Published:Updated:

``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி!’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி

தொடர்ந்து தாமதம் செய்ததால், இந்த அரசு மீது மக்கள் மத்தியில் கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. இதனை சரிசெய்வதற்காகத் தனி மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.

``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி!’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி
``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி!’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி

ள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால் மிகப் பெரிய மாவட்டம் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது விழுப்புரம். தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக உருவெடுத்திருக்கிறது கள்ளக்குறிச்சி. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான பிரபு. 

`என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. நான் கேட்பது ஒன்றுதான். கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் அங்கிருந்து விலகி வர வேண்டிய சூழல் வந்தது' - தினகரன் அணிக்குத் தாவியபோது, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கூறிய வார்த்தைகள் இவை. `இனி என்ன செய்யப்போகிறார் பிரபு?' என்ற கேள்வி, அ.தி.மு.க வட்டத்தில் எழுந்துள்ளது. 

பிரபுவிடம் பேசினோம். 

``உங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிட்டதே?’’ 

``தனி மாவட்டக் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது. இருப்பினும், என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எந்த இடத்தில் இருந்தாலும் என்னுடைய தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது.’’

மீண்டும் அ.தி.மு.க-வில் இணைய வாய்ப்பிருக்கிறதா? 

``தற்போது இருக்கும் இடத்தில் நிலையாகவும் வலுவாகவும் இருப்பேன்.’’ 

``தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்ற ஏன் காலதாமதம்?’’ 

`` நாங்கள் பிரச்னை செய்ததால்தான் தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்காமல், தாமதப்படுத்தியதால் மக்கள் கோபத்தில் இருந்தனர். அடுத்த மாதம் கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தினகரன். அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராடுவது என முடிவெடுத்திருந்தோம். 2016 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், `தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்' என அம்மாவும் வாக்குறுதி கொடுத்திருந்தார். போராட்டங்கள் வலுப்பெறும் எனப் பயந்துபோய் அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.’’

``பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் அறிவித்தாரா?’’ 

``ஆமாம். அதுதான் உண்மை. 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதுதொடர்பாக நான் பேசினேன். வருவாய்த்துறை அமைச்சரும், `தனி மாவட்டக் கோரிக்கை அமைவது சாத்தியம்' எனக் கூறினார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டிருந்தார்கள். இதைக் கண்டித்து நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு நாள் குறித்திருந்தோம்.

கஜா புயல் பாதிப்பால், போராட்டத் தேதி தள்ளிப்போய்விட்டது. இதை வலியுறுத்தி நேற்றும் போராட்டம் நடத்தினேன். தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். தொடர்ந்து தாமதம் செய்ததால், இந்த அரசு மீது மக்கள் மத்தியில் கெட்டப் பெயர் ஏற்பட்டுவிட்டது. இதைச் சரிசெய்வதற்காகத் தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். இதற்குக் காரணம், அம்மா கொடுத்த வாக்குறுதிதான். அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.’’