Published:Updated:

நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!

நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!
பிரீமியம் ஸ்டோரி
நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!

நூற்றாண்டுப் போராட்டத்துக்கு நீதி கிடைக்குமா?

நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!

நூற்றாண்டுப் போராட்டத்துக்கு நீதி கிடைக்குமா?

Published:Updated:
நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!
பிரீமியம் ஸ்டோரி
நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் நீர் ஆதாரத்துக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது, நந்தன் கால்வாய் திட்டம். இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 50 ஏரிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் நந்தன் கால்வாயைச் சீரமைத்துப் புனரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளருக்கு செஞ்சி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூர் துரிஞ்சலாற்றின் குறுக்கே உள்ள கீரனூர் அணைக்கட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரி வரையிலான சுமார் 37 கி.மீ தூரமுள்ள நந்தன் கால்வாய் முழுவதும் தூர்ந்துபோயுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, பருவமழை பொய்த்துவிட்ட சூழலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் வறண்டுள்ளன. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை இடதுபுறக் கால்வாய் வழியாகத் திருப்பி நந்தன் கால்வாயை இணைத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும் விழுப்புரம் மாவட்டத்தில் 36 ஏரிகளும் நிரம்பும். இதனால், இரண்டு மாவட்ட விவசாயிகளும் பயனடைவார்கள். எனவே, பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் இந்தத் திட்டத்தை ஆய்வுசெய்து தமிழக அரசுக்கு  அறிக்கை அனுப்ப வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியிடம் கேட்டோம். அவர், ‘‘நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்வது துரிஞ்சலாறு. இது ஒரு காட்டாறு என்பதால், மழைக்காலத்தில் மட்டும்தான் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு இந்தத் தண்ணீர் போதுமானதல்ல. எனவே, நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாகப் பலனளிக்க வேண்டுமானால், இதைத் தென்பெண்ணையாற்றுடன் இணைப்பதுதான் சிறந்த வழி. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பின்போதே, நந்தன் கால்வாய் திட்டத்தையும் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். உலக வங்கியும் ரூ.300 கோடி தரத் தயார் என்றது. ஜெயலலிதா அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அக்கறை எடுத்திருந்தால், திட்டம் நிறைவேறியிருக்கும். இப்போதைய அ.தி.மு.க அரசு இந்தத் திட்டதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

நந்தன் கால்வாய்ப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் அன்னியூர் சிவா, ‘‘நந்தன் கால்வாயின் தொடக்கப்புள்ளியான பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் இருந்த அணைக்கட்டு, 1886-ம் ஆண்டு உடைந்தது. பல தலைமுறைகள் மாறியும், அது இன்னும் சரிசெய்யப்படவில்லை. அதனால், 132 ஆண்டுகள் கடந்தும் நந்தன் கால்வாயில் தண்ணீர் ஓடவில்லை. நிலத்தடி நீர், 500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இப்போது குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இப்பகுதி விவசாயிகள் பிழைப்புத் தேடி சென்னைக்கும் பெங்களூருவுக்கும் சென்றுவிட்டனர். கால்வாய் சீரமைப்பு என்ற பெயரில் அடிக்கடி கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீணடிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!

விக்கிரவாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, ‘‘விழுப்புரம் மாவட்டத்தின் வட பகுதிகளில் ஏரி மற்றும் கிணற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. எனவேதான், நந்தன் கால்வாய்க்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பல தடவைப் பேசினேன். 1939-ம் ஆண்டு, ராஜாஜி காலத்திலிருந்து, இப்போதுள்ள எடப்பாடி பழனிசாமி காலம்வரை நந்தன் கால்வாயைப் பற்றி பலரும் சட்டமன்றத்தில் பேசியுள்ளனர். இந்த ஆட்சியில் நந்தன் கால்வாயைப் புனரமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகியும், இன்னும் அதைத் தயாரித்தபாடில்லை’’ என்றார் கோபத்துடன்.

விழுப்புரம் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினரும் சட்ட அமைச்சருமான சி.வி.சண்முகம், ‘‘நந்தன் கால்வாயின் பிரதான நீர் ஆதாரமான சமுத்திரம் ஏரிக்கு, சாத்தனூர் அணையிலிருந்து உயர்மட்ட அளவில் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம், பெண்ணையாறு - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டம் மூலம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அ.தி.மு.க அரசு 2016-2017-ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக, ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பொதுப்பணித் துறை அதிகாரிகளை அழைத்து, நந்தன் கால்வாய் திட்டப் பகுதிகளில் ஆய்வு நடத்தினேன். திட்ட அறிக்கை விரைவில் தயாராகிவிடும். வரும் பட்ஜெட்டில், நந்தன் கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிப் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்,அ.சையது அபுதாஹிர்

படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism