Published:Updated:

`எங்கள் ஸ்டைலில் பார்த்துக் கொள்கிறோம்!'  - எடப்பாடியிடம் தெளிவுபடுத்திய டெல்லி பா.ஜ.க.

`எங்கள் ஸ்டைலில் பார்த்துக் கொள்கிறோம்!'  - எடப்பாடியிடம் தெளிவுபடுத்திய டெல்லி பா.ஜ.க.
`எங்கள் ஸ்டைலில் பார்த்துக் கொள்கிறோம்!'  - எடப்பாடியிடம் தெளிவுபடுத்திய டெல்லி பா.ஜ.க.

தம்பிதுரைக்கு அதிகாரம் இருக்கிறதா எனக் கேட்கிறார் பொன்னார். அதேபோல், பா.ஜ.க யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதையும் பொன்னார் தீர்மானித்துவிட முடியாது.

பா.ஜ.க கூட்டணி குறித்து தம்பிதுரை கூறிய கருத்தால் தகித்துக் கொண்டிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். `மேக்கேதாட்டூ, இடஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராகக் கொதிக்கத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க. வரும் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, வி.சி.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸ் எந்தக் கருத்தையும் கூறாமல் அமைதியாக இருப்பதை விமர்சித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன். தன்னுடைய அறிக்கையில், முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா என்னும் கேள்வி எழுகிறது. முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்தவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் மத்திய அரசின் முடிவை அவர் கண்டித்துள்ளார். அதைப் பார்த்ததும் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் போது நிச்சயமாக அவர் அதை எதிர்த்துப் பேசுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசாததன்மூலம் அந்த மசோதாவுக்கு மறைமுக ஆதரவு அளித்தது ஏன்.எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் மருத்துவர் ராமதாஸ் இந்தப் பிரச்னையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன் என விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அ.தி.மு.க எம்.பிக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தம்பிதுரை மட்டும் விவாதத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "எங்கள் கட்சி சமூக நீதியை நம்புகிறது. நான் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவன். எங்கள் சமூகத்தில் நாங்கள் பல இன்னல்களைச் சந்தித்தோம். இதற்காகத்தான் திராவிடக் கட்சிகள் இடஒதுக்கீடு கேட்டுப் போராடின. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஏற்கெனவே பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. பிறகு எதற்குத் தனியாக 10 சதவிகித இடஒதுக்கீடு. அப்படியென்றால், ஏற்கெனவே உள்ள திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது" எனக் கொந்தளித்தார். தம்பிதுரையின் பேச்சு, பா.ஜ.க வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமையும் என தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில், பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என தம்பிதுரை கூறியிருந்தார். "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தின்படி நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். தேர்தல் வியூகம், கூட்டணி எவ்வாறு அமைய வேண்டும் என்றால் ஜெயலலிதா கடைபிடித்த அதே நிலை தொடரும்" எனவும் தம்பிதுரை கூறியிருந்தார். இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என தம்பிதுரை கூறுகிறார். கூட்டணி இல்லை எனக் கூறுவதற்கு தம்பிதுரைக்கு அ.தி.மு.க-வில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை" என்றார்.

தம்பிதுரை, பொன்னார் மோதல் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், "தம்பிதுரைக்கு அதிகாரம் இருக்கிறதா எனக் கேட்கிறார் பொன்னார். அதேபோல், பா.ஜ.க யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதையும் பொன்னார் தீர்மானித்துவிட முடியாது. அ.தி.மு.க கூட்டணியை பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் சிலரும் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. இந்தக் கருத்தை நிர்மலா சீதாராமனும் உறுதி செய்துவிட்டார். இதைப் பற்றி தமிழக அமைச்சர்களிடம் பேசிய டெல்லி பிரதிநிதி ஒருவர், `இருவரும் கூட்டணி சேர்ந்தால் மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, தமிழ்நாடு தேர்தலில் எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் பா.ஜ.க எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு மாநில பா.ஜ.க தவறிவிட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே 2004 தேர்தலில் நமக்கு நெகட்டிவ் ரிசல்ட்தான் கிடைத்தது. 

இப்போது சூழல்கள் சரியில்லை. நாம் தனித்தனியாக நிற்பதே நல்லது. நீங்கள் அதிகப்படியான இடங்களை வென்றாலும், ஸ்டாலின் இருக்கக் கூடிய அணிக்கு நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்பது தெரியும். தி.மு.க, காங்கிரஸ் அணிக்கு 40 இடங்களும் வந்துவிடக் கூடாது என்பதுதான் டெல்லி பா.ஜ.க-வின் முடிவு. கூட்டணி இல்லாமல் இது சாத்தியப்பட்டால் வரவேற்போம். மேக்கேதாட்டூ விவகாரத்தில் நீங்கள் எதிர்ப்பு காட்டுவதன் மூலம் கர்நாடகாவில் எங்கள் செல்வாக்கு உயரும். தமிழ்நாடு தேர்தலை எங்கள் ஸ்டைலில் பார்த்துக் கொள்கிறோம். தேர்தலில் தனித்து நின்று ஜெயிக்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்கள். அ.தி.மு.க வாக்குகளோடு சேர்த்து மோடி எதிர்ப்பு வாக்குகளையும் நீங்கள் கைப்பற்றுவதும்தான் தி.மு.க அணிக்கு பலவீனத்தைக் கொடுக்கும். இதனை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்' எனக் கூறியிருக்கிறார். 

முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்திலும் தம்பிதுரையின் கருத்துதான் எடப்பாடி பழனிசாமியின் கருத்தும். இப்படியொரு கூட்டணி அமைய வேண்டும் என தமிழிசையும் பொன்னாரும் விரும்புகின்றனர். `தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குப் பத்து எம்.பிக்களாவது குறைய வேண்டும்' என தமிழிசை நினைக்கிறார். டெல்லி மேலிட பொறுப்பாளர்களின் கருத்தைத்தான் மோடியும் எதிரொலிப்பார். அதுவரையில் தனக்கான அரசியலை தமிழிசை செய்து வருவார்" என்றார் நிதானமாக.

பின் செல்ல