Published:Updated:

பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: நீதிமன்றம் அனுமதிக்குமா? சட்ட வல்லுநர்கள் கருத்து!

``50 சதவிகித இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நிர்ணயித்தது நீதிமன்றம்தான். இப்போது 10 சதவிகிதம் சேர்த்து ஏன் 60 சதவிகிதமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்."

பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: நீதிமன்றம் அனுமதிக்குமா? சட்ட வல்லுநர்கள் கருத்து!
பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: நீதிமன்றம் அனுமதிக்குமா? சட்ட வல்லுநர்கள் கருத்து!

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் அனைத்துக் கட்சிகளுமே கூட்டணிக் கணக்குகள், தேர்தல் வியூகங்கள் எனப் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கடந்த ஓராண்டுக் காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும், அண்மையில் முடிவடைந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் ஆளும் பி.ஜே.பி-க்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

`விவசாயிகள் போராட்டம்', `பெட்ரோல், டீசல் விலையேற்றம்', `ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு' என மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசைக் குறிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவர்ந்தே ஆக வேண்டும் என்பதில் பி.ஜே.பி. மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாகப் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு இரண்டு நாள்கள் இருந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய முடிவெடுத்தது எதிர்க்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற சாத்தியமில்லாத ஒரு மசோதா பற்றிய முடிவை பி.ஜே.பி. அரசு எடுத்திருப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். ஆம் ஆத்மி, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இடஒதுக்கீடு முறையில் திருத்தம் கொண்டுவர வேண்டுமானால், அதற்கான சட்டத்தைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில், பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டத்திருத்தத்தின்படி, அரசியலமைப்புச் சட்டம் 15 (4) (இடஒதுக்கீடு தொடர்பானது) பிரிவில் சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்கள் என்பதோடு, பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் என்கிற பிரிவும் சேர்க்கப்படுகிறது. என்றாலும் மாநிலங்களவையிலும் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அங்கு, நேற்று இரவு தொடங்கிய வாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக 7 பேரும் வாக்களித்தனர். இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டால் சட்டமாக மாற்றப்படும். அதே சமயம் இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தால் என்ன நடக்கும்? விளக்குகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்தச் சட்ட மசோதா குறித்து, பாட்டாளி மக்கள்

கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம்.

அவர், ``இது, வட இந்திய உயர் சாதியினரின் வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகம். நான்கரை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது ஏற்படாத இதுபோன்ற இட ஒதுக்கீடு தேவை இப்போது ஏன் வந்தது? இது முற்றிலும் தவறானது; சமூக நீதிக்கு எதிரானது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பதே தவறு. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது நிலைக்காது. 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நிர்ணயித்தது நீதிமன்றம்தான். இப்போது 10 சதவிகிதம் சேர்த்து ஏன் 60 சதவிகிதமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கான விளக்கத்தை மத்திய அரசு, நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. முதல் நாளில் அமைச்சரவையில் நிறைவேற்றி, மறுநாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பெரிய விவாதம் எதுவுமின்றியே நிறைவேற்றுவதற்கான அவசியம் என்ன? ஐந்து மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி. அடைந்த தோல்விதான் இத்தகைய மசோதாவைக் கொண்டுவரக் காரணம் எனலாம். பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என அளவுகோல் வைத்தால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவர நேரிடும்.

1951-ம் ஆண்டு இட ஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தந்தை பெரியார் தலைமையில் 3 லட்சம் பேர் அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராடித்தான், முதலாவது சட்டத் திருத்தத்தைப் பெற முடிந்தது. ஆனால், இன்று முற்பட்ட வகுப்பினர் கேட்காமலேயே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தப் பிரச்னையில் மௌனம் காத்து வருவது தவறான முன்னுதாரணமாகி விடும். சமூக நீதி பேசுவதாகச் சொல்லிக்கொள்கிற பி.ஜே.பி., 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கொள்கை முடிவையாவது அறிவிக்குமா? குறுகிய கால வாக்கு அரசியலுக்காகக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பவாத முடிவுதான் இது" என்றார்.

பி.ஜே.பி. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.டி. ராகவன், ``அனைவருக்குமான வளர்ச்சி என்கிற முழக்கத்தோடுதான் பி.ஜே.பி. அரசு, அனைத்துத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இத்தகைய இட ஒதுக்கீடு பற்றி ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் இதற்கான முயற்சிகளை எடுத்தார். மேலும், 1992-ம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை செய்யக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (4) பிரிவில் சமூக, கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், தற்போது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி பொருளாதாரம் என்பதையும் சேர்த்துள்ளோம்.

எனவே, `பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று கூறி, நீதிமன்றம் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாமல் நரசிம்மராவ் ஆட்சியில் வெறும் அரசு உத்தரவாக அது கொண்டு வரப்பட்டது. தற்போது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்பதால் சட்டபூர்வமாக அதற்கு மதிப்பு அதிகம். அரசியலமைப்புச் சட்டம் தற்போது 124-வது முறையாகத் திருத்தப்படுகிறது. அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் நீதிமன்றம் ரத்து செய்துவிடவில்லையே. எனவே, இந்தச் சட்டத்திருத்ததையும் நீதிமன்றம் தடை செய்யாது என நம்புகிறோம். காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியிலும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. அனைத்துக் கட்சிகளுமே இதற்கு ஆதரவு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.