்யம் இருக்கிறது அதனால், பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரையிலான பெண்களை அனுமதிப்பதில்லை’ என்பதெல்லாம் அறிவுக்கு உகந்தது அல்ல. இப்படி மதத்தின் பெயரால் நடத்தப்படும் பகுத்தறிவற்ற செயல்பாடுகளை எதிர்த்து இளைஞர்கள் கேள்வி கேட்க வேண்டும்” 

- ஐஷ்வர்யா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz