Published:Updated:

“என் கேள்விக்கு இதுவல்ல பதில்!” - வைகோவிடம் உரசும் வன்னியரசு

“என் கேள்விக்கு இதுவல்ல பதில்!” - வைகோவிடம் உரசும் வன்னியரசு
பிரீமியம் ஸ்டோரி
News
“என் கேள்விக்கு இதுவல்ல பதில்!” - வைகோவிடம் உரசும் வன்னியரசு

“என் கேள்விக்கு இதுவல்ல பதில்!” - வைகோவிடம் உரசும் வன்னியரசு

“நான் ஆபத்தானவன்...  தூரத்தில் இருந்தால் இந்த நெருப்பு குளிரைப் போக்கும்... உரசிப்பார்த்தால் இந்த நெருப்புத் தீப்பிடிக்கும்...’’ என்று வைகோ பேசிய பேச்சுதான், தமிழக அரசியலில் இப்போது பற்றி எரிகிறது!

கடந்த வாரம், தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரப் பகிர்வைத் திராவிட இயக்கம் சரியாகத் தந்துள்ளதா?’ என்ற கேள்வி, வைகோவிடம் கேட்கப்பட்டது. ‘இது உள்நோக்கம் கொண்ட கேள்வி’ என்று கூறி பதிலளிக்க மறுத்த வைகோ, பேட்டியிலிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு, ‘தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்குப் பதில் சொல்லக்கூட மறுப்பது எந்த விதமான பார்வை?’ என்று கேள்வி கேட்டு, தனது முகநூலில் கருத்துப் பதிவிட்டார். அவரது பதிவுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக சாத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ, ‘‘2006 தேர்தலின்போது, தேர்தல் செலவுக்குப் பணம் இல்லாமல் நாங் களே சிரமப்பட்டுக் கொண்டிருந்த சூழலிலும்கூட, பலரிடமும் கடன் வாங்கி 50 லட்சம் ரூபாயை நான் திருமாவளவனுக்கு கொடுத்தேன். அப்படிப்பட்ட என்னை வன்னியரசு விமர்சிக்கிறார். உரசிப் பார்த்தால் இந்த நெருப்புத் தீப்பிடிக்கும்’’ என்று மிகவும் உக்கிரமாகப் பேசினார்.

“என் கேள்விக்கு இதுவல்ல பதில்!” - வைகோவிடம் உரசும் வன்னியரசு

இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவனோ, ‘‘வைகோவின் கோபம் என்மீதா? வன்னியரசு மீதா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்தச் சூழலில், வன்னியரசுவைச் சந்தித்தோம். ‘‘பெரியார், அம்பேத்கர் கொள்கைகளின் வழியே செயல்படும் அண்ணன் வைகோவை நாங்கள் எப்போதுமே மதிக்கிறோம்” என்று பேசத் தொடங்கிய அவர், “ ‘இன்றையச் சூழலில், அதிகாரப் பகிர்வு என்பது இடைநிலை சாதிகளோடு நின்றுவிட்டது. இன்னும் கடைநிலை சாதிகளுக்குப் போய்ச் சேரவில்லையே...’ என்பதுதான் அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு, ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவில் நுழைவுப் போராட்டம், விதவை மறுமணம், பெண்களுக்குச் சொத்துரிமை, இந்து சமய அறநிலையத்துறையில் கடைநிலை சாதியினரும் அதிகாரிகளாக வர முடியும்’ என்று திராவிட இயக்கங்களின் பங்களிப்புகளை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்க முடியும். நாங்களும் அவரிடம் அதைத்தான் எதிர்பார்த்தோம். ஆனால், அப்படியொரு பதிலைச் சொல்வதையே அவர் தவிர்த்துவிட்டார். எனவே, இது பண்ணை ஆதிக்க உளவியலாக இருக்கிறதே என்ற எனது வருத்தத்தைத்தான் பதிவுசெய்திருந்தேன்.

விஷயம் தெரிந்து, எங்கள் கட்சியின் தலைவர் என் மீது கோபப்பட்டார். உடனே நானும் அண்ணன் வைகோவின் உதவியாளரிடம் என் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு அந்தப் பதிவையும் நீக்கிவிட்டேன். ஆனாலும், நான் கேட்ட கேள்வியின் நியாயம் அப்படியேதான் இருக்கிறது. அதை ஒருபோதும் நான் வாபஸ் வாங்க மாட்டேன்.’’

‘‘முகநூலில் நீங்கள் அந்தக் கருத்தைப் பதிவிட்டதன் பின்னணியில், வி.சி.க-வின் தலைவர் திருமாவளவன் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘நான் முகநூலில் பதிவிட்ட உடனேயே, எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் என்னிடம் கடிந்துகொண்டார். ‘அமைப்புக்குள் இருந்துகொண்டு, இப்படி உதிரி மாதிரி எழுதலாமா... உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிடு’ என்று திருமாவளவனும் கண்டித்தார். இதுதான் நடந்த உண்மை.

எனக்குப் பின்னணியில், பெரியார் - அம்பேத்கர் வகுத்துத்தந்த கோட்பாடுகள்தான் உள்ளன. இந்தக் கேள்வி என்பது அண்ணன் வைகோ மீதான கேள்வி மட்டுமல்ல... சமூக மாற்றத்தை விரும்பும் எல்லோரையும் நோக்கி எழுப்பப்பட்ட பொதுவான கேள்விதான். சமூக மாற்றத்தை விரும்புகிற, அண்ணன் வைகோ-விடம் இந்தக் கேள்வியைக் கேட்காமல்,  சனாதனத்தை உள்வாங்கிக்கொண்ட ஹெச்.ராஜா அல்லது பொன்.ராதாகிருஷ்ணனிடமா நான் கேட்க முடியும்? எங்கள் அண்ணனிடம்தானே உரிமையாகக் கேட்க முடியும்?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“என் கேள்விக்கு இதுவல்ல பதில்!” - வைகோவிடம் உரசும் வன்னியரசு

‘‘அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்கிற கோஷத்தை முன்வைப்பவர் வைகோ. அவரின் செயல்பாடுகளையும் சந்தேகிக்கிறீர்களோ?’’

‘‘ஈழம் தொடர்பான வைகோவின் களப்பணியும் எழுச்சிகரமான பேச்சும்தான் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவருடன் என்னை நெருக்கமாக வைத்துள்ளது. சமூக மாற்றத்தை விரும்பும் இப்படிப்பட்ட ஒரு தலைவரை, நாங்கள் ஏன் அவமானப்படுத்த வேண்டும்? எங்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவரை நாங்கள் ஏன் இழக்க வேண்டும்? நான் கேட்டிருந்த கேள்வி என்பது, மாற்றத்தை விரும்பக்கூடிய இயக்கத்தின் கடைநிலைத் தொண்டனிடமிருந்து எழும்பக்கூடிய சாதாரண ஒரு கேள்விதான்.’’

“என் கேள்விக்கு இதுவல்ல பதில்!” - வைகோவிடம் உரசும் வன்னியரசு

‘‘வி.சி.க தேர்தல் செலவுக்காக ரூ.50 லட்சம் தந்ததாக வைகோ சொல்கிறாரே?’’

‘’நான் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசும்போதுதான், அண்ணன் வைகோ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். நான் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் இதுவல்ல. தேர்தல் சமயங்களில், கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் தேர்தல் செலவுகளை மாறி மாறி செய்துகொள்வதென்பது வழக்கமான ஒன்று. 2006-ல் அ.தி.மு.க கூட்டணியில் நாங்கள் இருந்தபோது, ‘கலிங்கப்பட்டிக்கு வாருங்கள்’ என்று எங்கள் தலைவரை அழைத்து அவரிடம் தேர்தல் செலவுக்காக என்றுகூறி ஒரு பையை வைகோ கொடுத்தார். இதை எங்கள் கட்சியின் செயற்குழுவில் குறிப்பிட்டுப் பேசிய எங்கள் தலைவர், ‘நம் கட்சியின் தேர்தல் செலவுக்காக அண்ணன் வைகோ 30 லட்சம் ரூபாய் கொடுத் துள்ளார்’ என்று அப்போதே வெளிப்படையாகப் பேசிவிட்டார். ஆனால், அடுத்தும் 20 லட்சம் ரூபாயை எங்கள் தலைவரிடம் கொடுத்ததாக வைகோ கூறுவது தவறு. அண்ணன் வைகோ கொடுத்தது 30 லட்சம் ரூபாய் மட்டும்தான்.’’

‘‘வி.சி.க - ம.தி.மு.க இடையிலான இந்தப் பிரச்னையில், பி.ஜே.பி இருப்பதாக நினைக்கிறீர்களா?’’

‘‘சனாதனத்தை விரும்புகிற பி.ஜே.பி-யை இந்தியா முழுக்க வீழ்த்தக்கூடிய ஓர் இடத்தில் நாங்கள் இருப்பதால், பொறுப்புடன் இந்த விஷயத்தை அணுகிக் கொண்டிருக்கிறோம். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.’’

- த.கதிரவன்
படங்கள்: வீ.நாகமணி