Published:Updated:

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம் 2

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம் 2
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம் 2
- கே.கே.மகேஷ்

படங்கள்:
எஸ்.கிருஷ்ணமூர்த்தி & பா.காளிமுத்து
கிரானைட் விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் மேலூர் முருகேசன். தூங்குகிறவனை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா? ஆனாலும் முயன்றார் முருகேசன். இதற்காக பி.ஆர்.பி.யின் ஆட்கள் கொடுத்த பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார் முருகேசன். எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டாரே? என்று சொல்லும் அளவுக்கு அவர் மீதே இப்போது கடுமையான குற்றச்சாட்டுக்கள். "1 கோடி ரூபாய்க்கு அவரும் விலை போய்விட்டார்" என்பதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்.
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம் 2
யார் இந்த முருகேசன்?
பி.ஆர்.பி. நிறுவனம் வெளிநாடுகளுக்கு கிரானைட் ஏற்றுமதியை தொடங்கிய நேரத்தில், கற்களை பாதுகாப்பாக கண்டெய்னரில் அடுக்குவதற்கு ஒரு பேக்கிங் மெட்டீரியல் தேவைப்பட்டது. அது விலை குறைந்த, அதே நேரத்தில் கற்களை பாதுகாக்கப் போதுமானதாக இருக்க வேண்டும். இந்த தேவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது பி.ஆர்.பி. நிறுவனம். அப்போது, பக்கத்து மாநிலத்தில் இருந்து ஒரு மரப்பலகை நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வைப்பதாக பேரம் பேசினார் மேலூரைச் சேர்ந்த முருகேசன். அவர் கேட்ட கமிஷனுக்கு ஒத்துக் கொண்ட அவர்கள், அந்த நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்ததும் முருகேசனைக் கழற்றிவிட்டார்கள். கடுப்பான முருகேசன், பி.ஆர்.பி.க்கு எதிராக களம் இறங்கினார். அவர்கள் செய்கிற மோசடிகளை எல்லாம் தன் அறிவுக்கு எட்டியவரை கண்டுபிடித்து, அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு போனார்.
முருகேசன் எழுப்பிய கேள்வி
கணக்கு வழக்கே இல்லாமல் கிரானைட் வெட்டப்படுவதையும், வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதையும் மோப்பம் பிடித்தார் முருகேசன். ஒரு கியூபிக் மீட்டருக்கு இவ்வளவு என்று கனிம வளத்துறைக்கு 'ராயல்டி' கொடுக்க வேண்டும் என்பதால், உற்பத்தியை குறைவாக கணக்கு காட்டி வந்தது பி.ஆர்.பி. நிறுவனம். இதற்கான ஆதராங்களை எல்லாம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றார் முருகேசன். 
2004 மார்ச் முதல் 2008 மார்ச் வரையில் பி.ஆர்.பி. நிறுவனம் எடுத்த கிரானைட் கற்கள் எவ்வளவு? என்று கனிம வளத்துறையிடம் கேட்டார் முருகேசன். அதே காலக்கட்டத்தில் பி.ஆர்.பி. நிறுவனம் வெளிநாட்டுக்கு அனுப்பிய கிரானைட் கற்களின் அளவு எவ்வளவு என்று சுங்க இலாகாவிடம் கேட்டார். இரண்டு ஆவணங்களையும் வைத்துக் கொண்டு, "உற்பத்தியைவிட இரு மடங்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியில் ஆடிப்போனார்கள் அதிகாரிகள்.
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம் 2
பி.ஆர்.பி. போட்ட மானநஷ்ட வழக்கு
இதுதொடர்பாக முருகேசன் அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க முயன்ற கலெக்டர் சீதாராமன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் திருவாரூரில் இருந்த மதிவாணன் மதுரை கலெக்டரானார். இவர் முழுக்க முழுக்க பி.ஆர்.பி.க்கு ஆதரவாக இருந்ததால், அதிகாரிகளை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்று கோர்ட் படியேறினார் முருகேசன். அந்த வழக்கை விசாரித்தவர் நேர்மைக்குப் பெயர் போன நீதிபதி சந்துரு. 
"இந்த நாட்டின் குடிமகன் ஒருவன், ஒரு ஏமாற்று வேலையை, மோசடியைக் கண்டுபிடித்து அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறபோது அதை மதிப்புமிக்க வரமாக அவர்கள் பாவிக்க வேண்டும். உடனடியாக உண்மையைக் கண்டறிய தங்கள் அதிகாரத்தின் கீழ் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று உத்தவிட்டார் நீதியரசர் சந்துரு. ஆனால், அந்த உத்தரவை மதிக்கக் கூடிய அதிகாரிகள் யாரும் இங்கே இல்லை. 
புதிதாய் வந்த மதுரை கலெக்டர் மதிவாணன், ஒரே மாதத்தில் விசாரணையை முடித்து, "முருகேசன் குறிப்பிட்டதுபோல் எந்த முறைகேடும் நடக்கவில்லை" என்று 29.5.10-ல் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அது தொடர்பாக பத்திரிகைகளுக்கும் அறிக்கை கொடுத்தார். அதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு முருகேசனிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தது பி.ஆர்.பி. நிறுவனம். ஆனாலும், முருகேசன் பின்வாங்கவில்லை. தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டே இருந்தார்.
பேரம் பேசிய பி.ஆர்.பி.
"நீ என்ன செய்தால் என்ன? நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், நீதிப்புள்ளிகளும் எங்கள் பாக்கெட்டில்" என்று தெனாவட்டாக இருந்தது பி.ஆர்.பி. நிறுவனம். ஆனால், அரசுத் தரப்பு கடும் நடவடிக்கையில் இறங்கிய போது, அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் முருகேசன் கொடுத்ததும் பி.ஆர்.பி. தரப்பு பணிந்தது. பழனிச்சாமி கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை போனபிறகு, முருகேசனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது பி.ஆர்.பி. நிறுவனம்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விளக்குகிறார் மேலூர் வக்கீல் திருப்பதி, "ஆரம்ப காலத்தில் பி.ஆர்.பி.
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர் - பாகம் 2
மீது அதிக பெட்டிசன் போட்டவர் என்ற அடிப்படையில் முருகேசனை, தற்போதைய கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், எஸ்.பி. பாலகிருஷ்ணனும் அதிகமாக நம்பினார்கள். கிரானைட் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் அவர் கொடுக்கும் தகவல்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு கலெக்டருக்கும், எஸ்.பி.க்கும் நெருக்கமானவன் என்று காட்டிக்கொண்டு, பி.ஆர்.பி. நிறுவனத்துடன் பேரம் பேசியுள்ளார் -முருகேசன். 
புது பங்களா கட்டிய முருகேசன்
இது இக்கட்டான சூழல் என்பதால், அவர்களும் முருகேசனின் டிமாண்டை அப்படியே ஏற்று 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். இந்த 1 கோடியை பெற்றுத் தருவதற்கு புரோக்கர்களாக இருந்த 2 பேருக்கு தலா 10 லட்சம் போய்விட்டது. மீதி தொகை 80 லட்சத்தைப் பெற்ற -முருகேசன், தற்போது மேலூர் குமார் பிளாட்ஸில் 50 லட்சத்தில் பிரமாண்டமான பங்களா கட்டி வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கிறேன். அரசு எடுக்கும் நடவடிக்கையை சாதகமாக்கிக் கொண்டு இவ்வாறு மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அரசுக்கே கெட்ட பெயர் வரும் என்றும் சொல்லியிருக்கிறேன்" என்கிறார்.
இதுபற்றி முருகேசன் தரப்பில் கேட்டால், "தனக்குத் தர வேண்டிய பணத்தை நேரம் பார்த்து திருப்பி வாங்கியிருக்கிறார் முருகேசன். இதில் எந்தத் தப்பும் இல்லை. நியாயப்படி கமிஷன் போக 90 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். மீதி 10 லட்சத்தையும் பெற முருகேசன் முயற்சித்து வருகிறார்" என்கிறார்கள்.
இதுபற்றி அரசு தரப்பில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? "முருகேசன், பி.ஆர்.பி. நிறுவனத்திடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். அவர் அதை மறுக்கவில்லை. ஆரம்ப காலத்தில், பேக்கிங் மெட்டீரியல் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதற்காக தனக்கு தர வேண்டிய கமிஷன்தான் அது. மற்றபடி அவர்களுக்கு நான் விலை போகவில்லை. நீங்கள் என்ன தகவல் எப்போது கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்த அவரின் ஆதரவு தேவை. ஆதலால் அவர் மீது இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை" என்கின்றனர் எஸ்.பி.யும், கலெக்டரும்.
ஒரு தனி மனிதனுக்கே இவ்வளவு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், பி.ஆர்.பி.க்கு எதிராக கச்சை கட்டி இறங்கிய அரசியல் கட்சிகள் எவ்வளவு வாங்கியிருப்பார்கள்?- சுப்பிரமணியசாமியும், தா.பாண்டியனும், பி.ஆர்.பி. குவாரிக்குச் சென்று ஆவேச பேட்டி கொடுத்தார்களே? அது என்ன ஆனது?
நாளை பார்க்கலாம்...