Published:Updated:

20... 120... 420..., திருட்டு ரயில்! - ஸ்டாலின், தினகரன் மோதலின் பின்னணி

``நான் கூறிய கருத்துக்கு அவர் பதில் கூறிவிட்டார். இதன் பின்னரும் முரசொலியில் விமர்சித்து எழுதுகிறார்கள் என்றால், அவர்களைக் கண்டிக்காமல் இருக்க முடியாது.’’

20... 120... 420..., திருட்டு ரயில்! - ஸ்டாலின், தினகரன் மோதலின் பின்னணி
20... 120... 420..., திருட்டு ரயில்! - ஸ்டாலின், தினகரன் மோதலின் பின்னணி

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. `மோடி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத்தான் நமது பிரசாரம் இருக்க வேண்டும். தினகரனை வளர்த்துவிடுவது நல்லதல்ல' என ஸ்டாலினிடம் விவாதித்துள்ளனர் சீனியர்கள் சிலர். 

டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயலைக் காரணம் காட்டி, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டது தேர்தல் ஆணையம். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் வேட்பாளர்களை அறிவித்தன. தேர்தல் ரத்து அறிவிப்பை அ.ம.மு.க நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகார் மனுவும் தேர்தலுக்கு எதிராக தி.மு.க-வின் நிலைப்பாடும் இடைத்தேர்தலை ரத்து செய்ய வைத்துவிட்டதாகக் கருதுகின்றனர் அ.ம.மு.க-வினர். இதுகுறித்துப் பேட்டியளித்த தினகரன், ``திருவாரூர் இடைத் தேர்தலைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுவது போல பிரதான எதிர்க்கட்சியான திமுக-வும் பயப்படுகிறது. வேட்பாளரை அறிவித்துவிட்டு, தேர்தலுக்கு எதிராக டி.ராஜா ஆகியோரை விட்டு வழக்கு தாக்கல் செய்து இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க’’ என்றார் கொதிப்புடன். 

தினகரனின் கருத்துக்குப் பதில் அளித்த ஸ்டாலின், ``நான் பயந்துகொண்டிருப்பதாகத் தினகரன் கூறுகிறார். பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பதற்காக அவர் பயப்படலாம். நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்திப்பவர் தினகரன். அவர் மீது ஏற்கெனவே ஃபெரா வழக்கு, சி.பி.ஐ விசாரணை, அமலாக்கத்துறை வழக்கு, சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன. அதற்காக அவர் பயந்துகொண்டிருக்கலாம். அ.தி.மு.க-வுடன் ஒன்றாக இருந்த நேரத்தில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது, அதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை வருமான வரித்துறையே வெளியிட்டிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் அவரை ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ தினகரன் என்று யாரும் அழைக்கவில்லை. 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கின்றனர். தி.மு.க பயந்துகொண்டிருக்கிறது என்று அவர் சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது' என்றார் சிரித்தபடியே. இதைத் தொடர்ந்து முரசொலி நாளேட்டிலும் தினகரனைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை வெளியாகியிருந்தது. `20... 120... 420...' என்ற தலைப்பில், 'மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன்கூட விவாதிக்கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன்கூட விவாதிக்க முடியாது என்றார் தந்தை பெரியார். இதில் டி.டி.வி.தினகரன் இரண்டாவது ரகம்’ எனக் கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. 

இந்தக் கட்டுரை தொடர்பாகத் தினகரனிடம் பேசியுள்ளனர் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர். அப்போது பேசிய தினகரன், ``நான் கூறிய கருத்துக்கு அவர் பதில் கூறிவிட்டார். இதன் பின்னரும் முரசொலியில் விமர்சித்து எழுதுகிறார்கள் என்றால், அவர்களைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. பதிலடி கொடுக்காமல் அமைதியாக விட்டுவிடுவது நல்லதல்ல" எனக் கொதித்தவர், `திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பர்யத்திலிருந்து வந்தவர்' என ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார். 

இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர் குறித்து தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இருக்கும்போது, இதுபோன்ற வார்த்தை மோதல்கள் தேவையற்றது எனக் கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். பல மாவட்டங்களில் கட்சியின் அடிப்படைக் கட்டுமானத்தை சரி செய்ய வேண்டிய நிலையில் தலைமை இருக்கிறது. தேர்தல் மோதல் என்பது எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தான் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணமும். ஆனால், செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்குள் வந்த நாளிலிருந்து கள மோதல் என்பது தினகரனுக்கும் ஸ்டாலினுக்குமானதாக மாறி வருகிறது. இதை ஆளும்கட்சியும் கவனித்து வருகிறது. 

தினகரன் கருத்துக்கு ஸ்டாலின் தெரிவித்த கருத்திலும் முரசொலி நாளேட்டில் வெளியான கட்டுரையிலும் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து ஸ்டாலின் தரப்பிடம் பேசியுள்ளனர் சீனியர்கள் சிலர். அப்போது, `உங்கள் கவனத்தை தினகரனை நோக்கி திசை திருப்புகிறீர்கள். இது தவறானது. எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராகத்தான் நம்முடைய தேர்தல் பயணம் இருக்க வேண்டும். வார்த்தைகள் வழியாகத் தினகரனை எதிர்ப்பதன் மூலம் அவர் வளரத்தான் செய்வார்' எனக் கூறியுள்ளனர். இதற்குத் தலைமையிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை’’ என்கின்றனர் ஆதங்கத்தோடு.