Published:Updated:

`ரத்து பண்ணிட்டாங்களே; நாங்கள் என்ன செய்வது!'- கலகலத்த திண்டுக்கல் சீனிவாசன்

`ரத்து பண்ணிட்டாங்களே; நாங்கள் என்ன செய்வது!'- கலகலத்த திண்டுக்கல் சீனிவாசன்
`ரத்து பண்ணிட்டாங்களே; நாங்கள் என்ன செய்வது!'- கலகலத்த திண்டுக்கல் சீனிவாசன்

`பா.ஜ.க-வுக்குத் துதிபாட வேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்கு இல்லை'' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆவின் தலைவர் பதவி ஏற்பு விழா இன்று திண்டுக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் சீனிவாசன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேடி செல்லச்சாமி தலைவராகப் பதவி ஏற்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று சட்டசபையில்கூட முதல்வர் முன்னிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இதைத் தெரிவித்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரை எந்த ரூபத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று வந்தாலும் அதற்கு எதிரான அத்தனை மனுக்களும் அரசாங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். எந்த ரூபத்திலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க விடமாட்டோம்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதன் காரணமாக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவு இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. சட்டத்தை மதித்து அவர் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலைப் பார்த்து அ.தி.மு.க பயப்படவில்லை. நாங்கள் காலையில் வேட்பாளரை அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தோம். முதல் நாள் இரவே தேர்தலை ரத்து செய்துவிட்டார்கள். நாங்கள் என்ன செய்வது. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் தமிழ்நாட்டில் போட்டி. வேறு எந்தக் கட்சிக்கும் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. ஆகையால் தனித்துதான் நாங்கள் போட்டியிடுவோம். எங்களுக்கு எதிரி தி.மு.க தான். அ.தி.மு.க பா.ஜ.க-வுக்குத் துதி பாடவில்லை. கஜா புயலுக்கான  நிவாரணத் தொகை  இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை எனச் சட்டசபையில் முதல்வர்  பேசியுள்ளார். துதி பாடுவதற்கு அவசியமில்லை''  என்றார்.