Published:Updated:

`மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தேவையா?’ - தடை கோரி பொதுநல மனு

`மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தேவையா?’ - தடை கோரி பொதுநல மனு
`மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தேவையா?’ - தடை கோரி பொதுநல மனு

தமிழக அரசுக்கு ஏற்கெனவே மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருக்கும் நிலையில், ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கடன் சுமையை அதிகரிக்கும் என்று கூறி அந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜா புயலுக்கு, மத்திய அரசு கேட்ட நிவாரணத்தைத் தரவில்லை; ஜி.எஸ்.டியில் தமிழகத்துக்கான 14 சதவிகிதப் பங்களிப்பை வழங்கவில்லை. தமிழக உள்ளாட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு மத்திய அரசு மீது குறைகூறி வருகிறது. இந்த நிலையில், 2.2 கோடி லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுடன், இந்த ஆண்டில் ரூ.1.98 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், வழக்கமாக தமிழக அரசுக்கு அளிக்கும் பொங்கல் பரிசுக்குச் செலவாகும் 258 கோடி ரூபாயுடன், கூடுதலாக 2,250 கோடி ரூபாய் கூடுதல் செலவாகவுள்ளது.

கடுமையான நிதிச்சுமையில் இருக்கும் தமிழக அரசு, வரம்பின்றி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரொக்கப் பரிசை அறிவித்திருப்பது, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோவையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான டேனியல் ஏசுதாஸ் என்பவர், இதற்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று 7.1.2019  விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

மனுத் தாக்கல் செய்த டேனியல் ஏசுதாஸிடம் பேசினோம். ``கடந்த 2011ல், ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன், 2016-ல் 2 லட்சத்து 11,000 கோடி ரூபாயாக உயர்ந்து, இப்போது 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு வட்டியாக மட்டும் 29,624 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு மட்டும் கொடுக்காமல், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இப்படி ரொக்கமாக பணம் தர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனால், தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும். பச்சரிசி, கரும்பு, வெல்லம் போன்ற பொங்கல் பரிசுப் பொருள் தருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. எல்லோருக்கும் ரொக்கம் தருவதைத்தான் வேண்டாம் என்கிறோம்’’ என்றார். 

அநேகமாக இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படலாம். என்ன சொல்லப் போகிறதோ நீதிமன்றம்?