Published:Updated:

மு.க.ஸ்டாலினின் கிராமசபைக் கூட்ட அரசியல் எடுபடுமா...?

"நாடாளுமன்றத்தில் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களில் மக்களவை உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ராஜ்யசபா உறுப்பினர்களை எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்கிறார்கள். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது கிராம மக்களாகிய நீங்கள்தான்."

மு.க.ஸ்டாலினின் கிராமசபைக் கூட்ட அரசியல் எடுபடுமா...?
மு.க.ஸ்டாலினின் கிராமசபைக் கூட்ட அரசியல் எடுபடுமா...?

ருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றார், மு.க. ஸ்டாலின். கருணாநிதியால் அதிக பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க முடியாத சூழலில், 2016-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தலைச் சந்தித்தது, தி.மு.க. ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர பிரசாரத்தால், தமிழகச் சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க. உருவெடுத்தது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், காலியான ஆர்.கே. நகர்த் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன், டெபாசிட் தொகையையும் இழந்தது கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு ஆளுங்கட்சி தவிர, ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், கஜா புயல் நிவாரணம் திருவாரூர் மாவட்டத்துக்கு முழுமையாகச் சென்றடையாததாலும் இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் ஆளுங்கட்சிக்குச் சற்றே நெருடல் இருந்து வந்தது. தி.மு.க-வும், தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்.

இந்தச் சூழலில் திருவாரூர் உட்பட அடுத்து எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், தி.மு.க-வை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அவர் கவனமாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அதன் ஒரு நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, வாக்குகளைச் சேகரிக்கும் யுக்தியை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஏற்கெனவே இதுபோன்ற கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்கள் பிரச்னைகளைக் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், திருவாரூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன், தி.மு.க-வை மக்கள் விரும்புகிறார்கள் என்று பேசியுள்ளார்.

பிப்ரவரி மாதம் 17-ம் தேதிவரை நடைபெறவுள்ள கிராம ஊராட்சி சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய ஸ்டாலின், ``நான் ஒரு கோயிலுக்கு வந்ததைப் போன்று உணர்கிறேன். `கிராமம்தான் கோயில்' என்றார் மகாத்மா காந்தி. அரசியலே இதுபோன்ற  கிராமங்களில்தான் உருவாகியுள்ளது. கிராமங்கள்தான் நாட்டின் உயிர்நாடி.

நாடாளுமன்றத்தில் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களில் மக்களவை உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ராஜ்யசபா உறுப்பினர்களை எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்கிறார்கள். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது கிராம மக்களாகிய நீங்கள்தான். 

தற்போது மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஆட்சியைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். எதிர்வரும் தேர்தலில் யாரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று நீங்கள் உறுதியான முடிவெடுக்க வேண்டும். முன்பெல்லாம் கிராம சபைக் கூட்டங்களில் குடவோலை மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பர். 

அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் வரலாம். இதற்கிடையே இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலும் வரவிருக்கிறது. எனவே, சரியான மக்கள் பிரதிநிதியைத் தேர்தெடுக்க வேண்டியது உங்கள் கடமை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்தார் மு.க.ஸ்டாலின். இந்தச் சூழலில் சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலுடனே சேர்த்தே நடைபெறலாம் என்று தெரிவித்து, சட்டசபைத் தேர்தலுக்கும் தி.மு.க. தயார் என்பதை உணர்த்தியுள்ளார், அவர்.

கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பதால் மட்டுமே தி.மு.க-வின் வெற்றி உறுதியாகி விடுமா என்பதும் கேள்விக்குறிதான். தேர்தலைச் சந்திக்க தி.மு.க. நிர்வாகிகள் தயாராக இருந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களா, மாவட்ட அளவில் உட்கட்சிப் பூசல்கள் எந்தளவில் உள்ளன, அழகிரி என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பன போன்ற காரணிகள் மற்றும் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வியூகம், அ.தி.மு.க, அ.ம.மு.க எடுக்கும் நிலைப்பாடு போன்றவற்றைப் பொறுத்தே தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பு உறுதிசெய்யப்படும்.

எனவே, ஸ்டாலினின் இந்தக் கிராமசபைக் கூட்ட அரசியல் எடுபடுமா என்பது போகப்போகத்தான் தெரியவரும்!