Published:Updated:

மாநிலங்களவையில் நிறைவேறியது 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா!

மாநிலங்களவையில் நிறைவேறியது 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா!
மாநிலங்களவையில் நிறைவேறியது 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா!

பொதுப் பட்டியலில் உள்ள  பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்க்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை  மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றுவது குறித்த விவாதங்களும் வாக்கெடுப்பவர்களும் ஜனவரி 8-ம் தேதி மக்களவையில் நடந்த நிலையில் 323 வாக்குகள் ஆதரவாகப் பெற்று மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பொருளாதார ரீதியாக 10%  இடஒதுக்கீடு குறித்த மசோதா ஜனவரி 9-ம் தேதி மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டு  விவாதங்களும் வாக்கெடுப்புகளும் நடத்தப்பட்டன. இந்த விவாதத்தில் தமிழகத்தைச் சார்ந்த கனிமொழி , டி.கே.ரங்கராஜன், டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது பேசிய சி.பி.ஐ சார்ந்த டி.ராஜா “ பொருளாதார அடிப்படையாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த இடஒதுக்கீட்டை, இந்த அரசால் தனியார் துறையில் கொண்டுவர முடியுமா. அப்படிக் கொண்டுவந்தால் அதை நாங்கள் ஆதரிப்போம்” என்றார்.

அதேபோல் தி.மு.க மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை செயலாளருமான கனிமொழி பேசுகையில், “ நான் நூறு ஆண்டுகள் சமூக நீதியின் வரலாறுகளைக் கொண்ட பெரியாரின் மண்ணில் இருந்து வருகின்றேன். இந்தியாவில் முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி, முதன்முதலில் வகுப்புவாத அடிப்படையில்  இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டது நீதிக்கட்சி. இந்த பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த முதலில் அரசு ஆணையத்தை அமைக்க வேண்டும் அதன் பின்னர் தான் நிறைவேற்ற முடியும். ஆனால் எந்த ஆணையமும் அமைக்காமல் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை எதிர்க்கிறோம்” என்றார்.

மாநிலங்களவையில் பல மணி நேரம் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் பங்கேற்ற  172 மக்களவை உறுப்பினர்களில் 165 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 7 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்குகள் பதிவான  நிலையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு  மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.