Published:Updated:

“ஆயிரம் ரூபாய் கொடுத்தா ஓட்டு விழுந்துடுமா என்ன..!” - மக்களிடம் கலகலத்த துரைமுருகன்

“ஆயிரம் ரூபாய் கொடுத்தா ஓட்டு விழுந்துடுமா என்ன..!” - மக்களிடம் கலகலத்த  துரைமுருகன்
“ஆயிரம் ரூபாய் கொடுத்தா ஓட்டு விழுந்துடுமா என்ன..!” - மக்களிடம் கலகலத்த துரைமுருகன்

'அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க சார்பில் பொதுமக்களை சந்திக்கும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்படும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தை தி.மு.க பொருளாளரும், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான தயாநிதி மாறனும் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இந்தக் கூட்டத்துக்கு பொது இடத்தில் அனுமதி மறுக்கப்பட, ஈரோடு மாவட்டம் லக்காபுரம், கஸ்பாபேட்டை, எலவமலை, கூரபாளையம் ஆகிய பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடைய சொந்த இடத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தின்போது துரைமுருகன் பேசுகையில், “பெரிய திட்டங்களில் உள்ள குறைகளைப் பேசுகிறோம். ஆனால், கிராமங்களில் சாதாரண மக்களுக்கும் பிரச்னை இருக்கிறது. அதை அவர்களிடத்தில் சென்று களைய நாம் முயற்சி எடுக்க வேண்டும் என தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். தமிழகத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் வேறு யாரும் இதைப்போல ஒரு முயற்சியை எடுத்ததில்லை. சின்னச்சின்ன கிராமங்களில்கூட நூற்றுக்கணக்கான குறைபாடுகள் இருக்கின்றன. யாரும் சிப்காட் தொழிற்பேட்டை, பெரிய பெரிய தொழிற்சாலைகள் வேணும்னு கேட்கவில்லை. எல்லாம் குடிநீர் பிரச்னை, சாக்கடை, சாலை வசதி எனச் சாதாரணமான கோரிக்கைகளைத்தான் வைத்திருக்கிறீர்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், மிக விரைவில் தமிழகத்தில்  ஓர் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க-தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்ற ஆழமான நம்பிக்கை மக்கள் மத்தியில் வந்துவிட்டது. இதுவரை பிரச்னையை நீங்கள் சுமந்தீர்கள். இப்போது எங்களிடம் இறக்கிவைத்திருக்கிறீர்கள். குறையை நாங்கள் கேட்டதே, உங்களுக்குப் பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். அந்த ஒரு ஆறுதலுக்காகத்தான் நாங்கள் உங்களைச் சந்திக்கிறோம். பிரச்னையை முடிந்தவரைக்கும் முயற்சிசெய்து தீர்ப்போம். இல்லாவிட்டால், தி.மு.க ஆட்சி அமைந்ததும் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “கடந்த தேர்தலில் நீங்கள் வாக்களித்து வெற்றிபெற்றவர்கள் உங்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால், தோற்றுப்போன கட்சிக்காரர்களாகிய நாங்கள் வந்து மக்களுடைய குறைகளைக் கேட்கிறோம். ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் உங்களுக்காக உழைக்கின்ற ஒரே கட்சி தி.மு.க தான். ஆளும்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் கோடி கோடியாகப் பணத்தை சம்பாதிக்குறாங்க. ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்துட்டு, உங்ககிட்ட ஓட்டு வாங்கிடலாம்னு நினைக்கிறாங்க. காசு கொடுத்தா மக்கள் ஓட்டு போட்டுருவாங்கன்னு இன்னும் அவங்க நம்பிக்கிட்டு இருக்காங்க. அப்படிப் பார்த்தா காங்கிரஸ்காரர்களிடம் இல்லாத காசா... அப்புறம் ஏன் போன தேர்தல்ல அவங்க தோத்தாங்க. எனவே, அ.தி.மு.க காரங்க கொடுக்குற காசை வாங்கிக்குங்க. ஆனா, உங்க மனசாட்சிப் படி ஓட்டு போடுங்க” என்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய துரைமுருகன், “கலை உணர்வுமிக்க சிலைகள் திருடுபோவது அவமானம். அதைத் தேடி கண்டுபிடிக்க வந்த அதிகாரிக்கு, ஊக்கம் கொடுக்கவேண்டியது அரசினுடைய கடமை. பொன்.மாணிக்கவேல் யோக்கியரா என்று ஒரு அமைச்சர் கேட்கிறார். இதனையெல்லாம் பார்க்கையில், சிலைக் கடத்தலை அரசே ஆதரிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் பல முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆரம்பத்திலேயே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. அமைச்சர்களுக்கும், அரசு செயலாளர்களுக்குமான உறவில் சிறு விரிசல்கூட இருக்கக் கூடாது. அப்போதுதான் அரசு சுமுகமாக இயங்க முடியும்” என்றார்.