Published:Updated:

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

Published:Updated:
அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

த்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல்களில் பெற்றிருக்கும் வெற்றி, காங்கிரஸுக்கு புத்துணர்வு அளித்திருக்கலாம். ஆனால், அந்த வெற்றியை அடைய, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்வுசெய்த ‘இந்துத்துவா பாதை’ காங்கிரஸ் மீதுள்ள மதச்சார்பின்மை நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகக் குலைத்துப்போட்டுள்ளது. ஓட்டு வாங்குவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா ராகுல் காந்தி?

காவி அரசியலை, கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலிலேயே ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ். ‘நான் ஓர் இந்து’ என்று அறிவித்த ராகுல், அடுத்தடுத்து கோயில் படியேறினார். கர்நாடகத் தேர்தலிலும் அதையே தொடர்ந்தார். ‘திப்பு ஜெயந்தி’ கொண்டாடிய சித்தராமையாவையே, ‘என்னுடையது ராமர் பெயர்’ என்று பேசவைத்தார். இதோ இப்போது மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்... என்று தொடர்கிறது காங்கிரஸின் காவிப் பயணம். நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் இது தொடரலாம்.

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

ராகுல் மானசரோவருக்கு மலை ஏறட்டும். ‘நான் தத்தாத்ரேயா கோத்திரம்’ என்று முழங்கட்டும். இதெல்லாம் பிரச்னை இல்லை. ஆனால், அவை அரசியலில் எதிரொலிப்பதுதான், காங்கிரஸின் பாரம்பர்யமான மதச்சார்பின்மைக்கு சவால்விடுகிறது. ‘நாட்டை நாசப்படுத்திவரும் பி.ஜே.பி-யை வீழ்த்த இந்துத்துவத்தை பயன்படுத்துகிறார் ராகுல்’ என்கிறார்கள் ராகுல் ஆதரவாளர்கள். அப்படியென்றால், வெற்றிக்காக எதையும் செய்யுமா காங்கிரஸ்? நாளைக்கு நீங்களும் எதையாவது இடிப்பதற்கு கடப்பாரை தூக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ராகுல்? மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தலில் அறிக்கைகளில் பி.ஜே.பி-யைப் போலவே சொல்லியிருக்கும் ‘காவி’ வாக்குறுதிகள் எதைக் காட்டுகின்றன?

2014 நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி பெற்ற இமாலய வெற்றி, அதன் இந்துத்துவக் கொள்கைகளால் கிடைத்தது என்று காங்கிரஸ் தப்புக்கணக்கு போடுகிறது. பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தி, மோடி முன்னெடுத்த ‘வளர்ச்சி’ முழக்கம் ஆகியவையே பி.ஜே.பி-யை அரியணை ஏற்றின. பிரதமர் ஆவதற்கு முன்னால் பிரசாரக் கூட்டங்களில் பேசிய மோடி, ‘இந்துத்துவா’ முழக்கத்தை அநேக இடங்களில் எழுப்பவில்லை. வென்ற பிறகே, வாரணாசி சென்றார். ‘நான் இந்து தேசியவாதி’ என்றார்.

அப்போதிருந்து, காவிப்படை கனஜோராகக் களமிறங்கியது. ‘பசுவைப் பாதுகாப்போம்’ என்று ஊர்வலம் கிளம்பினார்கள். ‘மாட்டுக்கறி தின்றால் கொல்வோம்’ என்று மிரட்டினார்கள். ‘கோட்சேவுக்கு சிலை அமைப்போம்’ என்று கோஷமிட்டார்கள். ‘இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லோரும் இந்துக்களே’ என்று முழங்கினார்கள். மதத்துடன் அரசியல் கலந்தது. அரசியலுடன் மதம் கலந்தது. அரசு என்பது ஆட்சியாளர்களிடமிருந்து சில அமைப்பு களிடம் சென்றது. இதெல்லாம், ஆட்சியின் சீர்கேடுகளை மறைப்பதற்காக என்றாலும், விளைவுகள் மோசமானதாக இருந்தன.

இப்போது, காங்கிரஸும் ‘தேசிய வாதம்’ என்ற இடத்திலிருந்து, ‘இந்து தேசிய வாதம்’ என்ற இடத்துக்கே நகர்கிறது. அடிப்படையில், ‘இந்து தேசிய வாதம்’ என்பதே மாயை. மூத்த அரசியல் ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, ‘இந்தியாவின் தேசிய வாதம், மதம் சார்ந்தது அல்ல. அது அனைவரையும் அரவணைக்கும் அரசியலமைப்பு சார்ந்தது’ என்கிறார். உண்மையில், ‘இந்து தேசியவாதிகள்’ என்று சொல்லிக்கொண்டு, இந்து தேசத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். அதற்காக, ‘வளர்ச்சி’ என்று கத்துகிறார்கள். ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு’ என்ற இலக்கை நோக்கி நகர்கிறார்கள். அதைத் தடுக்க வேண்டிய காங்கிரஸும், ‘இந்து தேசிய வாதம்’ என்ற கருத்தாக்கத்தை வளர்ப்பது ஆபத்தானது இல்லையா.

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

அரசியலைமைப்புச் சட்டத்தில், ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையைச் சேர்த்தவர் இந்திரா. இப்போது இந்திராவின் பேரனே அதை மீறுவது எந்த வகையில் நியாயம்? அரசியல் பார்வை யாளர்கள், ‘இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறாமல் இருக்கிறதென்றால், அது இன்னும் காந்தி மற்றும் நேருவின் கோட்பாட்டில் நிற்கிறது என்பதால்தான்’ என்கிறார்கள். ஆக, காங்கிரஸின் பாதை, நேருவின் பாதையா அல்லது நேருவை எதிர்த்தவர்களின் பாதையா? மக்கள் மத்தியில் விரிசல் ஏற்படுத்தி விரிவடைந்த கட்சிக்கும், மக்களை ஒன்றுதிரட்டிச் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த கட்சிக்கும் வித்தியாசம் இல்லையா?

‘இந்துக் கோயில்களுக்குச் செல்வதாலேயே ராகுலை மதவாதி என்று சொல்லிவிட முடியாது. அவர் தர்காக்களுக்கும் தேவாலயங்களுக்கும்கூட செல்கிறார்’ என்பதும் ராகுல் ஆதரவாளர்கள் வைக்கும் வாதம்.
 
தலைவன் தவறிழைக்கும்போது எடுத்துச் சொல்வதே தர்மம். ஆனால், காங்கிரஸ் நிர்வாகி களின் சமீபத்தைய பேச்சுகள் ராகுலுக்கு ராகம் பாடுகின்றன. மூத்த தலைவர் சி.பி. ஜோஷி, ‘இந்துயிசத்தை பிராமணர்கள்தான் பேசவேண்டும். மோடியோ, உமாபாரதியோ பேசக்கூடாது’ என்கிறார். செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜ்வாலா, ‘காங்கிரஸ் தலைவரிடம் பிராமண மரபணு இருக்கிறது’ என்கிறார். இப்படியெல்லாம் பேசிவிட்டு, எந்த அடிப்படையில் ‘பி.ஜே.பி இந்துத்துவக் கட்சி. அவர்கள் மதவெறியர்கள்’ என்று குற்றம்சாட்டுகிறீர்கள்?

ராஜஸ்தானில் வசுந்தராவுக்கு அரியணையைக் கொடுத்த அதே இந்துத்துவா அரசியல்தான், அவரை அங்கே அதலபாதாளத்தில் தள்ளியிருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசு பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கினார் வசுந்தரா. பசு குண்டர்களின் அட்டூழியங்கள் பதற வைத்தன. இதோ, அந்தத் துறையின் அமைச்சர் ஒடாரம் தேவசி, சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார்.

பி.ஜே.பி-யின் பின்னடைவு தரும் ஆசுவாசத்தைவிட காங்கிரஸின் காவிப் பாதை அரசியல்

அச்சுறுத்தும் காங்கிரஸின் காவி அரசியல்!

நடுநிலையாளர்களை மிகவும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. ‘இப்போது அரசியல் பாதையை மாற்றுபவர்கள், நாளைக்கு அரசியலமைப் பையே மாற்றமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?’ என்று கவலைப்படுகிறார்கள். ‘பி.ஜேபி-யை எதிர்ப்பதாலேயே காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி ஆகிவிட முடியாது. மோடியை வீழ்த்த மோடி முகமூடி அணிந்துதான் களத்துக்கு வரவேண்டுமா? நேருவும் காந்தியும் அப்படியா செய்தார்கள்? மதச்சார்பு அரசியலை, மதச்சார்பற்ற அரசியலால் அல்லவா அவர்கள் எதிர்த்தார்கள்’ என்று கொதிக்கிறார்கள் அவர்கள்.

காந்தி கட்டமைத்த காங்கிரஸ், நேரு தலைமையேற்ற காங்கிரஸ், இப்போது இந்துத்துவத்தில் வந்து நிற்கிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘சபரிமலையை அடுத்த அயோத்தியாக மாற்ற முயற்சி செய்கிறது பி.ஜே.பி. அதை எதிர்க்க வேண்டிய காங்கிரஸ், பி.ஜே.பி எடுத்த நிலைப்பாட்டையே எடுக்கிறது. அவர்கள் பேசுவதற்கும் இவர்கள் பேசுவதற்கும் வித்தியாசமே தெரியவில்லை’ என்று சொல்வதில் நிறையவே நியாயம் இருக்கிறது.

இது இந்தியா. மதச்சார்பற்று இருப்பதே இதன் தனித்துவம், மகத்துவம். இந்தத் தேசத்தின் உருவாக்கத்தில் இங்கிருக்கும் எல்லா மதத்தினருக்கும் பங்குண்டு. இதை எவர் உணரவில்லையென்றாலும், மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால்தான், அப்துல்கலாமுக்கு அழுதவர்கள் வாஜ்பாயிக்கும் அழுதார்கள். இதுதான் இந்தியாவின் பன்முகத் தன்மை.

ராகுல்காந்தி முதலில், ‘பி.ஜே.பி-யை வெல்வது மட்டுமே காங்கிரஸின் கடமை’ என்ற மாயையிலிருந்து வெளியே வர வேண்டும். பி.ஜே.பி சித்தாந்தத்துக்கு நேர் எதிரானது காங்கிரஸின் சித்தாந்தம் என்பதை அவர் உணரட்டும். ‘காங்கிரசின் தலைவர் பதவி என்பது, அரசியலுக்கும் அப்பாற்பட்ட பொறுப்பும் கடமையும் கொண்டது. மதத்தை நம்புவதைவிட்டு அவர், மக்களை நம்பினாலே போதுமானது.

மாபெரும் புரட்சியாளன் லெனின், மார்க்சியத்திலிருந்து விலகி, சில காரியங்களை ஆற்றினார். அதைக் குறிப்பிட்டு எழுதிய சிந்தனையாளர் மிஷெல் பூக்கோ, ‘லெனின் செய்ததை அறிந்தால் மார்க்ஸ் கல்லறையில் நெளிவார்’ என்று வர்ணித்தார். நேருவைக் கல்லறையில் நெளியவைத்து விடாதீர்கள், ராகுல்!

- சக்திவேல்