Published:Updated:

சி.பி.ஐ. இயக்குநர் பிரச்னையில் இதுவரை நடந்தது என்ன? #VikatanInfographics

ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டின் மீது அலோக் வர்மா ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அலோக் வர்மாவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் அனைத்துத் தரப்பினராலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.ஐ. இயக்குநர் பிரச்னையில் இதுவரை நடந்தது என்ன? #VikatanInfographics
சி.பி.ஐ. இயக்குநர் பிரச்னையில் இதுவரை நடந்தது என்ன? #VikatanInfographics

சி.பி.ஐ இயக்குநரான அலோக் வர்மாவைப் பதவியிலிருந்து நீக்கி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவை எதிர்த்து, அவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் அரங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, மத்திய அரசுக்கு இப்போது மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே கடந்த சில காலமாகவே சர்ச்சைகள் நீடித்து வந்தன. சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானாவை மத்திய அரசு, அலோக் வர்மாவின் எதிர்ப்பையும் மீறி நியமனம் செய்தது. 2014-ம் ஆண்டு பி.ஜே.பி. அரசு, மத்தியில் ஆட்சி அமைத்த பின்னர் முக்கியமான பொறுப்புகளில் குஜராத் கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிப்பது தொடர்கதையானது. அந்த வரிசையில்தான் பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.

சி.பி.ஐ-யின் மூத்த இரண்டு அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்ததாகவும், இது சி.பி.ஐ-யின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது என்றும் கூறி, கடந்த அக்டோபர் 24-ம் தேதி அதிகாலை அவர்கள் இருவரையும் பணியில் இருந்து விடுவித்த மத்திய அரசு, நிரந்தர விடுப்பில் அனுப்பி வைத்தது. மேலும், நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இரண்டு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியால் வந்த சிக்கல் எனக் கூறப்பட்டாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நேரடித் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. பொதுவாகப் பிரதமர் தலைமையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய சிறப்பு நியமனக்குழுவின் மூலம் நியமிக்கப்படும் சி.பி.ஐ. இயக்குநரை மத்திய அரசு தன்னிச்சையாக பதவியிலிருந்து நீக்க முடியாது என்பதே வழக்கின் முக்கியமான வாதமாக இருந்தது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், பணியிலிருந்து விடுவிக்கச் சிறப்பு நியமனக்குழுவின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. இரண்டு மாத கால நீண்ட விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

இந்த நிலையில், சி.பி.ஐ வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் அலோக் வர்மாவை விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது எனக்கூறி மீண்டும் அவரை பதவியில் அமர்த்தி உத்தரவிட்டது. மேலும், வர்மா மீதான நடவடிக்கையைப் பிரதமர் தலைமையிலான சிறப்பு நியமனக்குழு ஒரு வாரத்துக்குள் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. ராகேஷ் அஸ்தானாவின் பணி விடுவிப்பு பற்றி உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பையும் கூறவில்லை. 

சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை, ஆளுங்கட்சியினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. உச்ச நீதிமன்றத்தால் 'கூண்டுப்பறவை' என விமர்சிக்கப்பட்ட சி.பி.ஐ. தற்போது உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருப்பதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, சர்ச்சைகளுக்கு முடிவு கட்டினாலும் சி.பி.ஐ மீதான நம்பகத்தன்மையை மீட்பது என்பது மிகக் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்துடன் அலோக் வர்மா ஓய்வுபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தாமதமான தீர்ப்பாக இது பார்க்கப்பட்டாலும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது. ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டின் மீது அலோக் வர்மா ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அலோக் வர்மாவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் அனைத்து தரப்பினராலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் எதிர்க்கட்சிகளுக்கு இந்தத் தீர்ப்பு மேலும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்த சி.பி.ஐ சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

இதனிடையே தற்போது அலோக் வர்மாவை நீக்கப் நியமனக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நியமனக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.