Published:Updated:

``பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் ஒரு நன்றியாவது தெரிவித்திருக்கலாம்!” - ஹெச்.ராஜா

``பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் ஒரு நன்றியாவது தெரிவித்திருக்கலாம்!” - ஹெச்.ராஜா
``பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் ஒரு நன்றியாவது தெரிவித்திருக்கலாம்!” - ஹெச்.ராஜா

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில், நேற்று பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். “பா.ஜ.க-வின் திட்டங்களும், செயல்பாடுகளும் கொடுக்கின்ற பலன்களை மக்கள் நேரடியாக அனுபவித்துவருகின்றனர். எனவே, பா.ஜ.க-வைப் பற்றி யார் தவறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டாலும் அது எடுபடாது” என்று ஆரம்பித்தவர், தொடர்ந்து ஸ்டாலின்  மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விளாசித்தள்ளினார்.

தொடர்ந்து பேசிய ஹெச்.ராஜா, ``கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மோடி அவர்கள் நேரில் சந்தித்துச்சென்றார். மறைந்த பிறகும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச்சென்றார். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால், சோனியா காந்தி எதற்கும் வரவில்லை. ஸ்டாலின் தி.மு.க தலைவரானதும், பிரதமர் மோடிக்கு ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம். ஆனால், தலைவராகப் பதவியேற்ற அன்றைக்கே, பிரதமரை கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார்.

ஸ்டாலினுக்கு சுயமாக சிந்திக்கவோ பேசவோ தெரியவில்லை.சோனியா காந்தி - ஸ்டாலின் செய்யும் சதியில் தப்பித்தவறி மக்கள் விழுந்தார்களேயானால், இந்த தேசம் நாசமாய்ப் போய்விடும். பிரதமர் மோடி மேற்கொண்ட பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவை சரியான சீர்திருத்தங்கள்தான். மக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள்தான் தேவையில்லாத பொய்ப் பிரசாரங்களையும்  தவறான தகவல்களையும் மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்.

கேரளாவில் 100 ஐயப்பன் கோயில்கள் இருக்கின்றன. சென்னை சிட்டியில் 38 ஐயப்பன் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பெண்கள் நுழைவதற்கு வயது தடையாக இல்லை. ஆனால், சபரிமலையில் காலங்காலமாக ஒரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, அதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் உண்மை முகத்தை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்தியாவின் கடைசி கம்யூனிஸ்ட் முதலமைச்சராக பினராயி விஜயனாகத்தான் இருப்பார்” என்றார்.

பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, தனியார் ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, ``ஆர்.கே.நகர் தேர்தலைப் போல திருவாரூரிலும் மூன்றாமிடத்துக்குச் சென்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக, தி.மு.க., தேர்தலைத் தள்ளிவைக்க அவர்களது கூட்டணிக்கட்சிமூலம் முயன்று வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க-வை சுயமாகச் சிந்தித்து ஸ்டாலின் வழி நடத்தவில்லை. தி.மு.க-வை பிரிவினைவாத தீய சக்திகள் வழிநடத்துகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இலங்கையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த சோனியா காந்தியை, கருணாநிதி சிலையைத் திறக்க ஸ்டாலின் அழைத்துவந்துள்ளார். தி.மு.க, சுய சிந்தனையோடு அதை அதுவே வழிநடத்தும் சூழல் தற்போது இல்லை.

கேரளா சபரிமலை பிரச்னையில், வேண்டுமென்றே மிக மோசமாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் இறை நம்பிக்கையுள்ளவர்கள், ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள், மார்க்சிஸ்ட்  உடம் உறவு வைத்துள்ள தி.மு.க-வை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஊழல் மயமாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஜி பொன்.மாணிக்கவேலுவிற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.

ரஃபேல் விவகாரத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவது அநாகரிகம். இந்த தீர்ப்புக்குப் பின் ரஃபேல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன் என்று ராகுல் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அறிவியல் மாநாட்டில் மகாபாரதக் காலத்தில் சோதனைக்குழாய் குழந்தைகள் பிறந்துள்ளது என ஆந்திர துணைவேந்தர் கூறியுள்ளார். இதை சர்ச்சைக்குள்ளாக்கக் கூடாது. மகாபாரதம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அந்தக் காலத்தில் இதுபோன்று இருந்திருக்காது என்று நாம் சொல்ல முடியாது. காந்தாரி கரு கலைந்து, அதை 100 ஜாடிகளில் வைத்திருந்துதான் நூறு குழந்தைகள் பிறந்ததாக மகாபாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது சோதனைக்குழாய் குழந்தை என்று சொன்னால், அதுகுறித்து ஆழமான ஆய்வை ஏன் செய்யக்கூடாது? 

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வுசெய்தபின், நிபந்தனையோடு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என உத்தரவிட்டபின், அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். தமிழகத்திற்குப் பாதகம் செய்யும் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது. அதை அனுமதிக்கவும் செய்யாது. கேரளாவில் 800 கே.வி உயர் மின் அழுத்த மின்சாரம் தரைவழியாக எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த விஷயத்தில், தமிழக விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு, நிலையான வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி வரிமூலம் ஒரு நாடு ஒரு வரி என்ற முறையைக் கொண்டுவந்ததுபோல, நாடு முழுமைக்குமான ஒரே மின் தொகுப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் மின் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்” என்றார்.