சமூகம்
Published:Updated:

மெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்!

மெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்!

மெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்!

மொத்த மெக்சிகோவையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு வருகிறார் புதிய அதிபர் ‘மக்கள் நாயகன்’ ஆன்ட்ரஸ் மான்வல் லோபெஸ் ஒப்ரடோர். அதிபரின் ஊதியம் 60 சதவிகிதம் வெட்டு, அதிபருக்கான சொகுசு விமானம் விற்பனை, அரசு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏலம், அதிபர் மாளிகையை மக்களுக்கான கலாசார மையமாக மாற்றியது என்று அவர் அரங்கேற்றிவரும் அதிரடிகளால் மெக்சிகோ அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுமே அரண்டுதான் போயிருக்கின்றன!

மெக்சிகோவில் கடந்த 70 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக் கிறார்கள் இடதுசாரிகள். 2006, 2012 ஆகிய ஆண்டுகளில் இருமுறை தோல்வியடைந்த ஓப்ரடோர் தனது மூன்றாவது முயற்சியில், நிறுவனப் புரட்சிகரக் கட்சியை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, அதிபராகியிருக்கிறார். இவர் மெக்சிகோ மாநகரின் முன்னாள் மேயரும்கூட. நடந்துமுடிந்த தேர்தலில் இரு அவைகளிலும் பெரும்பாலான இடங்களை இவரது தலைமை யிலான மொரீனா கூட்டணி கைப்பற்றியதால் ஓப்ரடோருக்கு முழு அதிகாரம் கைவசமாகியி ருக்கிறது.

இதனால் அதிரடி பேர்வழியான இவருக்கு இடதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்துவதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. பதவியேற்றச் சில நிமிடங்களிலேயே தனது அதிரடிகளைத் தொடங்கிவிட்டார் ஓப்ரடோர். எளியவராகத் தன்னை முன்னிறுத்திய ஓப்ரடோர், ‘மக்களால் நான்... மக்களுக்கான நான்’ என்கிற பாணியை கையில் எடுத்திருக்கிறார். அதன் முதல் நடவடிக்கையாக அதிபர் மாளிகையை உதறினார். மாளிகையை மெக்சிகோ கலாசார மையமாக மாற்றியவர், அதை மக்களுக்காகத் திறந்துவிட்டார். அதிபருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையைக் கலைத்தவர், அதன் வீரர்களைப் பொதுமக்கள் பாதுகாப்புக்குச் செல்ல உத்தரவிட்டார். அதிபருக்கு இருந்த சொகுசு விமானத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டவர், பயணிகள் விமானத்தில்தான் பயணிப்பேன் என்று சொல்லிவிட்டார். கூடவே அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 60 விமானங்களும் 70 ஹெலிகாப்டர்களும் ஏலத்தில் விடப்பட்டு, மக்கள் பணிகளுக்காகப் பணத்தைத் திருப்பிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. தனது ஊதியத்தை 60 சதவிகிதமாகக் குறைத்தவர், முன்னாள் அதிபர்களின் ஓய்வூதியத்தை மொத்தமாக ரத்து செய்துவிட்டார். அரசு அதிகாரிகளுக்கான ஊதியங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ மாநகருக்காக 13 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட விமான நிலையத் திட்டமும் இப்போது தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார்.

மெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்!

தேர்தலுக்கு முன் மெக்சிகோவின் எண்ணெய்த் துறையைத் தனியார்மயமாக்குவதையும் நாட்டை அன்னிய முதலீட்டுக்குத் திறந்துவிடுவதையும் கடுமையாக எதிர்த்தவர், ஓப்ரடோர். இதுபோன்ற அதிரடிகளால் பங்குச்சந்தை சரிந்து, மெக்சிகோவின் நாணயமான ‘பெசொ’வின் மதிப்புக் குறைந்தது பற்றி கொஞ்சமும் அவர் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கைகளால் மெக்சிகோவின் சந்தைப் பொருளாதாரம், பிற நாடுகளுடான பொருளாதார உறவுகள் பாதிப்பு அடைந்திருக்கின்றன. தவிர, போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்கள், ஏராளமான வன்முறை, வழிப்பறி கும்பல்கள், சிக்கலான அண்டை நாட்டு உறவுகள்... இவை எல்லாம் அதிபரின் முன்னிருக்கும் முக்கியமானப் பிரச்னைகள்.

குடியேறிகளுக்கு எதிரான ட்ரம்ப்பின் நிலைப்பாடு, கணிசமான மெக்சிகர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டது, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் அறிவிப்புகள் இவையெல்லாம் அமெரிக்கா - மெக்சிகோ உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. போதாக்குறைக்கு தனது பதவியேற்பு விழாவில் கியூபாவின் அதிபர் மிகைல் டியாஸ் கனேல், பொலிவியா அதிபர் இவா மொராலிஸ் உள்ளிட்ட இடதுசாரி விருந்தினர்களைப் பாராட்டிய ஓப்ரடோர், ‘இனி மெக்சிகோ அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படாது’ என்றும் அறிவித்தது, ட்ரம்ப்பை இன்னும் சூடாக்கியிருக்கிறது.

கொள்கை அளவில் இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரு நாடுகளும் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச்செல்ல முடியாது. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கும் குடியேறிகளைத் தடுக்க, அமெரிக்காவுக்கு மெக்சிகோ தேவை. தனது சந்தைத் தேவைகளுக்காக மெக்சிகோவுக்கு அமெரிக்கா தேவை. 1995-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் தலைதூக்கினால் மெக்சிகோ தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம்தான். கடந்த 40 ஆண்டுகளில், மெக்சிகோ பொருளாதாரம் நான்கு முறை வீழ்ச்சியடைந்துள்ளது. மெக்சிகோவின் நிலைத்த பொருளாதாரம் இரு நாடுகளுக்குமே அவசிய மானது. எனவே, இரு நாடுகளுக்கும் தேவை அதிரடி மட்டுமல்ல... பரஸ்பர அன்பும்தான்!

 - கே.ராஜு