Published:Updated:

``நீங்க நல்லா பாடுவீங்களாமே?’’ - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த ஸ்டாலின்

புயலால் எங்கள் ஊரே அழிஞ்சு போச்சு. ஆனால், எங்க ஊர் வி.ஏ.ஓ எந்தவித பாதிப்பும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டார். முதலில் வி.ஏ.ஓ-வை மாற்ற வேண்டும்

``நீங்க நல்லா பாடுவீங்களாமே?’’ - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த ஸ்டாலின்
``நீங்க நல்லா பாடுவீங்களாமே?’’ - கிராம சபை கூட்டத்தில் கலகலத்த ஸ்டாலின்

``மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம். மக்கள் மனங்களை வெல்வோம்’’ என்ற புதிய கோஷத்துடன் தமிழகமெங்கும் தி.மு.க ஊராட்சி சபை கூட்டங்களை நடத்துகிறது. இதன் முதல் கூட்டத்தை திருவாரூரில் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்குவதாக இருந்த ஊராட்சி சபா கூட்டம், சட்டமன்றக் கூட்டத்தொடர் காரணமாகத் தள்ளிவைத்தது தி.மு.க. அதனால், இன்று முதல் கூட்டத்தைத் திருவாரூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதற்காக, சென்னையிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று அதிகாலை 4.15 மணிக்குத் திருவாரூர் ரயில் நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில், செண்டமேளம் முழங்க, பொய்க்கால் குதிரைகள் ஆட, வாண வேடிக்கைகளுடன் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை 200 தி.மு.க தொழிற்சங்கத்தினர் கொடியுடன் அணிவகுத்து வரவேற்பு தந்தனர். சந்நிதி தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்த ஸ்டாலின், வழக்கம்போல் தி.மு.க மகளிர் அணியைச் சேர்ந்த அமுதா சந்திரசேகரன் வீட்டிலிருந்து வந்த காலை உணவு அருந்திவிட்டு 9.45 மணிக்கு புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட வில்வனம்படுகை கிராமத்துக்கு வந்தார்.

அங்கே கூடியிருந்த மக்களிடம் பேசிய ஸ்டாலின், ``மத்தியிலே கொடுமையான, மதவாத வெறிபிடித்த, மோடி ஆட்சி நடைபெறுகிறது. பெரிய முதலாளிகளுக்காக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். மத்திய அரசுக்கு எடுபிடி ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. கஜா புயலால் கதிகலங்கிப்போன மக்களைப் பற்றி இந்த அரசுக்கு எவ்வித கவலையும் இல்லை. 'நானும் ஒரு விவசாயிதான்' என்று சொல்லிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர், எட்டு வழிச்சாலை, உயர் மின் கோபுரம் அமைத்தல் என விவசாயிளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலை செய்துகொண்டிருக்கிறார். எனவேதான் மக்கள் பிரச்னைகளை, மக்களோடு மக்களாக இருந்து அறிந்துகொள்ள கிராம சபா கூட்டங்களை நடத்துகிறோம். கலைஞர் பிறந்த திருவாரூரில் நானும், பெரியார் பிறந்த ஈரோட்டில் கழகப் பொருளாளரும், அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முதன்மை செயலாளரும், மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இதை நடத்துவார்கள். எல்லோரும் பேசுவதற்கு நேரமில்லை என்பதால் உங்கள் பிரச்னைகளை ஒரு சிலர் எழுந்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று முடித்தார். 

முதலில் பேசிய ஒரு பெண்மணி, ``புயலால் எங்கள் ஊரே அழிஞ்சு போச்சு. ஆனால், எங்க ஊர் வி.ஏ.ஓ எந்தவித பாதிப்பும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டார். முதலில் வி.ஏ.ஓ-வை மாற்ற வேண்டும்’’ என்றார். அடுத்துப் பேசியவர், ``எங்கள் ஊர் பள்ளிவாசல் தெருவில் உள்ள பேருந்து நிலைய கட்டடம் சிதைந்துபோய்விட்டது. எனவே, புதிய பேருந்து நிலைய கட்டடத்தைக் கட்டித் தர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். தே.மு.தி.க-விலிருந்து தி.மு.க-வுக்கு மாறி வந்த பெண்மணி ஒருவர், கருணாநிதி அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், ``நீங்கள் நன்றாகப் பாடுவீர்களாமே? என்று கேட்க, கருணாநிதியைப் பற்றிப் பாடல் ஒன்றைப் பாடினார். இறுதியாக பேசிய ஸ்டாலின், ``அடுத்தடுத்து வரப்போகும் தேர்தலில் உங்கள் ஆதரவை தி.மு.க-வுக்குத் தர வேண்டும். அடுத்து அமையப்போகும் தி.மு.க ஆட்சியில் நீங்கள் சொன்ன அத்தனை குறைகளும் உடனடியாகக் களையப்படும்" என்று கூறி விடைபெற்றார்.